
இலங்கையில் பயங்கரக் கலகம் – சுவையான கதை! தாய்லாந்து ராமாயணம்-3 (Post No.5025)
WRITTEN by London Swaminathan
Date: 19 May 2018
Time uploaded in London – 12-28 (British Summer Time)
Post No. 5025
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

அம்பு மூலம் அவசரச் செய்தி !!
மஹிபால தேவாசுர!!
மஹாபல தேபாசுர அல்லது மஹிபால தேவாசுர, ராவணனின் இனிய நண்பன்.அவனுக்கு ராவணன் இறந்தது தெரியாது. ராரவணனைப் பார்க்க இலங்கைக்கு வந்தான். ராவணன் கருமாதி முடிந்து பத்து நாள் ஆகிவிட்டது. ‘ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சு கும்பிடவா வந்த?’ என்று மக்கள் வினவினர். என் நண்பன் ராவணனைக் கொன்று, விபீஷணன் இந்த நாட்டை ஆள்கிறானா? என் தாய் தடுத்தாலும் விடேன்- என்று சொல்லி லங்காபுரியை முற்றுகை இட்டான். முக்காலமும் உணர்ந்த இராமபிரானுக்கு இப்படியெல்லாம் எதிர்காலத்தில் ஆபத்து வரும் என்று அறிந்து வாரா வாரம் ஒரு ராம பாணத்தை (அம்பு) இலங்கைக்கு அனுப்பி வந்தான். இப்படிப்பட்ட ஒரு அம்பை விபீஷணன் எடுத்தான்- தொடுத்தான்— ஒரு அவசரக் கடிதத்தை!
தமிழ் இலக்கியத்திலும் உலகின் பிறநாட்டு இலக்கியங்களிலும் புறா விடு தூது, அன்னம் விடு தூது, செங்கால் நாரை விடும் தூது என்றெல்லாம் பாடல்கள் உண்டு. புற நானூறு, நளவெண்பா, தேவாரம், திவ்யப் பிரபந்தப் பாடல்களில் இவற்றை ரஸிக்கலாம். ஆனால் அம்பு மூலம் கடிதம்/ தூது அனுப்பியது விபீஷணனே. இது தாய்லாந்து ராமயணத்தின் விஷேசச் செய்தி.
ராமனிடம் அம்பு வந்தது; இது என்னடா? ‘அம்புத் (அன்புத்) தொல்லை’ என்று சொல்லி அவன் அனுமனை அழைத்து ‘’மகனே சென்று வா, வென்று வா, புகழ் மொண்டு வா’’ என்று அனுப்பினான்.
அனுமன் அப்போது பியாஜித் என்ற பெயரில் நபபுரியை (ப்ரிய ஜித்; நவ புரி) ஆண்டு வந்தான். அவன் ‘’வம்புச் சண்டைக்குப் போக மாட்டான்; வந்த சண்டையை விட மாட்டான்’’.
மஹீபாலனை எட்டி உதைத்தான்; கட்டிப் புரண்டான்; வெட்டி வீழ்த்தினான். ஆயினும் வெட்டிய உடல் இரண்டும் சேர்ந்து ஒட்டின. அனுமனுக்கு வியப்பு; உடல் எல்லாம் வியர்ப்பு; வழித்தான் வேர்வையை; சுழித்தான் முகத்தினை. பழித்தான் மஹிபாலனை.
அப்போது விபீஷணன் செப்பினான்; முதலில் மஹீபாலனின் மார்பைப் பிள. அனுமனும் அப்படியே செய்ய, மஹிபாலன் கதை முடிந்தது.

