காலத்தை உறைய வைக்கும் புகைப்பட நிபுணர்! – 3 (Post No.5133)

Written by S NAGARAJAN

 

Date: 21 JUNE 2018

 

Time uploaded in London –  6-45 am  (British Summer Time)

 

Post No. 5133

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 22-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதினாறாம்) கட்டுரை

காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 3

.நாகராஜன்

 

மனிதனின் புலன்கள் வழியாக அவன் பெறும் அறிவு மிகவும் குறைவு என்று கூறுகிறார் மக்யார். அவர்கள் எப்படி சூழ்நிலைக்குத் தக்கபடி இருக்கிறார்கள் என்பதை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். எதைச் செய்தாலும் கூட நமது அறிவு மிக மிகக் குறைந்த அளவாகவே இருக்கிறது என்பது அவரது அனுபவ உரை.

தனது ஸ்கேனர், கேமரா ஆகியவற்றை அவரே தயாரித்துக் கொள்ள ஆரம்பித்தார். ஒரு மனிதரின் உடல் பாகங்களை பல முறை துண்டு துண்டாகப் போட்டோ எடுத்து அதைப் பின்னர் முழு மனிதனாக அசெம்பிள் செய்ய ஆரம்பித்தார். மக்கள் கூட்டம் அலை அலையாக ஊர்ந்து செல்லும் போது அவரது ஸ்கேனரும் கேமராவும் விளையாட ஆரம்பித்தது.

ஒலிம்பிக் போட்டிகளில் இறுதியாக வென்றவரைக் கண்டு பிடிக்கும் ‘ஸ்லிட் ஸ்கேன்’ கேமரா பல்லாயிரம் டாலர் விலை கொண்டது. இதைத் தானே தயாரிக்க எண்ணினார் மக்யார். மீடியம் ஃபார்மட் கேமரா லென்ஸுடன் இன்னொரு சென்ஸரை இணைத்து அதற்கான கணினியின் மென்பொருளைத் தானே எழுதித் தயாரித்தார் அவர். மொத்தச் செலவு ஐம்பதே டாலர் தான்!

ஸ்கேன் செய்ய வேண்டிய ஒரு ஆவணத்தை ஸ்கேனரில் நிலையாக வைத்து விட்டு ஸ்கேனர் அந்த ஆவணத்தின் மீது ஊர்ந்து செல்லும். இது தான் சாதாரணமான ஸ்கேனரின் செயல்பாட்டு முறை. ஆனால் மக்யாரோ இதை மாற்றி, சென்ஸரை நிலையாக வைத்து ஸ்கேன் செய்யப்பட வேண்டிய விஷயத்தை இயக்கத்தில் இருக்கும் படி மாற்றினார்.

ஷாங்காய் நகரத்தில் அவர் சாலை வழியே செல்லும் பயணிகளை இப்படி ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார். ஒரு லட்சம் தொடர் காட்சிகளை துண்டு துண்டாக எடுத்து அதை ஒரு முழுப் புகைப்படமாக்கினார். இதன் விளைவாக அர்பன் ஃப்ளோ (Urban Flow) என்ற ஒரு அடி உயரமும் எட்டு அடி நீளமும் உள்ள போட்டோக்கள் உருவாக ஆரம்பித்தன. இதில் வேகமாகச் செல்லும் பஸ்கள் கார்களாக சுருங்கின. பஸ்களோ மெட்ரோ ரயில் போல நீளமானது. மெதுவாக நடந்த மனிதர்களின் கால்கள் பெரிதாக ஆனது.

ஷாங்காய் நகரில் மக்யாரைச் சந்தித்த தோர்குல் என்பவர் இப்படிப்பட்ட போட்டோ விசித்திரங்களைக் கண்டு மயங்கிப் போனார். மக்களோ அசத்தலான போட்டோக்களை போட்டி போட்டு வாங்கலாயினர். நம்ப முடியாத விலையான 700 டாலர் (சுமார் 46900 ரூபாய்கள்) முதல் 1400 டாலர் வரை கொடுத்து ஒவ்வொரு போட்டோவையும் அனைவரும் வாங்கினர்.

இதனால் உற்சாகமடைந்த மக்யார் தனது அடுத்த ப்ராஜெக்டாக ஸ்டெயின்லெஸ் என்ற திட்டத்தைத் தொடங்கி பாரிஸ், டோக்யோ, நியூயார்க் முதலிய நகரங்களில் உள்ள சப்-வே ஸ்டேஷன்களில் படம் எடுக்கலானார். இதில் பிரம்மாண்டமானஒரு உண்மை வெளியானது. எந்த நாடானாலும் சரி, எந்த ஸ்டேஷனாலும் சரி மக்கள் ஒரே விதமான உருவத்துடனும், ஒரே விதமான முக பாவத்துடனும், அணுகு முறையுடனும் இருக்கின்றனர். நாடு, இனம்.மொழி இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒற்றுமையைக் காண முடிகிறது என்பதே அந்த உண்மை!

