
WRITTEN by S NAGARAJAN
Date: 22 April 2018
Time uploaded in London – 5-23 AM (British Summer Time)
Post No. 4937
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 48
ப.கோதண்டராமன் அவர்களின் ‘பாரதி யுகம்’
ச.நாகராஜன்
1
பாரதி ஆர்வலர் ப.கோதண்டராமன் அவர்கள் பாரதியார் பற்றி ஐந்து அத்தியாயங்களில் நூறு பக்கங்களில் நன்கு எழுதியுள்ள நூல் பாரதி யுகம்.
1961 பிப்ரவரியில் இமயப் பதிப்பகம், நாகப்பட்டினம் – வெளியீடாக இது வந்தது.
மகாகவியின் பெருமை பற்றி முதல் அத்தியாயத்தில் விவரிக்கப் புகுந்த நூலாசிரியர் ஒரு கவியின் லட்சணம் பற்றி நன்கு விளக்கி அது மகாகவிக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதை விளக்குகிறார்.
அதில் சில பகுதிகள் :
கவி வாழ்க்கையையும் மக்களின் உணர்ச்சிகளையும் பொலிவுடன் பாடுகிறான். அவன் உலகில் நெறி வழியைக் காட்டுகிறான்; தன் கற்பனைத் திறத்தினாலும், கவிதையின் அமைப்பு, அணி, அலங்காரம், இசை, ஒலிநயம், தாள லயங்கள் ஆகியவற்றினாலும் மக்களின் உள்ளத்தை மகிழ்விக்கிறான்.மானிட அனுபவத்திலும் இயற்கையிலும் உள்ளே அடங்கியுள்ள அழகுகளை எடுத்துக்காட்டி மக்களின் மனோபாவங்களையும் அனுதாபங்களையும் தூண்டி விடுகிறான்.
மன அறிவிலிருந்து படிப்படியாக விடுதலையடைந்து சாதாரண உணர்வுக்கு அப்பாலுள்ள பேருணர்வுடன் உறவேற்படுத்திக் கொள்கிறான். இவ்வுணர்வு நிலையில் அவன் கேட்கும் தொனி தெய்வத்தனமை பொருந்தியது; அவன் காணும் காட்சி தெய்வீக ஆதரிசமாகிறது
2
தேசிய மகாகவி பாரதியார் என்ற இரண்டாம் அத்தியாயத்தில் பாரதியாரின் தேசியப் பணி எப்படி படிப்படியாக மலர்ந்தது என்பது ந்ன்கு விவரிக்கப்படுகிறது. காங்கிரஸில் அரவிந்தரின் தாக்கம் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. பாரதியார் 1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்கு பாரதியார், தமிழர் கோஷ்டியொன்றுடன் சென்றார். தாதாபாய் நௌரோஜியின் தலைமையில் அக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டபின்னர் சகோதரி நிவேதிதாவை அவர் ச்ந்தித்தார்.
இவற்றை நன்கு விவரிக்கும் நூலாசிரியர், அடுத்து வ.உ.சிதம்ப்ரம் பிள்ளை – பாரதியாரின் நட்பை விவரிக்கிறார். ‘என் உள்ளமே பாரதி நாவில் துடித்தது’ என்று வ.உ.சி. கூறுவதுண்டு என்ற செய்தியையும் தருகிறார்.
1907 டிசம்பர் மாதம் மிதவாதிகளின் கோட்டையான் சூரத்தில் காங்கிரஸ் கூடியது. அதில் கலந்து கொண்ட பாரதியார் அங்கு நடந்த ரகளையையும் அதில் கலநது கொண்ட தமிழர் பங்கையும் நகைச்சுவையுடன் ‘எங்கள் காங்கிரஸ் யாத்திரை’ என்ற நூலில் விவரிக்கிறார்.
3
மூன்றாம் அத்தியாயம் ‘புதுவையில் பாரதி’ என்ற தலைப்பைக் கொண்டது.
பதினேழு மாத காலம் வாரந்தோறும் வந்த ‘இந்தியா’ இதழில் பாரதியாரின் கட்டுரைகளைப் பற்றி நூலாசிரியர் விவரிக்கிறார்.
