
Written by London Swaminathan
Date: 25 MARCH 2018
Time uploaded in London – 7-11 am
Post No. 4849
Pictures shown here are taken by london swaminathan
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

வடலூர் வள்ளலாரின் சத்ய ஞான சபைக்கு விஜயம்
சமீபத்தில் மார்ச் முதல் வாரத்தில் (2018) திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனத்துக்குச் சென்றபோது அங்கு வாங்கிய மலரில் ஒரு சுவையான சம்பவத்தைப் படித்தேன்.
சுவாமி ஞானானந்தா சுமார் 150 ஆண்டு வயது வரை வாழ்ந்ததவர். ஆனால் அவர் தனது வயதையோ சுய சரிதையையோ பெருமையாகச் சொல்வதில்லை. அவ்வப்போது அவர் சொல்லும் விஷயங்களில் இருந்தே பழைய வரலாற்றை ஊகிப்பர்.
தானும் வடலூர் ராமலிங்க சுவாமிகளும் உடனிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை அவர் சொன்னார்:


“நான் ராமலிங்க சுவாமிகளுடன் இருந்த போது, ராமலிங்கம் கட்டிடத்தின் வெளியே ஒரு பந்தல் அமைக்கச் சொன்னார். பந்தல், பல தோரணங்களுடன் அமைக்கப்பட்டது. மீண்டும் அந்த இடத்துக்கு ராமலிங்க சுவாமிகள் வந்தபோது, அட! பந்தல் நன்றாக இருக்கிறதே! யார் அமைத்தார்கள்? என்று வினவினார்.
அங்கிருந்த தொண்டர்கள் திருவாளர்………………….. அமைத்தார் என்று பந்தல் போடப் பண உதவி செய்தவர் பெயரைச் சொன்னார்கள்.
அவரா ? திரு……………… வா அமைத்தார்??????
என்றார்.
வள்ளார் இப்படிக்கூறிய அடுத்த நொடியில் அந்தப் பந்தல் எரிந்து சாம்ப லாகியது.
ஏனெனில் அந்தப் பந்தல் அமைக்கப் பணம் கொடுத்தவர்– மாமிச உணவு சாப்பிடுபவர். வள்ளளாரோ அதி தீவிர சைவர். புலால் உண்ணுவோரை கடுஞ் சொற்களால் விமர்சிப்பவர்.
வடலூர் சிதம்பரத்துக்கு அருகில் இருக்கிறது.
வள்ளலார் வாழ்ந்த காலம்- 1823- 1874

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சுத்த சன்மார்கத்தைப் பரப்பினார். வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஏழு திரை கொண்ட ஒரு அறை இருக்கிறது வடலூர் வள்ளலார், தைப்பூசத் திருநாளில் ஜோதி வடிவில் மறைந்ததால் தைப்பூச விழாவின்போது மக்கள் லட்சக் கணக்கில் வருவர். வள்ளலாரின் பாடல்கள் திருவருட்பா என்னும் நூலாக மிளிர்கிறது.
எல்லாக் கடவுளர் மீதும் அமைந்த இந்த தெய்வீகத் துதிகள் எளிய தமிழில் எதுகை மோனையுடன் அமைந்துள்ளன.
ராமலிங்க சுவாமிகளின் முக்கியப் பாடல்கள், அவரது அற்புதச் செயல்கள், அவருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே நடந்த வழக்கு விவகாரம், வள்ளலார் போலவே ஜோதி வடிவில் மறைந்த தமிழ் சாது சந்யாசிகள் ஆகியன பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். வடலூர் ஆஸ்ரமம் பற்றி மட்டும் இப்பொழுது சொல்லுவேன்.