தனது படப்பிடிப்பிற்காக சரியான வெளிச்சத்தை நிர்ணயிக்க தனது லைட்-மீட்டருடன் 290 ஸ்டேஷன்களிலும் அவர் ஒரு வாரம் அலைந்தார். ஐந்து ஸ்டேஷன்களில் மட்டுமே ஹை – ஃப்ரீக்வென்ஸி லைட் இருந்தது.அங்கு தன் வேலையை அவர் தொடங்கினார். ரயிலுக்குள் அவரது போட்டோவிற்கான போதுமான வெளிச்சம் இல்லை; அதற்காக மூன்று மாத காலம் ஆராய்ந்து ஒரு மென்பொருளைத் தயாரித்தார். பிறகு வெற்றி பெற்றார். இவரது நலம் விரும்பியான தோர்குல், “ ஜென் புத்தமதப் பிரிவில் ஐந்து வருட காலப் பயிற்சிக்குப் பின்னரே ஒரு அம்பை குறி பார்த்து விட அனுமதி கிடைக்கும். ஐந்து வருட காலம் குறி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்! அதுவரை பயிற்சி பெற வேண்டியது தான்!! அது போலத்தான் மக்யாரும்! நன்கு தயாரான பின்னரே அவர் களத்தில் இறங்குவார்” என்கிறார்.

தனது ஸ்டெயின்லெஸ் திட்டத்திற்கு அடுத்தபடியாக ஜெர்மானிய கேமரா உற்பத்தியாளரான ஆப்ட்ரானிஸ் என்ற நிறுவனத்தை அணுகிய மக்யார் 16000 டாலர் பெறுமான ஒரு இண்டஸ்ட்ரியல் வீடியோ கேமராவைக் கடனாகத் தருமாறு கேட்டார். ஆப்ட்ரானிஸ் நிறுவனக் கேமராக்கள் ஒரு வினாடிக்கு ஒரு லட்சம் ப்ரேம்களை எடுக்கும் வேகத் திறன் படைத்தவை. சாதாரண கேமராக்களால் ஒரு வினாடிக்கு 24 ப்ரேம்கள் மட்டுமே எடுக்க முடியும்.

அதை வைத்து படங்களை எடுத்தார். மக்யார் சாதாரண வேகத்தை விட 56 மடங்கு அதிக வேகத்தில் தனது படங்களைப் பிடிப்பது வழக்கம். இதனால் 12 வினாடி படங்களை 12 நிமிட படங்களாக நீட்டிக்க முடியும். போனை உதடுக்குக் கொண்டு செல்லும் போது உதடு சுழலும் அசைவு கூட அவரது கேமராவில் துல்லியமாகப் பதியும்.

மில்லி செகண்ட் படப்பிடிப்பு அவருடையது. நிகழ்காலத்தை தத்ரூபமாகக் காட்டுகிறேன் என்கிறார் அவர்.

இப்போது அவரது படங்கள் ஒவ்வொன்றும் 14000 டாலர் (சுமார் 9,24000 ரூபாய்) என்ற விலையை எட்டி விட்டது.

காலத்தை உறைய வைத்து அனைவரையும் குதூகலப்படுத்தும் அற்புத புகைப்பட நிபுணராக இருக்கும் மக்யார் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்பதில் ஐயமில்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

வில்லியம் ஹால்ஸ்டெட் (William Halsted) என்பவர் அமெரிக்காவில் ஜான் ஹாப்கின்ஸ் மெடிகல் ஸ்கூலில் தலைமை அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்தார். 33 ஆண்டு அனுபவத்தால் அனைவராலும் மதிக்கப்பட்டு வந்த அவர் சற்று கண்டிப்பானவர். நர்ஸ்கள் மற்றும் டாக்டர்கள் அனைவரும் மருத்துவ மனையில் பணியாற்றும் சமயம் தங்கள் கைகளை மெர்குரிக் க்ளோரைட் கரைசலால் நன்கு கழுவிக் கொண்டே ஆபரேஷன் செய்யத் தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார். ஆபரேஷன் செய்யப்படும் நோயாளிகளுக்கு இவர்கள் மூலமாக எந்த விதமான தொற்றும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதாலேயே அவர் இதை வற்புறுத்தி வந்தார்.

1889ஆம் ஆண்டு ஒரு நாள் கரோலின் ஹாம்ப்டன் என்ற நர்ஸ் தனக்கு அந்த கரைசலைப் பயன்படுத்தினால் கையில் அரிப்பு ஏற்படுகிறது என்று அவரிடம் வந்து புகார் செய்தார். உடனே ஹால்ஸ்டெட் குட் இயர் ரப்பர் கம்பெனியிடம் ஒரு ரப்பர் க்ளவ்ஸை – கையுறையை – தயாரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். கையுறையும் வந்தது. நர்ஸின் பிரச்சினையும் தீர்ந்தது.

இதைப் பார்த்த மற்ற நர்ஸ்கள் அனைவரும் தங்களுக்கும் அது போன்ற க்ளவ்ஸ் தேவை என்றனர். ஆகவே ஹால்ஸ்டெட் அனைவருக்கும் அதை ஆர்டர் செய்து வாங்கித் தந்தார். இந்தப் பழக்கம் தொடர ஆரம்பித்தது. இதை அறிந்த ஏனைய மருத்துவ மனைகளும் இந்த நடைமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தன.

சர்ஜிகல் க்ளவ்ஸ் நாளடைவில் பிரசித்தமாயிற்று. இன்றோ ரப்பர் க்ளவ்ஸ்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பல் டாக்டர்கள், சாதாரண நோயாளிகளுக்குச் சிகிச்சை தரும் டாக்டர்கள் என்று அனைவராலும் பயன்படுத்தப்படும்  இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது!

***

 

Leave a comment

Leave a comment