பாரதி போற்றி ஆயிரம் – 70 & 71 (Post No.4882)

Date- 5 April 2018

 

British Summer Time- 4-59 am

 

Written by S Nagarajan

 

Post No.4882

 

Pictures are taken from various sources;thanks.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 70

  பாடல்கள் 570 முதல் 578

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

பாரதி பத்துப்பாட்டு

 

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி தொடர்கிறது.

 

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

21 முதல் 29 வரை உள்ள பாடல்கள்

 

காதல் போயின் சாதல் என்றே

    கழறும் படிசெய்தாய்

நீதம் அதுவே என்றிடும் வண்ணம்

    நீடுற உரைத்திட்டாய்

ஆதலி னாலே நீயே எந்தன்

    ஆரு யிரைக்கவரும்

காதல னாக வந்தாய் எந்தன்

    கான மதைக்கேட்டாய்

 

பாட்டினில் உன்போல் இதயந் தன்னை

    பறிகொடுத் திடுவோர்கள்

நாட்டினி லெங்கும் இருந்திடு வாரோ

    நானுந் தன்மேலே

காட்டிய காதலில் உள்ளம் நெகிழ்ந்தாய்

    கனிவுட னதையேற்றாய்

ஏட்டிலும் காணா காதல் இதுவென

    எனைப்பி ரிந்தே சென்றாய்

 

ஆயினு மென்ன காதல் தனையே

    அவம தித்தல்போல்

ஆயிடை மறுநாள் நானொரு குரங்கிடம்

    அதே பாடல் பாட

ஏயின அம்பாய் காயம் பட்டாய்

    என்மேல் கோபமுடன்

போயினை எந்தன் காதல் தனையே

    போலியென் றேநினைத்தாய்

 

குரங்கி லிருந்தே மனிதன் வரவென

    குறித்தார் நூல்களிலே

மரங்க ளின்மேல் தாவிட லாலே

    மனமே குரங்கென்றார்

குரங்கை விரும்பும் எந்தன் மனமும்

    குரங்காய் நினைத்தாயோ?

தரங்கெட்ட குயில் எனவே வெறுத்துத்

     தனியாய் தவித்தாயோ?

 

மூன்றாம் நாளில் நீவரும் போதில்

    முன்னிலும் கொடுமையதாய்

நான்செய் செயலை நேரினில் கண்டாய்

    நாடியோர் மாட்டினிடம்

மீண்டும் அந்தக் காதல் பாடல்

    மோகத் துடனிசைக்க

ஏன்தான் இந்தக் குயிலைக் கண்டேன்

    எனநீ நொந்தனையே

 

காதலைநீ மதித்திடல்தான் உண்மை யென்றால்

    கருத்தற்ற குரங்கிடமும் மாட்டைக் கண்டும்

காதல்பாட் டிசைத்திடுதல் சரியா என்றே

    கடுங்கோபத் துடன்நீயும் கேட்டு நின்றாய்

வாதமேதும் செய்யாமல் கண்ட தெல்லாம்

     மாயையென்றே நானெடுத்து உரைத்த போதில்

ஏதமென அதையேற்க மறுத்து விட்டாய்

     என்றாலும் அதையுணர்த்தல் எளிதே யல்ல

 

நடவாத ஒன்றினையே நடந்த தாக

     நாமறிந்தோர் சிலநேரம் சொல்வ துண்டு

திடமாக அதைநம்பும் சிலபே ராலே

     தீங்குகளும் சிலநேரம் நிகழ்வ துண்டு

படமாகக் கண்முன்னே நீயே நேரில்

    பார்த்ததையே நானிங்கு மாயை யென்றால்

தடம்மாறும் என்பேச்சை நம்பப் போமோ

     தானதனைச் சிந்தித்தென் கதையைச் சொன்னேன்

 

முன் ஜென்மச் சிந்தனை இல்லாத பேரிந்த

     மேதினியில் எங்கும் இல்லை

இன்றதனை உணர்ந்திடின் அதிலுற்ற காதலையே

     எண்ணுவார் மாற்ற மில்லை

அன்றந்தப் பிறவியில் நான் கொண்ட காதலை

     அழகாகப் பாடித் தந்தாய்

என்றுமென் நினைவினை எந்நாளும் நிலைபெறும்

    இலக்கியமாய் சூடத் தந்தாய்

 

இக்காலம் கதைகளை எவ்வடிவில் கண்டாலும்

    யாவிலும் ஆழமாக

முக்கோணக் கதைகளே பெருமளவில் வருமதன்

     முன்னோடி நீயே யன்றோ

அக்காலந் தனில்நீயும் அருமையுள நாடகமாய்

     அரியயென் முன்ஜென் மத்தை

எக்காலத் திலுமெவரும் எண்ணியே வியந்திடவே

     ஏற்றமுற இயம்பலானாய்

  குயில் பார்வையில் பாரதி தொடரும்.

xxxxxxxxxxxxxxxxxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 71

  பாடல்கள் 579 முதல் 587

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி தொடர்கிறது.

