சர்ச்சிலின் டான்ஸ்! (Post No.5071)

Written by S NAGARAJAN

 

Date: 3 JUNE 2018

 

Time uploaded in London –  9-54 am  (British Summer Time)

 

Post No. 5071

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ச.நாகராஜன்

 

 

இந்தியா சுதந்திரம் பெற்று விடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

அதை விட அவரது மோசமான எண்ணம் அப்படி ஒருவேளை சுயாட்சி தர நேர்ந்தாலும் அல்லது சுதந்திரமே தர நேர்ந்தாலும் இந்தியாவைத் துண்டாடி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை உருவாக்கித் தீராத தலைவலியை இந்தியாவிற்குத் தந்து விட வேண்டும் என்பது தான்.

 

முதல் எண்ணம் வெற்றி பெறவில்லை.

இரண்டாவது எண்ணம் வெற்றி பெற்று விட்டது.

இந்தியர்களை அயோக்கிய ராஸ்கல்கள் என்று அவர் கூறிய அவரது பிரபலாமான மேற்கோள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். (இந்தியர்கள் தங்கள் நாட்டை ஆளத் தகுதியற்ற நாள் சீக்கிரம் வரும் என்று அவர் குறிப்பிட்டார்; அது நிறைவேறி விடும் படி நமது அரசியல் கோமாளிகள் நடந்து கொள்வதை வருத்தத்துடன் குறிப்பிட்டு, அது நிறைவேறாமல் இருக்க இளைய தலைமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளேன்)

 

ஆனால் நன்றி கெட்ட சர்ச்சில் தனது உயிரைக் காப்பாற்றிய ஹிந்து-சீக்கிய ஜவான்களின் நாடான இந்தியாவையே பிரிக்கத் திட்டம் போட்டது தான் மன்னிக்க முடியாத செயல்.

சர்ச்சில் தனது சுயசரிதத்தில் அவர் இளம் ராணுவ வீரராக கைபர் கணவாய் அருகே பணியாற்றிய போது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அவரை முஸ்லீம் பத்தான்கள் சுற்றி வளைத்தனர்.

அவர் உயிர் போகவிருந்த தருணத்தில் அவரது ப்ளாட்டூனில் இருந்த ஹிந்து-சீக்கிய ஜவான்கள் குறுக்கிட்டு அவர் உயிரைக் காப்பாற்றினர். தனது உயிர் காப்பாற்றப்பட்டது ஹிந்து-சீக்கிய ஜவான்களாலேயே என்று அவரே எழுதியுள்ளார்.

 

ஆனால் அவர் பிரதம மந்திரியான போது நடந்த சம்பவங்கள் விசித்திரமானவை. இந்தியாவைப் பிரிப்பதே அவர் நோக்கமாக இருந்தது. 1940 மே 10ஆம் தேதி அவர் பிரிட்டனின் பிரதம மந்திரியாக ஆனார்.

 

முகம்மதலி ஜின்னாவை அவர் ஆதரித்துத் தயார் படுத்தினார்.

ஆனால் இரண்டாவது உலக மகா யுத்தம் எதிர்பாராத விதமாக வந்து பிரிட்டனை அச்சுறுத்தியது.

 

தனது மின்னல் வேகப் படையால் ஹிட்லர் ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து கொண்டு முன்னேறினான்.

 

அவனை மகாத்மா காந்திஜி உள்ளிட்ட அனைவரும் ஆதரிக்கவில்லை. பிரிட்டன் தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சி வேண்டிய போது அதற்கு காந்திஜியின் தலைமையில் இந்திய மக்கள் சம்மதித்தனர். ஹிட்லரால் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்து வரும் யூத அகதிகளுக்குப் புகலிடம் தரவும் இந்திய தேசிய காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் பிரிட்டன் இதை ஏற்கவில்லை. என்றாலும் ஹிந்து-சீக்கிய மக்கள் சில யூதர்களை இங்கு குடியேறச் செய்தது.

ஆனால் முகம்மதலி ஜின்னாவோ ஹிட்லரின் வருகை பிரமாதமான ஒன்று என்றும் ஹிட்லரை தான் ஆதரிப்பதாகவும் பகிரங்கமாகக் கூறினார்.