சத்திய ஞான சபையின் சிறப்புகள்:
சுமார் 150 ஆண்டுகளாக இங்கு அணையா அடுப்பு உளது; அதாவது எல்லோருக்கும் எப்போதும் உணவு படைக்கப்படும்.
வள்ளாலாரின் சீடரான கல்பட்டு சுவாமிகளின் சமாதியும் இங்கே இருக்கிறது. அங்கே வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை வருணிக்கும் பெரிய ஓவியங்கள் உள்ளன.
வள்ளலாருக்கு இயற்கை வைத்தியத்தில் அதிக நம்பிக்கை இருந்ததால் மூலிகை மருந்துகளையும், மூலிகை உணவுகளையும் பரப்பினார். இன்றும் நூற்றுக் கணக்கான மருந்துகளையும் மூலிகை உணவுகளையும் வடலூரில் விலைக்கு வாங்கலாம்
நானும் என் தம்பியும் மாலைக் கதிரவன் மலை வாயிலில் விழுமுன் வடலூர் அடைந்தோம்.
எதேச்சையாக ஒருவர் வந்து தன்னை ‘நம சுதாமா’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். நெற்றியில் விபூதிக் கீற்று. வள்ளலார் பிராமணர் அல்ல; வந்தவரும் பிராமணர் போலத் தோன்றவில்லை. ஆகையால் ‘’நம சுதாமா’’ என்ற பெயர் விநோதமாக இருக்கிறதே என்று வினவினோம்.
அவர் சொன்னார்- என் பெயர் சுதாமா; எனக்கு நமசிவாய என்பது பிடிக்கும் என்பதால் நம சுதாமா என்று வைத்துக் கொண்டேன் என்றார்.

முதலில் அவர் பணமோ டொனேஷனோ Donation எதிர்பார்த்து எம்மைச் சூழ்ந்தாரோ என்று எண்ணினோம். ஆனால் நேரம் ஆக ஆக அவர் ஒரு உண்மை ஊழியர் என்று தெரிந்தது.
எங்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். சமையல் அறைக்கு அழைத்துச் சென்று அணையா அடுப்பையும், விளக்கையும் காட்டினார். அருகில் இருந்த பானையில் இருந்து சுக்கு மல்லிக் காப்பி கொடுத்தார்; எவ்வளவு பணம் தரவேண்டும்? என்று கேட்டபோது- இது எல்லோருக்கும் பயன்படுத்துவதற்காக தினமும் இந்த இடத்தில் வைக்கப்படுகிறது என்றார்.
நீங்கள் இந்த இடத்தில் வேலை பார்க்கிறீர்களா? என்று கேட்டபோது, தான் அருகாமை கிராமத்தில் வசிப்பதாகவும் முடிந்த போதெல்லாம் சைக்கிளில் வந்து உதவி செய்வதாவும் சொன்னார்.
என்னுடைய திருவருட்பா புஸ்தகத்தை ஒருவருக்குக் கொடுத்துவிட்டதால் புத்தகக் கடை எங்கே? என்று கேட்டேன். அங்கு சென்றவுடன் ஒரு திருவருட்பா புஸ்தகம் வாங்கினேன்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமருடன்……. என்ற, பாடலைப் புகழ்ந்து பேசினேன். “சார் ஒரு கேள்வி– யார் உத்தமர்? யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்றார். வாயடைத்துப் போனேன். துணிச்சலாக இவர் ஒரு உத்தமர் என்று எவர் பெயரையும் சொல்லும் துணிவில்லை. அந்தக் காலத்தில் ரமணர், ராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர், அண்மையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) போன்ற உத்தமர்கள் இருந்தனர். அவர்கள் வாழ்வு, குடிசையில், எல்லோரும் பார்க்கும் வாழ்வாக இருந்தது ஆனால் மற்ற சாமியார்கள் எல்லோரும் மூடிய கட்டிடங்களில் மறைவான வாழ்க்கை வாழ்வதால் சொல்லும் துணிவில்லை என்றேன். அவர் கேட்ட கேள்வி என் சிந்தனையைத் தூண்டியது.
யார் உத்தமர் இல்லை? என்று மட்டும் அவர் கேட்டிருந்தால் அன்று இரவு முழுதும் நீண்ட பட்டியலைக் கொடுத்திருப்பேன்.
எனது தம்பிக்கு மூலிகை மருந்துகளில் ஆர்வம் இருந்ததால், இங்குள்ள கடைகளில் தைரியமாக வாங்கலாமா? என்று கேட்டேன்.
அவர் சொன்னார்:


இந்த ஸத்திய ஞான சபை எல்லைக்குள் எல்லோரும் ஸத்தியமே பேசுவர் என்றார். ஆனால் இங்கு இலவச உணவு அருந்த வருவோர் எல்லோரையும் ஆன்மிக நாட்டம் உடையோர் என்று சொல்வதற்கில்லை என்றும் சொன்னார்.
நான் உடனே காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அன்ன தானப் பெருமை பற்றி ஆற்றிய சொற்பொழிவினை சுட்டிக் காட்டினேன். நல்லவர் ஒருவர் உணவு உண்டால் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.
அவரிடம் பிரியாவிடை பெற்று மூலிகைக் கடைக்கு வந்தோம்.
நான் ஏன் வடலூர் சென்றேன்?

