மயிர் நீப்பின் வாழாக் கவரி மான்! (Post No.4800)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 6-37 AM

 

Post No. 4800

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

 

வள்ளுவனும் சாணக்கியனும் ஒரே கருத்தை பல உவமைகளால் அழகுபட வர்ணிப்பது பாரதீய சிந்தனைப் போக்கு — தென் குமரி முதல் வட இமயம் வரை ஒன்றே — இன்றும் அன்றும் ஒன்றே– என்பதைக் காட்டி நிற்கிறது. இதோ மேலும் சில அரிய கருத்துக்கள்.

 

மானம் இல்லாமல் வாழ்வதை விட சாவதே மேல் என்பதில் இருவரும் ஒரே குரலில் பேசுகின்றனர். தற்காலத்தில் தற்கொலைகளை ஆதரிப்பதில்லை. ஆனால் முக்காலத்தில் மானம் போனால் உயிர் போச்சு என்று கருதினர். கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் தண்ணீர் கொண்டுவர தாமதித்தவுடன், சிறைச்சாலையில் உயிர் நீத்த சம்பவத்தைக் கண்டோம்.

 

இதோ சாணக்கியன் கூற்று:-

 

வரம் ப்ராண பரித்யாகோ மானபங்கேன ஜீவனாத்

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம் மானபங்கே தினே தினே

சாணக்கிய நீதி 16-16

 

அவமானத்துடன் வாழ்வதை விட இறப்பதே மேல்; சாகும்போது அந்த நேரத்தில் மட்டுமே வலிக்கும்; அவமானத்துடன் வாழ்ந்தாலோ தினமும் துயரம்தான்.

 

இதோ வள்ளுவன் இயம்புவது:–

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா  அன்னார்

உயிர்நீப்பின் மானம் வரின் (குறள் 969)

 

உடம்பில் இருந்து ஒரு முடி நீங்கினாலும், கவரி மான் உயிரிழந்து விடும்;

அதுபோல மானம் போகுமாயின், உயிரையே விட்டு விடுவர் (உயர்ந்தோர்).

 

xxxx

கனியிருப்பக் காய் கவர்வது ஏனோ?

 

இனிய சொற்களைச் சொன்னால் எல்லோருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது;

ஆகையால் ஒருவர் அதைத்தான் பயன்படுத்த வேண்டும்;

பின்னர் ஏன் இனிய சொற்களை இயம்புவதில் கருமித்தனம்?

 

ப்ரிய வாக்யப் ப்ரதானேன ஸர்வே துஷ்யந்தி ஜந்தவஹ

தஸ்மாத்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா

சாணக்கிய நீதி – 16-17

இதோ வள்ளுவன் செப்புவது:-

 

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவது (குறள் 99)

 

இனிய சொற்கள் இன்பம் தருவதைக் கண்ணால் கண்ட  பின்னும், ஒருவன் கடுஞ் சொற்களைப் பயன்படுத்துவது ஏனோ!

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள் 100)

 

நல்ல பழம் இருக்கும்போது யாராவது புளிச்சுக் கொட்டும் காய்களைத் தின்பார்களா?  இன்பம் பயக்கும் இனிய சொற்கள் இருக்கையில் கடும் சொற்களைப் பயன் படுத்துவானா?

 

ப்ரஸ்தாவஸத்ருசம் வாக்யம் ப்ரபாவஸத்ருசம் ப்ரியம்

ஆத்மசக்திஸமம் கோபம் யோ ஜானாதி ஸ பண்டிதஹ

சாணக்கிய நீதி 14-15

ஒருவன்  தன் புகழுக்கேற்ற இனிய சொற்களையும், இடத்துக்கு ஏற்ற காலத்துக்கேற்ற சொற்களையும், தன் வலிமைக்கு ஏற்ற கோபத்தையும் கொண்டிருந்தால் அவன் புத்திசாலி

 

xxxx

யாகாவா ராயினும் நாகாக்க

 