 

 

1938 செப்டம்பரில் மூனிச் உடன்படிக்கை ஜனநாயக செக்கோஸ்லேவேகியாவை அழித்த போது ஜின்னா ஹிட்லர் தங்களுக்கு (இந்திய முஸ்லீம்களுக்கு)  உத்வேகம் ஊட்டும் ஒருவர் என்று கூறினார்.

 

பிரிட்டனுக்கு ஆதரவு தந்த காந்திஜிக்கும் இந்திய மக்களுக்கும் துரோகம் இழைத்த சர்ச்சில், பிரிட்டனின் எதிரியான ஹிட்லரை ஆதரித்த ஜின்னாவுக்கு ஆதரவு தந்தார்.

பாகிஸ்தானை உருவாக்குவதில் முனைப்பாக உதவி செய்தார்.

இந்த நீண்ட நெடிய சுதந்திரப் போரில் ஒன்று தான் கிரிப்ஸ் மிஷன். (Cripps Mission) கிரிப்ஸ் லேபர் கட்சி.சர்ச்சிலோ கன்ஸர்வேடிவ் கட்சி.

 

கிரிப்ஸ் இந்திய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் சில திட்டங்களை முன் வைத்தார். சுயாட்சி தரப்படும் என்ற அவரது தேனான திட்டம் பேப்பர் அளவிலேயே இருந்தது. ஆக்கபூர்வமான ஒன்றாக அது இல்லாததால் காந்திஜி உள்ளிட்ட அனைவரும் அந்தத் திட்டத்தை நிராகரித்தனர்.

 

கிரிப்ஸின் மிஷன் தோல்வி அடைந்தது.

இதைத் தான் சர்ச்சில் மிகவும் விரும்பினார்.

கிரிப்ஸின் இந்திய விஜயம் மகத்தான தோல்வியை அடைந்தது என்ற செய்தியைக் கேட்டவுடன் அளவிலா ஆனந்தம் அடைந்த சர்ச்சில் தனது அதிகாரபூர்வமான இல்லமான 10, டவுனிங் தெருவில் தனது இல்லத்தில் இருந்த காபினட் அறையில் டான்ஸ் ஆடினார். அவ்வளவு மகிழ்ச்சி!

இதை பிரிட்டிஷ் எழுத்தாளர் மைக்கேல் எட்வர்டஸ் (Michael Edwardes) எழுதியுள்ளார்.

 

 

அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட் இந்தியாவிற்கு உதவப் பெரிதும் விரும்பினார். யுத்தத்திற்கோ அமெரிக்க உதவி சர்ச்சிலுக்குத் தேவையாக இருந்தது. ஆகவே கண் துடைப்பிற்காக யுத்த கால மந்திரி சபை உறுப்பினரான கிரிப்ஸை இந்தியாவிற்கு அனுப்ப சர்ச்சில் சம்மதித்தார்.

இது அமெரிக்க ஜனாதிபதிக்காக – வெறும் கண் துடைப்பிற்காக. ஆனால் அவர் தோற்றவுடன் இந்தியாவை உருப்படாமல் செய்ய வேண்டும் என்ற தன் எண்ணம் பலித்ததற்கு ஆனந்த நடனம் ஆடினார் சர்ச்சில்.

சர்ச்சிலின் குள்ளநரித் தந்திரம் இந்தியாவைப் பிரிக்க வழிவகை செய்தது.

 

 

ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் இரண்டு பட்டது – பாகிஸ்தான், பங்களாதேஷாக.

 

இதுவும் போய் அகண்ட பாரதம் உருவாகும் என அரவிந்தர் கூறியுள்ளார். அதைக் காலம் தான் மெய்ப்பிக்கும்!

***

Leave a comment

5 Comments

  1. nparamasivam1951's avatar

    nparamasivam1951

     /  June 3, 2018

    பதிவு நன்றாக இருந்ததால் எனது டிவிட்டரில் (உங்கள் பெயரில்) டிவிட் செய்துள்ளேன். சரி தானே சார்.