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

30 முதல் 38 வரை உள்ள பாடல்கள்

இருவ ரென்னை விரும்பி நின்ற போதில்

ஒருவர் மீதும் உளம்தி ரும்பா நாளிலே

அருமை யான அரச மரபின் செம்மலாய்

பெருமை மிக்க இளவ லங்கு வந்தனன்

 

கண்ட போதே காத லென்றால் பொருந்துமோ?

பண்ப தல்ல என்ற சொல்லும் பொய்த்ததே

கண்ட போதில் இதயம் மாறி கலந்ததால்

மண்ணின் மாண்பு மாறி யாவும் மறந்ததே

 

திடமு டனிரு மனமி ணைந்து திளைத்ததால்

உடலி ரண்டும் உளமுருகி ஒன்றலால்

இடமு டனொரு கால மென்ப தின்றியே

தடம்ப திக்கத் தந்து விட்டேன் தன்னையே

 

காத்தி ருந்த இருவ ரதனைக் கண்டனர்

ஆத்தி ரத்தில் அறிவி ழந்து வந்தனர்

நேத்தி ரத்தில் ரத்தம் வாளில் நேர்பட

தீத்தெ றித்தல் போல வெட்டிச் சாய்த்தனர்

 

உடலினையான் தந்திட்ட காத லர்தாம்

     உயிரையே எனக்காகத் தந்த போதில்

திடமுடனே கலக்கமின்றி என்னைப் பார்த்து

    திரும்பவும்நாம் மறுபடியும் பிறப்போ மென்றார்

மடமையென சிலர்சொல்வார் ஆனால் என்னே

     மறுபடியும் நானிங்கு பிறந்து வந்தேன்

கடவுளே செய்திட்ட சதியோ என்ன

     கருங்குயிலாய் நானிங்கு தோன்றி வந்தேன்

 

முன்பிறப்பில் தனிலுற்ற இவற்றை யெல்லாம்

     முழுமையாய் உன்னிடத்தில் சொன்ன போதில்

என்னயிது இவையெல்லாம் மெய்யோ பொய்யோ

     ஏற்பதோ வேண்டாமோ எனக்கு ழம்பி

பின்னுமதன் உண்மைதனைக் காண்ப தற்கு

    பேடையேஉன் காதலன்யார் என்று கேட்டாய்

முன்னிற்கும் நீயேதான் என்று சொல்ல

     முகமலர்ந்து எனைத்தொட்டாய் பெண்ணானேன் நான்

 

 குயிலாக எனையேற்றல் இயலா தென்றே

     குமரியாய் மாற்றினாய் என்ற போதும்

செயிரறு செல்லம்மா தனைவி டுத்து

     சேர்ந்தென்னு டனிங்கு சிலநாள் வாழ்தல்

உயிர்ப்புள மட்டிலும் கனவில் கூட

     ஒருபோதும் பொருந்தாது எனயெ ழுந்தாய்

பயின்றிடத் தக்ககாவி யமாய் மாற்றி

     பாவடிவில் யாவையுமே பாடித் தந்தாய்

 

இக்கதையின் பொருள்தன்னைக் காண்ப தற்கு

     எவரேனும் முனைவாரோ என்று கேட்டாய்

அக்கறையாய் அவ்விதமே கூர்ந்து நோக்கி

     ஆய்வு செய்தோர் உண்டெனினும் அவர்க்குள் ளேயும்

மிக்கபல முரண்பாடும் அதனா லிங்கே

     மேலும்பல விவாதமும் விளைந்த தன்றோ?

தக்கபடி இதன் பொருளை நீயும் அந்தத்

     தெய்வமும் அன்றியார் உணர்ந்து சொல்வார்?

 

பாரதி உன் குயில்பாட்டை பூரணமாய் உணர்ந்தவர்கள்

      பாரினிலே எவரு மில்லை

சாரமுள அதன்பொருளை உணர்ந்திட்டேன் என்றெவரும்

      சாற்றிடவும் துணிச்ச லில்லை

வேரத்னைக் காணாமல் வேதாந்த விருட்சத்தை

      விளைவிப்பார் யாரு முண்டோ?

யாரதனைப் படித்தாலும் பொருள்பலவாய் தோன்றிடவே

     யாத்தாயோர் கவிதை வாழி!

 

குயில் பார்வையில் பாரதி முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

 

 

***

 

Leave a comment

Leave a comment