
Written by London Swaminathan
Date: 16 MARCH 2018
Time uploaded in London – 5-50 am
Post No. 4821
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
தமிழ்ப் பழமொழிகளும் சாணக்கிய நீதியும்
இருபதாயிரத்துக்கும் மேலான தமிழ்ப் பழமொழிகள் உள்ளன. இந்தப் பழமொழிகளில் பல, பாரதம் முழுதும் உள. அவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால் இமயம் முதல் குமரி வரை நம்பிக்கைகள் ஒன்றே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.
இதோ! 2300 ஆண்டுப் பழமையான சாணக்கிய நீதியின் ஸ்லோகங்களும் இணையான பழமொழிகளும்

அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே என்பது தமிழ்ப் பழமொழி.
முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே- என்று அப்பர் பெருமான் தேவாரம் நாலாம் திருமுறையில் பாடுகிறார். புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைவிட கையில் இருக்கும் ஒரு பறவை மேல் A bird in hand is better than two in the bush என்பது ஆங்கிலப் பழமொழி. ‘உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா’ என்றும் ‘கையில் வெண்ணை இருக்க நெய்யிற்கு அலைவானேன்’ என்றும், ‘உள்ளங்கையில் தேனை வைத்துக் கொண்டு புறங்கையை நக்கினாற் போல’ என்றும் தமிழில் செப்புவர்.
யோ த்ருவாணி பரித்யஜ்ய ஹ்யத்ருவம் பரிஷேவதே
த்ருவாணி தஸ்ய நஸ்யதி ஹ்யத்ருவம் நஷ்டமேவ ஹி
-சாணக்கிய நீதி 1-13
பொருள்:
உறுதியான ஒன்றை விட்டு விட்டு உறுதியற்ற- நிச்சயமற்ற- பொருளை நாடுபவன், இருக்கும் ஒன்றையும் இழந்து விடுவான்; இல்லாத பொருள் கிடைக்காது என்பது ஏற்கனவே அறிந்த விஷயம்.
xxx

சிறு துளி பெரு வெள்ளம்
ஜல பிந்து நிபாதேன க்ரமசஹ பூர்யதே கடஹ
ஸ ஹேதுஹு ஸர்வ வித்யானாம் தர்மஸ்ய ச தனஸ்ய ச
12-21
பொருள்:
“சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் விழுந்தாலும் ஒரு பானை நிரம்பி விடும். இதுதான் மிகப் பெரிய ரஹஸியம் — செல்வம் சேர்வதும் இப்படித்தான், தர்மம் வளருவதும் இப்படித்தான்”.
எதிலுமே சிறுகச் சிறுக சேர்வது பின்னர் பெரும் கடல் போலப் பெருகிவிடும். பல ஓடைகளின் நீர் சேர்ந்து, நதிகளாகப் பெருகி சமுத்திரத்தை உண்டாக்குகின்றன. இயற்கையும் கூட நமக்கு கற்பிப்பது இந்த ரஹஸியமே!
xxx
மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி

யதா ராஜா ததா ப்ரஜாஹா (As the Ruler, So the Ruled) என்பது ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இணையான பழமொழி. பகவத் கீதையில் கண்ண பிரானும் ‘பெரியவர்கள் எதைச் செய்கிறார்களோ பொது மக்களும் அதையே செய்வர் (3-21) என்று சொல்லுவார்.
சாணக்கியன் நுவல்வதும் அஃதே!
ராக்ஞி தர்மிணி தர்மிஷ்டாஹா பாபே பாபாஹா ஸமே ஸமாஹா
ராஜானம் அனுவர்தந்தே யதா ராஜா ததா ப்ரஜாஹா- 13-7
பொருள்
அரசன் நேர்மையாளனாக இருந்தால் மக்களும் அப்படியே இருப்பர்; அவன் பாபம் செய்தால், மக்களும் பாவம் செய்வர்; அவன் நடு வழியில் சென்றால் அவர்களும் நடு வழியில் செல்லுவர்; மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.- 13-7
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி – என்பதைப் பொது வாழ்விலும் காணலாம். ஆட்சியாளர்களே ஊழல் செய்தால் மக்களும் கெட்டுப் போவார்கள்
xxx
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு – என்று பாடினான் சொற்தேரின் சாரதியாம் பாரதி.
ஒற்றுமையே உயர்வு என்பதற்குப் பல கதைகளை பஞ்ச தந்திரம் ‘மித்ர பேதம்’ என்னும் பிரிவில் எடுத்துரைக்கும்
சாணக்கியன் மொழிவதும் அஃதே!
பஹூனாம் சைவ ஸத்வானாம் ஸமவாயோ ரிபுஞ்ஜயஹ
வர்ஷதாஅதரோ மேகஸ்த்ருணரபி நிதார்யதே
14-4
பல கைகள் ஒன்று சேர்ந்தால், எதிரிகளை வென்று விடலாம்; வைக்கோலைச் சேர்த்துக் கட்டிய பாயும் பெரு மழையைத் தடுக்கவில்லையா!
xxx
குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு

குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து பிள்ளைகளையும் மனைவியையும் அடிக்கும் குடிகாரனை எல்லோரும் கண்டித்தவுடன் நாளை முதல் குடிக்க மாட்டேன் இது சத்தியம் என்பான்; ஆனால் மறு நாளே குடிக்கச் செல்லுவான். குடி போதையில் இருக்கும் போது மனைவியைப் பார்த்து உனக்கு தங்கச் சங்கிலி, வைர நெக்லஸ் வாங்கித் தருவேன் என்பான். காலையில் எழுந்தவுடன் — குடி போதை தெளிந்தவுடன் கதையே மாறிவிடும்.
இதே போலத்தான் ஸ்மசான வைராக்யம்– சுடுகாட்டு சபதம்-
யாராவது நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்தவுடன், அடடா! வாழ்க்கையே அநித்யமானது- உடனே நல்லது செய்துவிட வேண்டும்- கெட்ட வழியில் செல்லக்கூடாது- செல்ல மாட்டேன் என்று மனைதுக்குள் சபதம் செய்வர். பத்து நாள் சென்ற பின்னர் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்று ஆரம்பித்து விடுவர். இதை ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் – உள்ளிப்பூண்டு வைத்த பாத்திரத்துடன் ஒப்பிடுவார். அந்த வாடை என்றுமே போகாது
இதோ சாணக்கியன் சொல்
தர்மாக்யானே ஸ்மசானே ச ரோகிணாம் யா மதிர்பவேத்
ஸ ஸர்வதைவ திஷ்டேச்சேத் கோ ந முச்யேத் பந்தனாத்
14-6
பொருள்
ஒரு சமயச் சொற்பொழிவினைக் கேட்கும் நோயாளி மனதில் ஓடும் எண்ணங்களும், சுடுகாட்டில் இரங்கல் தெரிவிக்கும்போது மனதில் ஓடும் எண்ணங்களும் நிலையாக மனதில் தங்கிவிட்டால் எல்லோரும் பற்றற்றான் பற்றினைப் பற்றிவிடுவரே! பந்தங்கள் அறுபட்டு மோட்ச சாம்ராஜ்யத்துக்குச் சென்று விடுவது எளிதாகி விடுமே!
xxx

விநாச காலே விபரீத புத்தி
விதி கெட்டுப் போனால்
மதி கெட்டுப் போகும்
ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ
ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ
ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய
விநாச காலே விபரீத புத்திஹி
-சாணக்கிய நீதி, அத்யாயம் 16, ஸ்லோகம் 5
பொருள்:
உலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை; யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது புத்தி பேதலித்து விடும்.”
(தங்க நிற மான் ஒன்றைப் பார்த்து சீதா தேவி ஆசைப்பட்டதால், ராமாயணம் என்னும் கதை வளர்ந்தது பற்றிய குறிப்பு இது )
–Subham—
(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)