  2. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    சுதந்திரப் போராட்டம்,இரண்டாம் உலகப் போர் இவை நடந்த சமயத்தில் நிகழ்ந்த பல செயல்கள். பலர் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஜீரணிக்கவும் இயலவில்லை! அவற்றில் சில விஷயங்கள்:
    – ரூஸ்வெல்ட்டும் சர்ச்சிலும் நெருக்கமானவர்கள். ஆனால் இந்திய சுதந்திர விஷயத்தில் இரு துருவங்கள்! சர்ச்சிலின் ஹிந்து வெறுப்பு எவ்வளவு தீவிரமானது என்பதை ஒரு நிகழ்ச்சியால் அறியலாம், வங்காளத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, அமெரிக்கா உணவுதானியங்களை கப்பலில் அனுப்பியது; ஆனால் சர்ச்சில் அதை மறித்து வங்காளத்தில் மக்களுக்குக் கிடைக்காமல் செய்தார். லட்சக்கணக்கான மக்கள் வங்காளத்தில் மடிந்தனர்- சர்ச்சில் கவலைப்படவில்லை. யூதர்களைக் கொன்ற ஹிட்லருக்கும், வங்காள இந்தியர்களைக்கொன்ற சர்ச்சிலுக்கும் என்ன வித்தியாசம்?

    ஸ்டாலினை நம்பவேண்டாம் என சர்ச்சில் ரூஸ்வெல்டை எச்சரித்தார்; ஆனால் அதை ரூஸ்வெல்ட் பொருட்படுத்தவில்லை. ஸ்டாலின் ஐரோப்பாவின் பல பகுதிகளை ஆக்ரமித்து, ஜெர்மனியைப் பிரித்து ,உலக அளவிலேயே தாக்கம் ஏற்படுத்தினார். 1989 சோவியத் ரஷ்யாவின் மறைவுவரை உலகம் பாதிக்கப்பட்டது!

    – சர்ச்சில் ஒரு சரித்திர நாயகன் : ஜெர்மனியைப் பற்றி பல வருஷங்களாக எச்சரித்துவந்தார் ஆனால் சண்டைப்பிரியர் என அவரைக்கருதினர்,
    சர்ச்சிலுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது. இவர் 1924ல் நிதிமந்திரியாக ஆனதும், முதல் உலகப் போருக்கு முன் இருந்த, தங்கத்தை மையமாகக் கொண்ட பன்னாட்டு செலாவணி முறையை Gold Standard மீண்டும் அமலுக்குக் கொண்டுவந்தார். உலகம் முழுவதையும் பாதித்த Great Depression (!929-33).தோன்ற இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

    இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பிறகு, இவர் தலைமையை விரும்பி ஏற்றார்கள்.அவர் அமைத்த கூட்டு அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்தவர், Hugh Dalton என்ற தொழிற்கட்சி பொருளாதார அறிஞர்.

    -பல சமயங்களில், பல இடங்களில் சர்ச்சில் அபாயத்திலிருந்து ஆச்சரியமாகத் தப்பியிருக்கிறார்.ஆனால் இதன் பின்னணியில் ஸ்ரீ அரவிந்தர் இருந்திருக்கிறார்! பொதுவாகவே, இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து தோற்காமல் இருக்க ஸ்ரீ அரவிந்தர்-அன்னையார் ஆகியோரின் தெய்வீக ஆதரவே காரணமாகும். இதை விளக்கி ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திலிருந்து வரும்
    Mother India பத்திரிகையில் பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. அவற்றில் சர்ச்சிலின் செகரடரியாகப் பணியாற்றியவரின் நேரிடை அனுபவம் பற்றியும் குறிப்பு வருகிறது. மேலும், பல சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு சக்தி தன்னைக் காப்பாற்றியதாக சர்ச்சிலே கூறியிருக்கிறார்.

    – ஸ்ரீ அரவிந்தர் ஏன் கிரிப்ஸ் தூதை ஆதரித்தார்? கிரிப்ஸால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை அவரும் அறிவார். ஆனால் அதை ஆதரித்திருந்தால், இந்தியாவிற்கு எதிராகச் செயல்படும் சர்ச்சிலுக்கு ஒரு முட்டுக்கட்டை ஆகியிருக்கும்! ஆக, கிரிப்ஸ் மிஷனை ஆதரிக்காததால் , காந்திஜி சர்ச்சிலின் வலையில் விழுந்தார்!

