
Date: MARCH 4, 2018
Time uploaded in London- 6-51 am
COMPILED by S NAGARAJAN
Post No. 4806
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாரதி போற்றி ஆயிரம் – 61
பாடல்கள் 430 முதல் 441
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது
இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி
19 முதல் 30 வரை உள்ள பாடல்கள்
மூவர்ணம் கொண்டயென் கொடிபோ லென்றும்
முக்கொள்கை இந்தியா இதழின் மூச்சாய்
மேவரும் சுதந்திரம் தன்னோ பாங்கு
மேன்மையுள சமத்துவம் சகோத ரத்வம்
ஆவலுற ஏற்றதனை நடத்த லானாய்
அச்சமுற் றிருந்தோர்க்கு வலிமை தந்தாய்
எவருளர் எனைத்தடுக்க எனத்து ணிந்தே
எழுச்சிமிகு விடுதலைக் கவிகள் வார்த்தாய்
கவிமட்டும் போதாமல் களமும் கண்டாய்
கடற்கரையில் பலகூட்டம் நடத்த லானாய்
செவிமடுக்க வந்தோரின் உடல்கொ திக்க
செந்தணலாய்ப் பாடல்களைப் பாடச் செய்தாய்
நவில்விபின் சந்திரரை அழைத்து வந்தாய்
நாடும்போ ராட்டமெல்லாம் பங்கு கொண்டாய்
எவர்பேச வரினுமதில் உந்தன் பாட்டு
இல்லாமல் கூட்டமில்லை எனும்பேர் கொண்டாய்
ஆரவார முடனுலகை ஆட்சி செய்த
ஆங்கிலப் பேரரசே மிரட்சி கொண்டு
பாரதியார் பாட்டொன்றௌக் கேட்டு விட்டால்
பாரினிலே பிணங்கூட உயிர்த் தெழுந்து
வீரமுடன் விடுதலைப் போர்தொ டுக்கும்
விரைவாக சுதந்திரத்தை மீட்கக் கூடும்
தீரமுள அவர்பாட்டைப் பாடல் தேசத்
துரோகமென சட்டமே இயற்றிட் டாரே!
இந்தியா பத்திரிகை வீழ்ந்திட்டால்தான்
இந்தியாவில் நாம்வாழ்தல் இயலும் என்றே
சிந்தித்த ஆங்கில ஆதிக் கம்தான்
சீறியதை அழித்திடற் காக வென்றே
விந்தையச்சுச் சட்டத்தைக் கொண்டு வந்து
விரைவாகச் செயல்படுத்தி நசுக்கி விட்டார்
அந்தநாள் அன்றாங்கு நின்ற துந்தன்
அரியஇத ழல்லஉந்தன் மூச்சை யன்றோ?
இனியும் பிரிட்டிஷ் ஆதிக் கத்தில்
இருப்பது சரிதானா? – அதனால்
எதையும் செய்திட இயலா நிலைமை
ஏற்படல் முறைதானா?
தனியே சிலநாள் மறைந்தே பணிகளைத்
தொடர்வதில் தவறேது? – இப்படித்
தலைமறைவாகுதல் கோழைத் தனமென
தாழ்வுற லாகாது
அந்தநாள் ராமன் தருமன் கூட
அடவி புகுந்தாரே – எனினும்
அற்புதச் செயல்கள் பலவும் புரிந்து
அரும்புகழ் கொண்டாரே …
இந்நாள் நீயும் வனவா சமென
இருப்பாய் புதுவையிலே – என்றே
இயம்பிய தோழர்கள் கருத்தினை ஆய்ந்தே
ஏற்றாய் தெளிவுறவே
அவ்வித மாங்கே சென்றபின்னும்
அந்நியர் கொடுமை தொடர்ந்ததுவே
எவ்வித மெங்கே சென்றாலும்
எங்கும் நிழல்போல் வந்த னரே..
பற்றின கால்களை வறுமையெனும்
பாம்புக ளென்றே தவிக்கையில்
ஒற்றர்கள் என்னும் கழுகுகளோ
உந்தன் தலைமேல் சுற்றினவே
தலக்கு வரல்தலைப் பாகையுடன்
தான்போ யிற்றெனும் பழமொழிதான்
நிலைக்க உந்தன் தலைப்பாகை
நிரூபித் ததுவே பலமுறை தான்..
எதுவரி னுஞ்சிறு கலக்கமின்றி
இலக்கியப் பணிகளை நீபுரிந்தாய்
புதுவை வாழ்வினில் தானேநீ
புதுமைப் படைப்புகள் பலதந்தாய்..
அரவிந்தருன் வ.வே.சு
அய்யர் வந்தே இணைந்தாரே
உரமாய் சுதந்திர உணர்வலைகள்
ஓயா மலதில் திளைத்தீரே
கடலுக்கடியில் ஒளிந்திருந்த
கனலென மறைந்தே இருந்தாயே
வடமு காக்கினி தீப்போல
வெளிப்பட் டொருநாள் எழுந்தாயே …
பாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்
தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி
2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.
கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்
பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/
பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069
நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.
****