இலங்கையில் பயங்கரக் கலகம்
ராவணன் இறந்து சில வாரங்கள் ஓடிப்போனது. விபிஷணனின் நல்லாட்சி நடந்து வந்தது. அப்போது மண்டோதரி கர்ப்பமாக இருந்தாள்; விபீஷணனின் மஹாரணிகளில் ஒருவள் ஆனாள். பிள்ளையும் பிறந்தது. அவன் பெயர் வரணிசூரன்.
அவன் ராவணன் பிள்ளை என்றும், விபீஷணன் எதிர்க் கட்சியில் சேர்ந்து அண்ணனைக் கொன்றான் என்றும் அவனுடைய நண்பன் சொல்லி வைத்தான். இதைக் கேட்டவுடன் வரணிசூரனுக்கு ரத்தம் கொதித்தது. இலங்கையில் போர்க்கொடி உயர்த்தி கலகம் செய்தான்; ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தான்; ராவணனின் நண்பனான சக்ரவர்த்தி என்ற மன்னனுடன் சேர்ந்து இலங்கை மீது படை எடுத்தான் .அவன் பைனிசூரிவாங்ஷ் என்ற பெயர் கொண்டு விபீஷணனைச் சிறைப் பிடித்தான்.
உடனே அனுமன் உதவியை நாடினான் விபீஷணன்.
அனுமன் நேரடியாக கிஷ்கிந்தைக்குச் சென்று சுக்ரீவன் படைகளை சேர்த்துக் கொண்டான்.அயோத்திக்குச் சென்று ராமன் படைகளைச் சேர்த்துக் கொண்டான். பின்னர் தனது மகன் அசுரபாத்துடன் கலகப் படையைத் தாக்கினான். அது தோற்று ஓடிப்போனது. பின்னர் விபீஷணனை அனுமன் விடுதலை செய்தான்.
![]()
மைய்ராப் ( மயில் ராவணன் ) கதை
ராவணனின் ஆருயிர்த் தோழன் மைராப். அவன் பாதாள உலகத்துக்கு மன்னன். அவன் இராம பிரானை வெல்ல மைராப்பை அனுப்பினான். அவனும் ராமனிடம் சென்று தூக்க மாத்திரைப் பொடியை ராம லெட்சுமணர்கள் மீது தூவவே அவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை அலாக்காகத் தூக்கி வந்து கடலடி பாதாள உலகில் காவலில் வைத்தான் மைராப். உடனே சுக்ரீவன் இதைக் கண்டுபிடித்து அனுமனை மீட்புப் பணியில் அமர்த்தினான். அவன் கடலடிக் குழந்தை மீனவனை (மச்சானு/ மத்ஸ்யனு) அனுப்பி பாதாள உலகில் இருந்து இராம இலக்குவர்களை மீட்டான்.

அனுமாருக்கு இரண்டு மனைவிகள்
விபீஷணன் மகள் பெஞ்சகாயுடன் (வஞ்சகி அல்லது வஞ்சி) அனுமாருக்கு பிறந்தது அசுரபாத் என்னும் மகவு.
விபீஷணன் மகள் என்று தெரிந்ததும் பெஞ்சகாய் அரக்கியை ராமன் கொல்லாமல் அனுமாரோடு பாதுகாப்போடு அனுப்பியபோது காதல் மலர்ந்து பெற்ற பிள்ளை இது.
சுவர்ணமத்ஸ்யானு என்னும் கடல் அரக்கியுடன் அனுமார் பெற்று எடுத்த மகவின் பெயர் மத்ஸ்யானு (மீனன்). பாலம் கட்டும் பணியில் PLAN பிளான் போட்டுக்கொடுத்த நீலன் என்ற சிவில் எஞ்சினீயருக்கும் (CIVIL ENGINEER) அனுமாருக்கும் மோதல் ஏற்படவே ராமபிரான் நீலனை டிஸ்மிஸ் செய்து சுக்ரீவனிடம் சேவகம் செய்ய அனுப்பினான். அனுமனுக்குக் கடுங்காவல் தண்டனை கொடுத்தான் —அதாவது ஏழே நாளில் பாலம் கட்ட வேண்டும் என்று.
அனுமான் போட்ட கற்களை எல்லாம் கடலுக்கடியில் யாரோ களவாடிச் சென்றார்கள். அனுமன், கடலுக்கு அடியில் முங்கு நீச்சல் போட்டான். அங்கே சொர்ண மச்சா என்ற மீனழகி களவாணி வேலையில் ஈடுபட்டது தெரிந்தது. அவளை விரட்டி மிரட்டினான்; அவள் பணிந்தாள்; கனிந்தாள்; இருவருக்கும் காதல்; பிறந்த மகனின் பெயர் மச்சானு (மத்ஸ்ய= மீனவன்)
பிரம்மாவின் தீர்ப்பு

ராவணனின் தாத்தா மாலிவக்க பிரஹ்மா. ராமனின் அம்புகளால் அடுத்தடுத்து தோல்வி அடைந்த ராவணன் தாத்தாவை சமரசம் செய்ய அழைத்தான். ராமன் மீது சரமாரியாக புகார் கொடுத்தான். ராமனும் புகார்ப் பட்டியல் கொடுத்தான். தேவர்கள் அனைவரும் பிரம்மாவின் கோர்ட் வாசலில் தீர்ப்புக்குக் காத்து இருந்தனர்.சட்ட புத்தகங்களைக் கலந்தாலோசித்த பிரம்மா- ராவணனே குற்றவாளி என்று தீர்ப்பு எழுதினார். ராவணனின் சுப்ரீம் கோர்ட் வழக்கும் தோல்வி கண்டது.
இப்படிப் பல சுவையான சம்பவங்களைக் கொண்டது ராமகியன் எனப்படும் தாய் (THAI LANGUAGE) மொழி ராமாயணம்.
அடுத்ததாக லவன், குசன் பற்றிய விசித்திர விநோதக் கதைகளையும், சீதையின் “ராவணக் காதல்” பற்றியும் காண்போம்
–தொடரும்
–சுபம்–