
Date: 18 FEBRUARY 2018
Time uploaded in London- 6-43 am
Compiled by S NAGARAJAN
Post No. 4757
PICTURES ARE TAKEN from various sources.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாரதி போற்றி ஆயிரம் – 55
பாடல்கள் 377 முதல் 386
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்
பாரதி பத்துப்பாட்டு
தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.
முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி
11 முதல் 20 வரை உள்ள பாடல்கள்
ஒல்காப் புகழ்நிறை தொல்காப்பியன் – தந்த
ஒப்பிலா பொருளிலக் கணம்போல
நல்கிய வர்இந்த நானிலத்தில் – எந்த
நாளிலும் எங்குமே இருந்ததில்லை
சரித்திரம் தமிழில் இல்லையென்றே – இங்கு
சாற்றிடு வோர்சங்க இலக்கியத்தை
செறிவுற ஆய்ந்தால் போதுமன்றோ – புறம்
செய்யவர லாற்றினைக் கூறுமன்றோ?
குறிஞ்சி முல்லை மருதமுடன் – நதி
கூடும் கடல்சார் நெய்தலுடன்
எரிக்கும் பாலை நிலத்தினிலும் – அகம்
எரிக்கும் காதல் கவிசொன்னார்
வான்புகழ் தனக்கென வடித்திட்ட – அந்த
வள்ளுவன் குறளுக்கு இணையேது?
நான்மகிழ் நாலடி யார்முதலாய் அன்று
நவில்கீழ்க் கணக்கிற்கு ஈடேது?
எத்தனை அணிகளை யான்பெறினும் – சேரன்
இளங்கோ சிலம்பினுக்கு ஒப்பேது?
அத்துடன் இரட்டைக் காப்பியமாய் – சாத்தனார்
அளித்த மேகலைபோல் அழகேது?
நமதரும் சைவத் திருமுறைகள் – மால்
நலமுரை திவ்வியப் பிரபந்தங்கள்
சமயமெனும் நதிகள் பலவாயினும் – அலை
சங்கமித் தல்தமிழ்ச் சமுத்திரத்தில்
கம்பனாய் வந்ததே நானல்லவா? – அவன்
காவியமே எந்தன் வடிவல்லவா?
செம்மையாய் ஓர்கவிதை படித்திடினும் – எந்தன்
சிறப்பனைத்தும் அதில் தோன்றுமன்றோ?
இறைவனின் முக்கண்கள் என்றிடவே – சேக்கிழார்
இயம்பிய பெரிய புராணமோடு
நிறைவான கந்த புராணமுடன் – புகழ்
நிலவுதிரு விளையாடல் யான் கொண்டேன்
ஒட்டக்கூத் தன்தந்த உலாக்களில் – மனம்
ஒன்றிநான் நாடெங்கும் வலம்வந்தேன்
திட்பமுடன் அருணகிரி பாடித்தந்த – அரிய
திருப்புகழ் சந்தத்தில் நடம்புரிந்தேன்
வெண்பாவில் புகழேந்தி காவியமுடன் – உயர்
வில்லியின் பாரதம் தனைப்பெற்றேன்
பண்பாக செயங்கொண்டான் குமரகுருபரன் – இன்னும்
பல்புலவர் பாடலிலே மகிழ்ந்திருந்தேன்
- பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்
தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி.
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் :

பாரதியை வாசிக்கிறேன் என்று சொல்வதை விட பாரதியை சுவாசிக்கிறேன் என்று சொல்லும் எண்ணற்ற அன்பர்களில் தன்னையும் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்த அரும் கவிஞர் பாரதியை வழிகாட்டியாகக் கொண்டு கவிதை புனையத் தொடங்கியவர்.
2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.
கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்
இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.
இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.
பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.
நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன் ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.
ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.
சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.
இவர் சொற்பொழிவு நிகழ்த்தாத தலங்களே இல்லை என்று சொல்லுமளவு பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.
பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.
இவருக்கு நமது நன்றி.
இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069
சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/
பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069
நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.
****