யதீச்சஸி வசே கர்தும் ஜகத் ஏகேன கர்மணா

பராபவாதஸஸ்யேப்யோ காம் சரந்தீர் நிவாரய

சாணக்கிய நீதி 14-14

ஒரே செயல் மூலம் உலகை வெல்ல ஆசையா? மற்றவர்களைக் குறை சொல்லாதபடி நாக்கை அடக்குங்கள். ( உலகே உங்கள் வசமாகிவிடும்)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

 

எதை அடக்காவிட்டாலும் நாவை (பேச்சு)/ நாக்கை அடக்குங்கள்; அல்லது சொன்ன சொல்லே பெரும் துன்பத்த உண்டாக்கும்.

 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர் (711)

அவைக்கு ஏற்ற சொற்களைச் சொல்லுக; அந்தச் சொற்களின் ஆழத்தையும் தாக்கத்தையும் அறிந்து பேசுக

 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)

 

சொல்ல வந்த விஷயங்களை  இனிதாக, அழகாகத் தொகுத்துக் கூறும் ஒருவனுடைய சொல்லைக் கேட்டு உலகமே அதன்படி உடனே செயல்படும்

 

xxx

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி 

 

யதா கனன் கனித்ரேண பூதலே நிந்ததி

ததா குருகதாம் வித்யாம் சுஸ்ருஷுர் அதி கச்சதி

சாணக்கிய நீதி   13-16

ஒருவன் நிலத்தடி நீரை எப்படி மண்வெட்டி, கோடரி மூலம் தோண்டி எடுக்கிறானோ, அதே போல ஆசிரியரிடம் உள்ள அரிய செல்வத்தை மாணவன் (கேள்விக் கணைகளால் தோண்டி) எடுத்துக் கொள்ளவேண்டும்

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு – குறள் 396

 

மணலைத் தோண்டி இறைக்க இறைக்க நீர் சுரந்து கொண்டே இருக்கும்; அதுபோல கற்கக் கற்க அறிவு வளரும்

 

 

xxxx

தலை விதி துரத்தி அடிக்கும்

யதா தேனுஸ்ஹஸ்ரேஷு வத்ஸோ கச்சதி மாதரம்

ததா யச்ச க்ருதம் கர்ம கர்தாரம் அனுகச்சதி

13-14

 

ஆயிரம் பசுமாடுகள் இருந்தாலும் அதனதன் கன்றுக்குட்டி எப்படி அதன் தாயாரிடம் செல்கிறதோ அப்படியே அவனவன் செய்த கர்ம வினை அவனிடம் வந்து சேரும்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந்   தான்முந்  துறும் (380)

 

விதியைவிட வலியது உண்டா? விதியை மாற்ற ஒரு வழி கண்டு பிடித்தாலும் அங்கும் அதுதான் முன்னே நிற்கும்

 

xxx

Rain water used in Thiruppullani; Facebook picture.

நீர் இன்றி

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் ஸுபாஷிதம்

மூடைஹி பாஷாணகண்டேஷு ரத்ன ஸம்க்ஞா விதீயதே

14-1

 

 

பூவுலகில் மூன்று ரத்தினங்கள் உள; தண்ணீர், உணவு, சான்றோரின் பொன்மொழிகள்; இதை அறியாத மூடர்கள் கற்களை ரத்தினம் என்று சொல்கின்றனர். (அதாவது உண்மையான ரத்னக் கற்களைவிட இவை மூன்றும் உயர்ந்தவை)

 

 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு (20)

நீர் இல்லாமல் வாழ முடியாது; மழை இல்லாவிடில் தர்ம நியாம் இராது.

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூவும் மழை (12)

உணவை உண்டாக்குவது மழை நீர்; உணவை உண்பார்க்குத் தானும் உணவு ஆவது மழை நீர்.

வள்ளுவன் வாழ்க! சாணக்கியன் வாழ்க!

 

–சுபம், சுபம்—

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு அயோக்கியர்களையும் எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

 

 

Leave a comment

Leave a comment