மேலும் ஒரு தண்ணீர் அதிசயம்: சுவையான சமண மத சம்பவம் (Post No.5036)
WRITTEN by London Swaminathan
Date: 22 May 2018
Time uploaded in London – 13-19 (British Summer Time)
Post No. 5036
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
ஸத்யத்தின் பெயரில் ஸபதம் செய்தால் நீர் மீது நடக்கலாம், ஆறுகளை வழிவிடும்படி விரட்டலாம் என்பது ரிக் வேதத்தில் துவங்கி பைபிளின் புதிய ஏற்பாடு வரை இருப்பதை முந்தைய கட்டுரைகளில் விளக்கினேன். சமண மதத்தில் மிகவும் சுவையான நிகழ்ச்சி ஒன்று விடுகதைக் கதை — புதிர்போடும் சம்பவம் — ஒன்று உளது.
பாவதேவசூரி என்பவர் எழுதிய பார்ஸ்வநாத சரிதத்தில் இது உளது,
ஆறு விலகிப் போய் வழிவிட்டது!
ஒரு நாட்டில் ஒரு சமண மன்னன் இருந்தான். அவனது சஹோதரன் ஸோமா என்பவன் சமணத் துறவி ஆகிவிட்டான். தனது தலைநகருக்கு வெளியே ஸோமா முகாம் இட்டிருக்கும் செய்தி வந்தவுடன் ஸோமாவைப் பார்த்து நமஸ்கரிக்க மன்னன் சென்றான். அவன் தர்மோபதேசத்தைக் கேட்டுவிட்டு திரும்பிவந்தான். ராணியிடமும் சங்கதிகளைச் சொன்னான்.
ராணிக்கும் பேரார்வம் பிறந்தது. எனது மைத்துனரும் சந்யாஸியுமான ஸோமாவை நானும் நம்ஸ்கரித்து ஆசி வாங்குவேன் அது வரை சாப்பிட மாட்டேன் என்று ஸபதம் கொண்டாள்.
மாலையில் தேரில் ஏறிச் சென்றாள். நகரின் குறுக்கே ஓடும் ஆற்றில் பெரு வெள்ளம். அரண்மனைக்கு திரும்பி வந்தாள்.
நாதா! ஏதேனும் ஒரு வழி சொல்லுங்களேன். உங்கள் ஸஹோதரரை தரிசித்து ஆசி பெற வேண்டும் என்றாள்.
ஓ, அதுவா, மிக மிக எளிது ஆற்றரங்கரைக்குப் போய் நதியிடம் நான் செப்புவதைக் கூறு:
“என் கணவன், கடந்த பல ஆண்டுகளாகப் பிரம்மசர்ய விரதம் இருப்பது உண்மையானால் நதியே எனக்கு வழி விடு”.
இதை கேட்ட அவளுக்கு ஒரே மயக்கம். நான் தான் மைத்துனர் சந்யாசம் பெற்ற பின்னர் கர்ப்பம் அடைந்து இருக்கிறேனே. என் கணவர் பிரம்மசர்யத்தை அனுஷ்டிக்க வில்லையே. இருந்தபோதிலும் நதியிடம் சொல்லிப் பார்ப்போம் என்று சொன்னாள்
என்ன அதிசயம்! நதியும் இடது பக்கமும் வலது பக்கமும் விலகிப் போய் வழிவிட்டது.
ஸோமாவைச் சந்தித்த போது இந்த அதிசயம் பற்றி விளக்கம் கேட்டாள். அவர் சொன்னார்: “உன் கணவன் மனத்தளவில் பிரம்மச்சாரி. மனமே பெரிது. அவர் கள்ளம் கபட மற்றவர். நான் ராஜ்ய பாரத்தை விட்டதால் அவர் சுமக்கிறார். அவர் மாசு மரு அற்றவர்”.
பின்னர் எல்லோரும் அமர்ந்து விருந்து உண்டனர்
அவளும் அது சரி; நான் திரும்பிப் போகும் போது ஆற்றின் வெள்ளம் தணியாவிட்டால் நான் என்ன செய்வேன்? எப்படி அரண்மனைக்குப் போக முடியும்? ஒரு வழி சொல்லுங்களேன் என்றாள்.அதற்கு ஸோமா சொன்னர்.
“இதுவா பிரமாதம்! என் மைத்துனரும் சந்யாஸியுமான ஸோமா எப்போதும் உண்ணா நோன்பு கடைப் பிடிப்பவர் என்பது உண்மையானால், ஏ நதி
தேவதையே எனக்கு வழி விடு” என்று சொல் என்றார்.
அவளுக்கு மேலும் தலை சுற்றியது .இப்பொழுதுதானே ஸோமா என்னுடன் அமர்ந்து விருந்து உண்டார் .அவர் எங்கே உபவாஸம் இருந்தார்? என்று எண்ணி வியந்தாள் ஆயினும் முனிவர் சொன்னபடியே நதி தேவதையிடம் சொன்னவுடன், நதியும் விலகி வழ்விட்டது. அவளுக்கு ஒரே ஆச்சரர்யம்!!
கணவனிடம் போய்க் கேட்டாள் “நீர் போட்ட புதிருக்கு எனக்கு விடை கிடைத்துவிட்டது ஆனால் உம்முடைய சஹோதரர் போட்ட புதிருக்கு விடை வேண்டும். அவர் என்னுடன் அமர்ந்து விருந்து உண்டார். ஆனால் சந்யாசம் ஏற்றது முதல் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லுகிறாரே!”
“உண்மைதான்! அவர் உபவாஸமே இருக்கிறார். பெண்ணே! உனக்கு இன்னும் சமய உண்மை விளங்கவில்லை. உயர்ந்த குணம் படைத்த துறவிக்கு சாப்பிடுவதற்கும் சாப்பிடாததற்கும் வித்தியாசமே தெரியாது.
மனம் என்பது வேர்; வாக்கு என்பது தலைப்பகுதி; மதம் என்னும் பெரிய மரத்தின் பரந்த கிளைகளே ஒருவனின் செயல். வேரிலிருந்துதான் (மனம்) எல்லாம் தோன்றுகின்றன”.
இதைக் கேட்டவுடன் ராணிக்குத் தெளிவு பிறந்தது.
ரிக் வேதத்தில் நதிகளுடன் விஸ்வாமித்ர மஹரிஷி பேசியதைப் போலவே இந்த சமய உரையாடலும் அமைந்து இருக்கிறது.
இன்னும் சில புத்த மதக் கதைகளும் உண்டு.
புத்த மத சம்பவங்களை இன்னுமொரு கட்டுரையில் காண்போம்.
–SUBHAM–