
Date: 21 FEBRUARY 2018
Time uploaded in London- 5-18 am
Written by S NAGARAJAN
Post No. 4769
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் எட்டாவது உரை
- ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள்
ச.நாகராஜன்
நெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்குச் சென்ற பெருமையைப் பெற்றவர் இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் (Wubbo Johannes Ochkels )
யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு இவர் விண்வெளிக்குப் பயணமானார்.
இவர் தனது மறைவிற்கு முன்னர் நீட்டித்த ஆற்றல் தீர்வுகள் பற்றி ஒரு கடிதத்தை உலகத்தினருக்கு எழுதினார்.
அதில்,சமாதானத்துடன் ஒரே மனதைக் கொண்ட, சண்டை இல்லாத மனித குல எழுச்சிக்காக அறைகூவுகிறார் ஓகெல்ஸ்.
விண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய ஆன்மீக அனுபவம் ஏற்பட்டு நல்ல புதிய சிந்தனைகள் மலர்ந்தன.
அருமையான மனைவி, குழந்தைகள், பேரப் பிள்ளைகள் என நல்ல வாழ்வு வாழ்ந்த அவருக்கு 2005ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. ஒருவழியாக மீண்டார்.
ஆனால் 2013, மே மாதம் அவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு இரண்டு வருடம் என்று “நாள் குறித்து” விட்டனர்.
2014, மே மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த அவர் இறப்பதற்கு முதல் நாள் மருத்துவ மனையில் படுத்திருந்தபடியே தொலைக்காட்சி ஒன்றிற்குத்
தனது கடைசி பேட்டியை அளித்தார். உணர்ச்சி ததும்ப மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அனைத்து சக்தியையும் ஒருங்கிணைத்து, சக்தி வாய்ந்த தனது பேச்சில் அவர் உலகினரிடம், இந்த பூமி மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றும் அதை எப்படியேனும் காக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டிக் கொண்டார்.

“ இது ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லை.” என்றார் அவர்.
தனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்,” நம்முடைய பூமி கான்ஸரினால் பீடிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு கான்ஸர் உள்ளது. மக்களில் ஏராளமானோர் கான்ஸரினால் இறக்கின்றனர். என்றாலும், மனித குலம் எப்போதும் நீடித்து இருக்கப் போதுமான அளவு மனிதர்கள் உள்ளனர்.
நாம் நமக்கே சொந்தமான நமது பூமியைக் காக்க வேண்டும்.” என்றார் அவர்.
“உற்சாகமும் ஆர்வமும் உள்ளொளியும் அணுகுமுறையும் இருக்கும்போது மற்றவர்கள் நேசிக்க முடியாத அளவிற்கு பூமியை நீங்கள் நேசிக்க ஆரம்பிப்பீர்கள். ஒன்றை உளமார நேசிக் ஆரம்பித்து விட்டால் அதை விட உங்களுக்கு மனமே வராது.” என்று அவர் உருக்கமாகக் கூறினார்.
அவரது தொலைக்காட்சி பேட்டியைக் கண்டோர் நெகிழ்ந்து உருகியதில் அதிசயமே இல்லை.
7 நாட்கள் 44 நிமிடங்கள் விண்வெளியில் பறந்த வீரர் மண்ணில் வாழும் மாந்தருக்குக் கூறிய அறிவுரைகளும் புதிய சிந்தனைக் கருத்துக்களும் வளமானவை; வரவேற்கப்பட வேண்டியவை; வாழ்ந்து காட்டப்பட வேண்டியவை!
***