
Written by S NAGARAJAN
Date: 11 April 2018
Time uploaded in London – 7-32 AM (British Summer Time)
Post No. 4903
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
by ச.நாகராஜன்

உலகெங்கும் பல நாடுகளில் புத்தரின் சிலைகள், உருவங்கள் உள்ளன.புத்த மதத்தினரும் புத்த மதத்தைச் சேராத பல சாமான்ய மக்களும் அறிவாளிகளும் அந்தச் சிலைகளை வழிபடுவது வழக்கமாக உள்ளது.
பல அறிஞர்களின் வீ டுகளும் அலுவலக அறைகளும் புத்தரின் அழகிய தோற்றம் உடைய சிலைகளையோ அல்லது படங்களையோ கொண்டிருக்கின்றன.
இது ஏன்?
அமைதி ததும்பும் அந்த சாந்த உருவம் மனதை சாந்தப்படுத்தி கிளர்ச்சிகளை நீக்கி உயர் நிலைக்கு இட்டுச் செல்கிறது.
இது அனுபவித்தவர்களுக்கே புரியும்.
இதைப் பற்றிய சம்பவம் ஒன்று உண்டு. டாக்டர் ஸ்ரீ கே.தம்மானந்தா புத்த மதத்தினர் உருவ வழிபாட்டைக் கொண்டவர்களா என்ற கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிடுகிறார்.
கதை இது தான்:
புத்தரின் மறைவிற்குப் பின்னர் சில நூற்றாண்டுகள் கழிந்த்ன. இந்தியாவில் புத்தரின் கொள்கைகளை பிரசாரம் செய்வதில் அபூர்வமான ஒரு பிக்ஷு தோன்றினார். அவர் பெயர் உபகுப்தர்.
அவரது சொற்பொழிவுகளைக் கேட்க ஆயிரக் கணக்கில் மக்கள் திரள்வது வழக்கம்.
இது தேவதைகளுள் மயக்கும் தேவதையான மாரனுக்குப் பொறாமையைத் தந்தது.
எப்படியாவது இந்தக் கூட்டத்தைக் கலைத்து மக்களைத் தன் பக்கம் இழுக்க மாரன் திட்டமிட்டான்.

ஒரு முறை பிரம்மாண்டமான கூட்டம் ஒன்றில் உப குப்தர் பேசிக் கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்!
மாரன் இது தான் தக்க தருணம் என்று உபகுப்தர் பேசிய இடத்திற்கு எதிர்த்தாற் போல ஒரு பெரிய மேடையை க்ஷண நேரத்தில் அமைத்தான்.
அழகிய அப்ஸரஸ் போன்ற மங்கைகளை நடனமாட வைத்தான்.
கூட்டம் அப்படியே மாரன் அமைத்த மேடையை நோக்கித் திரும்பியது.
ஒவ்வொருவராகச் செல்ல இறுதியில் உபகுப்தர் மட்டுமே இருந்தார்.
அவரும் கூட்டத்துடன் மாரனின் மேடையை நோக்கிச் சென்றார்.
நடன நிகழ்ச்சி முடிந்தது.
உபகுப்தர் மாரனுக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணினார்.
மாரனை அணுகிய உபகுப்தர், “மாரா! நீங்கள் அமைத்த நிகழ்ச்சி பிரமாதம்!உங்களுக்கு இந்த மாலையைச் சூட்ட விழைகிறேன்’ என்றார்.
மாரனுக்குப் பரம சந்தோஷம். “உங்கள் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்” என்று கூறிய மாரன் தன் கழுத்தை நீட்டினான்.
மாலை அவன் கழுத்தில் போடப்பட்டது.
உடனடியாக அது பாம்பு போன்ற சுருள்களைக் கொண்டதாக மாறி பாம்பு சுருள்வது போலச் சுருண்டு மாரனின் கழுத்தை நெருக்கத் தொடங்கியது.

வலி தாங்க மாட்டாத மாரன் அலறத் தொடங்கினான்.
உடனடியாக் நேராக தேவர்களின் அரசனான சக்கனிடம் சென்று மாலையை நீக்க வேண்டினான்.
சக்கனோ தன்னால் இயலவில்லை என்று தெரிவித்து விட்டான்.
உடனடியாக மஹா பிரம்மாவை அணுகிய மாரன் தன்னை மாலையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டினான்.
தன்னால் முடியாது என்று கூறிய பிரம்மா, “ஆனால் ஒரு வழி இருக்கிறது. இதை யார் போட்டார்களோ அவர்களே இதைக் கழட்ட முடியும்” என்றார்.
மாரன் கடைசியாக உபகுப்தரிடம் வந்து மாலையை அவிழ்க்குமாறு மன்றாடினான்.
உபகுபதர், “ அப்படியே செய்கிறேன், இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு. சம்மதமா?” என்று கேட்டார்.
தப்பித்தால் போதும் என்ற நிலையில் மாரன் நிபந்தனைகளுக்கு இணங்கினான்.
“முதல் நிபந்தனை இனி எந்தக் காலத்திலும் புத்தரின் கோட்பாடுகளைக் கேட்கும் எவருக்கும் தீங்கு செய்ய நினைக்கக் கூட கூடாது என்பது.
இரண்டாவது நிபந்தனையை உப குப்தர் விளக்கினார்” “நான் புத்தரின் உருவத்தை நேரில் தரிசித்ததில்லை. ஆனால் நீயோ அவரைப் பார்த்திருக்கிறாய். ஆகவே அவரது உண்மையான உருவத்தை எனக்குக் காட்ட வேண்டும்!”
இதற்கு இணங்கிய மாரன், “ ஆனால் ஒரு விஷயம். நான் தான் புத்தராக மாற வேண்டும். அப்படி மாறித் தோற்றமளிக்கும் போது புத்தர் வடிவில் இருக்கும் என்னை நீங்கள் வணங்கி விடக் கூடாது. ஏனெனில் நான் உங்களைப் போல புனிதமானவன் அல்ல” என்றான்.

இதற்கு இணங்கினார் உபகுப்தர்.
மாரன் புத்தராக மாறினான்.
கருணை பொங்கும் அந்த உருவத்தைக் கண்ட உபகுப்தர் உருகினார்.
தன் கைகளைக் கூப்பி புத்தரை வணங்க ஆரம்பித்தார்.
“ஆ! நீங்கள் கொடுத்த வாக்கை மீறுகிறீர்கள்’ என்று அலறினான் மாரன்.
“ நான் மாரனை எங்கே வணங்குகிறேன். நான் புத்தரை அல்லவா வணங்குகிறேன்” என்று பதில் சொன்னார் உபகுப்தர்.
ஆக இந்த சம்ப்வத்திலிருந்து புத்தரின் உருவம் ஒன்றே அசாத்தியமான சாந்தியையும் உயரிய நிலையையும் அளிக்கும் என்பது தெரிய வருகிறது.
அன்றிலிருநது புத்தரின் சிலைகளை வணங்கும் வழக்கம் எல்லா நாடுகளிலும் ஏற்பட்டது.
சிறிய அளவில் இருந்த புத்தரின் சிலை மகோன்னதமான அளவில் மிகப் பெரிதாக வடிவமைக்கப்பட்டது.

இது தான் புத்தர் சிலை வழிபாடு ஆரம்பமானதின் கதை!
***