    -கிரிப்ஸ் சார்ந்த தொழிற்கட்சி இந்திய சுதந்திரத்தை ஆதரித்தது, அட்லி தலைமையில் அக்கட்சியே 1945 தேர்தலில் சர்ச்சிலின் கட்சியைத் தோற்கடித்தது. சர்ச்சில் தனிப்பட வெற்றிபெற்றாலும், அவர் கட்சியை மக்கள் ஆதரிக்கவில்லை, போர்க்காலத்தில் திறமையாக இருந்தாலும், சமாதான சமயத்தில் சர்ச்சிலின் தலைமை சரியில்லை என மக்கள் நினைத்ததே இதற்குக் காரணமெனச் சொல்லப்பட்டது.

    – இந்தியா சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காமன்வெல்த் மகாநாட்டிற்கு பிரதமர் நேரு இந்திராவுடன் சென்றிருந்தார். சபையில் சர்ச்சிலுக்கு அடுத்து இந்திரா அமர்ந்திருந்தார். அவருடன் பேசிய சர்ச்சில், தான் இந்தியர்களுக்கு எதிராகவே செயல்பட்டிருந்தாலும் நேருவோ இந்திராவோ தனக்கு எதிராக வெறுப்பைக் காட்டவில்லையே என வியப்பு தெரிவித்தார்!
    [ அவர் மனச்சாட்சியே உறுத்தியது போலும்! இதனால்தான் ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ என்கிறோமோ?] இதற்கு பதிலாக, ‘எங்களை வளர்த்த தலைவர் எங்களுக்கு அன்பையே போதித்தார்’ என இந்திரா சொன்னாராம்!. ( ஆனால் எமர்ஜென்ஸியின் போது இதே இந்திராவே பல மூத்த தலைவர்களை சிறையிலிட்டார்.]

    இப்படி, தலைவர்களின் வாழ்க்கை ஒளியும் இருளும் கலந்தே இருக்கிறது!

  3. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    ஒரு திருத்தம். Hugh Dalton served in Churchill’s War cabinet as ‘Minister of Economic Warfare’ ( a special ministry) in 1940 to 1942. In 1942, he was appointed as the President of the Board of Trade . He became Chancellor of the Exchequer in 1945 under Attlee. He casually spoke a sentence out of his budget speech to a journalist , just before the budget was presented in 1947. So he resigned.
    He was a theoretician. In his book on Public Finance, which is a landmark, he has written a special chapter on managing finance during the War.

  4. nparamasivam1951's avatar

    nparamasivam1951

     /  June 3, 2018

    இப் பதிவின் மூலம் இரண்டு உண்மைகள் இப்போது தெரிகிறது. (1) இந்தியாவின் மேல் அநுதாபத்தை கொண்ட கிரிப்ஸை காந்திஜி ஆதரிக்காது இந்தியாவை வெறுத்த சர்சிலுக்கு ஆதரவு அளிக்கப் பட்டது. (2) இந்தியாவை இரண்டாகப் பிளந்தவர் ஆனாலும் ஹிந்து மதம் வெறுப்பாளர் என்ற முறையில் சர்ச்சிலை நேரு ஆதரித்தார். இது எனது கருத்து மட்டுமே.

  5. Santhanam Nagarajan's avatar

    பரமசிவம் சார்! தாராளமாக பதிவிடலாம். கட்டுரையாளர் பெயர், இணையதளம் http://www.tamilandvedas.com – இரண்டையும் குறிப்பிட்டால் சரி.
    நஞ்சப்பா சார்
    அருமையான பதிவு. நிறைய அரவிந்தரைப் பற்றி எழுத வேண்டும். அவரைப் பற்றி வரிசையாக இல்லாமல் அன்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் தொகுப்பதில் சிரமம் இருக்கிறது. என்றாலும் எழுதித் தான் ஆக வேண்டும். நிரோத் பரன், திலிப் குமார் ராய். பண்டிட், கபாலி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் எழுதியதையும் தொகுக்க வேண்டும் – சப்ஜெக்ட்வாரியாக. முயற்சி செய்கிறேன்.
    கிரிப்ஸ் நல்லவர். இந்திய அனுதாபி. என்றாலும் அவரால் பேப்பரில் தான் சலுகைகளும் உரிமைகளும் தர முடியும் என்ற முடிவுக்கு காந்திஜி உட்பட அனைவரும் வந்ததே அவர் தூது தோல்வி அடைந்ததற்கான காரணம்.

Leave a comment