
Written by London swaminathan
Date: 11 JUNE 2018
Time uploaded in London – 13-37 (British Summer Time)
Post No. 5099
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)
கோகுலாஷ்டமிக்கும் குலாம்பாய்க்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,அப்துல் காதருக்கும் அமாவாஸைக்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,ராம நவமிக்கும் ரஹீமுக்கும் தொடர்பு உண்டோ இல்லையோ, அமெரிக்கப் பாம்புக்கும் கம்பன் சொன்ன ராமாயண வானரப் படைக்கும் கட்டாயம் தொடர்பு உண்டு!
ஞாயிற்றுக் கிழமை தோறும் நாங்கள் லண்டன் நேரம் காலை 7-30 முதல் 9 மணி வரை ஸ்கைப்பில் (Skype) நடத்தும் கம்பராமாயண வகுப்பில் பல விஷயங்களை அலசுவோம். இந்த வாரம் கம்பராமாயணப் பாடலில் இரண்டு சுவையான விஷயங்கள் விவாதத்துக்கு வந்தன.
கம்பன் சொல்கிறான்:
ஒளிவீசும் தீப்பொறி கக்கும் விழிகளை உடைய குரங்குப் படைகள் கையில் எடுத்த மரங்கள் அரக்கப் படை வீசிய அம்புகளால் துண்டாயின. அரக்கர்கள் வீசிய அம்புகள், வானரங்களின் நெஞ்சில் ஊடுருவ அவை இறந்து விழுந்தன; அந்த நிலையிலும் அரக்கர்களை கடித்து அவர்களைக் கொன்று தாமும் இறந்தன (அதாவது செத்தும் கடித்தன அல்லது சாவதும் கடிப்பதும் ஒருங்கே நிகழ்ந்தன).
இதோ யுத்த காண்ட நாகபாசப் படலப் பாடல்:-
சுடர்த்தலை நெடும்பொறி சொரியும் கண்ணன
அடர்த்து அலை நெடும் மரம் அற்ற கையன்
உடர்த்தலை வைரவேல் உருவ உற்றவர்
மிடற்றினைக் கடித்து உடன் விளிந்து போவன.

இதே போல அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் நடந்தது.
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகானத்தில் கார்ப்பஸ் கிறிஸ்டி என்ற Corpus Christi, Texas, USA) ஊருக்கு அருகில் ஒரு பெண்மணி வீட்டிற்குப் பின்புறமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது கிலுகிலுப்பைப் பாம்பு (Rattle Snake) ஒன்று தலைப்பட்டது.
சாரைப் பாம்பு போன்ற இத்தகைய பாம்பு வாலை ஆட்டு போது கிலுகிலுப்பை ஒலி உண்டாகும்.
அந்தப் பெண்மணி ‘பாம்பு, பாம்பு’ என்று அலறிய உடன், கணவர் ஓடோடி வந்து அருகிலுள்ள மண்வெட்டியால் பாம்பின் தலையில் ஒரு போட்டு போட்டார். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகியது. அவர் பெயர் மியோ சட்க்லிப். அவருக்கு பெருமை தாங்கவில்லை. பாம்பின் தலையருகே போனார். துண்டாகிக் கடந்த தலை அவர் மீது பாய்ந்து கடிக்கவே அவர் உடலில் விஷம் ஏறி மயங்கி விழுந்தார். உடனே விமான ஆம்புலன்ஸ் வந்து அவ ரைத் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாக உ யிர் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
கம்பன் பாடலில் சாகும் அல்லது செத்த குரங்குகள் கடித்து, அதுவும் இறந்தது; கடிபட்ட அரக்கனும் இறந்தான் என்று சொன்னது மெய்யே; அவன் கண்ணால் கண்டதை எழுதுகிறான்.; காட்டு வழியாகப் போகும் போது இத்தகைய காட்சிகளைப் பார்த்து இருப்பான் போலும்!

கரடி தின்ன Sweet Dinner ‘ஸ்வீட் டின்னர்’
இன்னொரு பாட்டில் யானைகளின் மூளைகளை கரடிகள் தின்னதாகச் சொல்லி அது அவைகளுக்கு இனிய உணவாக/ விருந்தாக அமைந்தது என்கிறான். கரடிகள் பெரும்பாலும் மீன், புழுப்பூச்சிகளை த் தின்னும். ஆனால யானை போன்றவற்றின் மூளைகளைத் தின்னுவதாக கம்பன் சொல்லும் காட்சியையும் அவன் கண்ணால் கண்டான் போலும்.
கம்பராமாயண, யுத்த காண்ட, நாக பாஸப் படலத்தில் சொல்கிறான்:
போர் புரியும் கரடிகள், மலைகளைத் தாக்கி அழிக்கும் இடிகள் போலத் தொடர்ந்து சென்று, மதம் பொழியும் யானைகளின் தலைகளைப் பிளந்தன. அதனால் வெளிப்பட்ட மூளைகளை இனிமையாகத் தின்று பசி என்னும் தீயை அனைத்தன.
அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்
தொடர்ந்தன மழை பொழி தும்பிக் கும்பங்கள்
இடந்தன மூளைகள் இனிதின் உண்டன
கடந்தன பசித் தழல் கரடி காதுவ
இப்படிப் போகிற போக்கில் வன விலங்குகள் பற்றியும் கம்பன் சொல்லுவது ராமாயணச் சுவையைக் கூட்டுகிறது.

வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!!
–சுபம், சுபம்—