பாரதியாரின் தலையங்கத்தில் சில பகுதிகள்:
முதற் பிரயத்தினம் என்ற தலையங்கத்தில் (21-11-1908) ‘சுதந்திரத்தின் பொருட்டுத் தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில் வீழ்ந்து மாள்வரேனும், நம் சந்ததியார் நடத்திச் செல்லுமாறு தந்து விட்டுப் போகிற சுதந்திர யுத்தம் பல முறை தோற்றுப் போயினும் கடைசி வரை ஜயங்கொண்டே முடிவதாகும்:
நூலாசிரியர் கவி பைரனின் மொழிகளை பாரதியார் இப்படி தமிழில் தருவதைச் சுட்டிக் காட்டுகிறார்.
இன்னொரு தலையங்கம்– பாரதியார் எழுதியது:
“ஸ்வதந்திரமடைய விரும்புவோர் செல்லவேண்டிய பாதை மல்லிகையிதழ்கள் தூவிய பாதையன்று, கல்லும் முள்ளும் பரப்பிய பாதை, செங்குத்தான வழி.”
அரவிந்தரின் புதுவை வருகை, அவருடனான பார்தியாரின் உறவு பற்றி இந்த நூலின் ஆசிரியர் அழகுற விளக்குவதில் ஒரு பகுதி இது:
பாரதியார் ஸ்ரீ அரவிந்தரின் மகா மேதையையும் ஆத்மீகத் துறையில் அவர் அடைந்துள்ள தேர்ச்சியையும் நன்குணர்ந்தவர். இவ்விஷயங்களைப் பற்றி ‘இந்தியா’வில் கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன. தாம் புதுவையில் வாடிக் கொண்டிருந்தபோது தம்மிலும் பல துறைகளில் சிறந்து விளங்கிய ஒரு பெரியார் தமக்கு நட்புரிமை அளித்ததை ஒரு பாக்கியமாகவே கருதினார். பாரதியார் அரவிந்தரை மதித்துப் போற்றியதைப் போலவே, அரவிந்தரும் தேசாபிமானியும் அருந்தமிழ்ப் புலவருமான பாரதியை உரிய முறையில் மதித்து வந்தார்.
புதுவையில் மலர்ந்த பாரதியின் படைப்புகளைப் பற்றி மிக விரிவாக இந்த நூலில் திரு ப.கோதண்டராமன் அழகுற விளக்குகிறார்.
4
நான்காம் அத்தியாயமான ‘இறுதிக் காலம்’ அத்தியாயத்தில் பாரதியாரின் கடய வாழ்க்கை மற்றும் சென்னை வாழ்க்கையைக் காண்கிறோம்.
காந்திஜியுடனான சந்திப்பு, கூடலூரில் 1921 மார்ச் மாதம் 25ஆம் தேதி பாரதியார் நிகழ்த்திய ‘மனிதனுக்கு மரணமில்ல’ என்ற சொற்பொழிவு, பார்த்தசாரதி கோயில் யானை பாரதியாரைத் தன் துதிக்கையால் தூக்கிப் போட்டது, வ.வே.சு ஐயர் பாரதியாரை சிறைக்குச் செல்லும் முன்னர் பாரதியாரைச் சந்தித்தது, மறுநாள் இரவு சுமார் 1-30 மணிக்கு பாரதியாரின் ஆவி பிரிந்தது ஆகியவை பற்றிக் காண்கிறோம்.
5
பாரதி யுகம் என்ற ஐந்தாம் அத்தியாயத்துடன் நூல் முடிகிறது.
பாரதியாரின் சிறப்புகள் அனைத்தும் சுருக்கமாக இதில் விளக்கப்படுகிறது.
நூலின் இறுதி பாரா:
பாரதியார் இத்தகைய வாழ்க்கையின் மூலமாகவும் இதனின்று எழுந்த அமர இலக்கியங்களின் மூலமாகவும் ஒரு புதிய சகாப்தத்தையே, ஒரு புதிய யுகத்தையே ஆரம்பித்தார். பாரதியுகம் இன்றும் நடக்கிறது. இந்த நூற்றாண்டின் பாதிக்கு மேல் முடிந்து விட்டது. ஆயினும் இன்னும் பாரதியாரை வெல்ல வல்ல யாதொரு பாவாணனையும் காணோம். இளங்கவிகள் தம்மைப் பாரதி பரம்பரை எனக் கூறிக் கொள்கின்றனர். அவர்களுடைய பாடல்கள் பெரிதும் பாரதியாரைத் தழுவியனவாகவே காண்கின்றன. பாரதியார் வாழ்க!
அருமையான இந்த நூல் பாரதி ஆர்வலர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயமில்லை!
***