நான் இங்கிலாந்தில் சிறைச் சாலையில் உள்ள இந்துக் கைதிகளை வாரம் தோறும் சந்தித்து பிரார்த்தனை செய்வேன். ஒரு கைதி அதிசயமாக திருவருட்பா வேண்டும் என்றார். என்னிடம் லண்டனில் வைத்திருந்த புஸ்தகத்தை அவரிடம் கொடுத்து விட்டேன். ஆக வடலூர் சென்று புஸ்தகம் வாங்கத் தீர்மானித்தேன். இது கடந்த ஓராண்டுக்குள் நடந்தது. ஆனால் நானோ 40 ஆண்டுக்கும் மேலாக வடலூர் செல்ல ஏங்கினேன். காரணம்:-
- சிறு வயதில், ஐந்து வயதில், மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள யாதவர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன். முதல் நாள் முதல் ஐந்து வருடத்திற்கு தினமும் பாடிய பாடல் வள்ளலாரின்- ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே’ – என்ற பாடல்தான்.
2.என் தந்தை ‘ம்ருத்யுஞ்சய மந்திரம்’ முதலியன சொல்லிக் கொடுத்ததோடு வள்ளலாரின் கணபதி துதியான ‘முன்னவனே யானை முகத்தவனே’– துதியையும் சொல்லிக் கொடுத்ததால், சிறு வயது முதல் அதுவும் பரிச்சயம்.
பஜனையில் ‘அம்பலத்தரசே அருமருந்தே’ பாடலையும் அவர் பாடுவார். நாங்களும் உடன் பாடுவோம்.
- மதுரை சம்பந்த மூர்த்தித் தெருவில் மஹாதேவன் என்பவர் நாடகங்களில் நடிப்பார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ‘அருட் ஜோதி தெய்வம்– எனை ஆண்டு கொண்ட தெய்வம்’ என்ற பாடலை உருக்கமாகப் பாடுவார். பிற்காலத்தில் நாங்கள் சங்கீத மேதை டாக்டர் எஸ். ராமநாதன் வசித்த கட்டிடத்தில் குடியிருந்தோம். அவரும் அவரது புதல்விகளும் இந்தப் பாடலை பாடுவர்.
4.எஸ் எஸ் எல் சி —-படிப்பில் மனப்பாடப் பகுதியில் ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம்’—என்ற பாடல் வந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வள்ளலார் பற்றிப் பல கட்டுரைகள் எழுதினேன்.
இவை அனைத்தும் சேர்ந்து என்னை வடலூருக்கு உந்தித் தள்ளியது.


ஒவ்வொரு முறை லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து வைதீஸ்வரன் கோவிலுக்குச் செல்லுகையில் வடலூரைத் தாண்டி ‘கார்’ பறக்கும். அப்போதும் வடலூர் மீது ஆர்வம் எழும்.
இந்த முறை வைதீஸ்வரன் கோவிலுக்குச் செல்லும் இரண்டு நாட்களுக்கு முன்னரே, வடலூருக்குத் தனியாகச் சென்று வந்தேன்.
அமைதி தவழும் வடலூர் ஆஸ்ரமத்துக்கு நீங்களும் சென்று வாருங்கள்.
வாழ்க ராமலிங்க சுவாமிகள்! வளர்க வடலூர் வள்ளலாரின் புகழ்!!


–சுபம், சுபம்—
nparamasivam1951
/ March 25, 2018மிகவும் அருமையாக எழுதப்பட்ட பதிவு. ஆறுமுக நாவலர் வழக்கு என்பதாக ஒரு குறிப்பு உள்ளது. அது என்ன என்பது குறித்து ஒரு பதிவு எழுத வேண்டுகிறேன்.