
Written by S NAGARAJAN
Date: 18 JUNE 2018
Time uploaded in London – 7-32 am (British Summer Time)
Post No. 5123
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
தேசம், தெய்வம், தமிழ் போற்றிய உத்தமர்கள்
பிள்ளைமார் வாழ்க! – 2
ச.நாகராஜன்
6
பிள்ளைமார் வாழ்க என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை (எண் 4566) 31-12-2017 அன்று வெளியிடப்பட்டது.
வந்தது ஒரு விமரிசனக் கடிதம்.
சரியாகத் தெரிந்து கொண்டு எழுதுங்கள் என்பது தான் சாரம்.
உத்தமர்களைப் புகழ்ந்து எழுதப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.
விவரம் என்ன என்று ஆராய ஆரம்பித்ததில் பிள்ளைமார் என்பதில் சுமார் 20க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன என்று தெரிய வந்தது.
நல்லவர்கள் எல்லோரையும் இனம் காட்டி அவர்களைப் போற்றுவதற்காக எழுதப்பட்ட கட்டுரை அது.
வேற்றுமைகள் இருப்பின் அதை மறந்து புகழ வேண்டிய குணங்களை இனம் கண்டு புகழ வேண்டும்; போற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
விக்கிபீடியாவில் பிள்ளைமார் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளது.
7
பிள்ளைமார் என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால் போற்ற வேண்டியவர்களின் பட்டியல் மிக நீளமானது. (தயவுசெய்து உட்பிரிவுகள் இருப்பின் அதை மறக்க வேண்டுகிறேன்.)
மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, எஸ்.வையாபுரி பிள்ளை, வ.சு.செங்கல்வராயன் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், அகிலன், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, பரலி சு.நெல்லையப்பர், செண்பகராமன் பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, மறைமலை அடிகள் என நீண்டு கொண்டே போகும் இந்தப் பட்டியல்.

தேசத்திற்கும், தெய்வீகத்திற்கும், தமிழுக்கும் பிள்ளைமார் சமூகம் ஆற்றிய தொண்டைப் புகழ வார்த்தைகளே இல்லை.
பிள்ளை என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் என்றார் ஜெயகாந்தன்.
இதையே பிள்ளைமார் குலத்தில் பிறந்த அனைவரும் சொல்வார்கள் – ஏனெனில் குலப் பெருமை அப்படி இருப்பதால்!
எல்லோரையும் பற்றி எழுதுவது என்றால் அது ஒரு பிள்ளைமார் என்சைக்ளோபீடியா ஆகி விடும்.
ஆகவே சுருக்கமாகச் சிலரைப் பற்றி இங்கு பார்க்கலாம். இந்தத் தொடர் கட்டுரையை இத்துடன் முடிக்கலாம்.
8
வ.உ.சி. (தோற்றம் 5-9-1872 மறைவு 18-11-1936)
கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தத்ரூபமாக வ.உ.சி-ஐ நம் மனக்கண் முன்னே நிறுத்தினார்.
பார்த்தவர்கள் மனம் கலங்கியது.
செக்கிழுத்த செம்மலை எப்படிப் புகழ்வது?
மஹாகவி பாரதியாருடனான அவரது நெருங்கிய தொடர்பை யாரும் மறக்க முடியாது.
அழியாத அமர வரிகளால் பாரதியார் அவரை தனது பாடல்களில் சித்தரித்து விட்டார்:
கலெக்டர் விஞ்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லியது
ராகம் – தாண்டகம் தாளம் – ஆதி
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய், கனல் மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்; – வலி காட்டுவேன். (நாட்டி)
கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய், – எமை தூஷித்தாய்,
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய், – பொருள் ஈட்டினாய் (நாட்டி)
கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய், – சட்டம் மீறினாய்,
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய், – வீரம் பேசினாய் (நாட்டி)
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய், – புன்மை போக்கினாய்,
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய், – ஆசை ஊட்டினாய் (நாட்டி)
தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய், – புகழ் வேண்டினாய்,
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய். – சோர்வை ஓட்டினாய் (நாட்டி)
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய், – விதை தூவினாய்,
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ? – நீங்கள் உய்யவோ? (நாட்டி)
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
சொல்லுவேன், – குத்திக் கொல்லுவேன்
தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
தள்ளுவேன், – பழி கொள்ளுவேன். (நாட்டி)
கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோ ம் – இனி அஞ்சிடோ ம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? – தெய்வம் பார்க்குமோ?
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் – முடி தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ? – அவ மானமோ?
பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ? – நாங்கள் சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ? – உயிர் வெல்லமோ?
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ? – பன்றிச் சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? – இத்
நீதமோ? – பிடி வாதமோ?
பார தத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ? – மனஸ் தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ? – இதில் செற்றமோ?
ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோ ம் – நன்கு தேர்ந்திட்டோ ம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
மலைவு றோம்; – சித்தம் கலைவுறோம்.
சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? – ஜீவன் ஓயுமோ?
இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ? – நெஞ்சம் வேகுமோ?
பாடலை விளக்கவும் வேண்டுமோ?

நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்த பிள்ளை அவர்களை இந்தியர்கள் – குறிப்பாகத் தமிழர்கள் ஒருநாளும் மறக்க மாட்டார்கள்.
*
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (தோற்றம் 19-10-1888 மறைவு 24-8-1972)
காந்தியக் கவிஞர் என்று புகழ் பெற்ற இவரது பாடல்கள் ஏராளமானோரை பரவசப்படுத்தியது; ஊக்கப்படுத்தியது!
*
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (தோற்றம் 27-7-1876 மறைவு 26-9-1954) குமரி மாவட்டத்தில் தேரூரில் வாழ்ந்த தமிழ்க் கவிஞர். ஏராளமான தேசியப் பாடல்கள், குழந்தை இலக்கியப் பாடல்கள் என பல துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்

*
ஆக தமிழுக்குத் தொண்டு செய்த பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழர்கள் மறக்க முடியாத சமூகம் பிள்ளைமார் குலம் என்று கூறலாம்.
இறுதியாக கட்டுரையை இந்த வரிகள் மூலம் முடிக்கலாம்:
நல்ல நல்ல ‘பிள்ளைகளை’ நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி!
***