
Written by London swaminathan
Date: 2 JULY 2018
Time uploaded in London – 14-53 (British Summer Time)
Post No. 5173
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
“வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்” என்று வெற்றி வேற்கையில் அதிவீர ராம பாண்டியன் கூறுகிறார்.
கதாசரித் சாகரம் என்னும் உலகின் முதல் பெரிய கதைத் தொகுப்பு நூல் ஒரு சுவையான கதையைச் சொல்கிறது இது ஒரு ஸம்ஸ்க்ருத நூல்; கதைக் கடல் என்ற பெயரில் தமிழிலும் கிடைக்கும்.
வர்த்தகர்கள் கிடைக்கும் சிறு லாபத்தையும் மேலும் மேலும் முதலீடு செய்து வணிகத்தையும் லாபத்தையும் வளர்ப்பார்கள்.
பாடலிபுத்ரம் (பாட்னா, பீஹார்) நகரில் முன்னொரு காலத்திலொரு ஏழைச் செட்டி மகன் இருந்தான். அவன் பிழைக்க வழி ஏது என்று கருதிக் கொண்டிருந்தபோது ஒரு செத்துப் போன எலியைக் கண்டான். அதைக் கையில் தூக்கிக் கொண்டு போனபோது ஒருவன் பூனையைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். பூனைக்கு எலி மாமிசம் பிடிக்குமே விலைக்கு வேண்டுமா? என்று வினவினான். உடனே அவன் என்னிடம் இரண்டு உழக்கு பச்சைக் கடலை மட்டுமே உளது என்றான்.
அதற்கென்ன, ரொம்ப பேஷ்! இந்தா எலி என்று பண்டம் மாற்று செய்தான். அதைச் சுண்டல் சுண்டி ஒரு சாலை ஓரத்தில் கடை விரித்தான்.

அருகில் ஒரு தண்ணீர் பானையும் வைத்தான். சாலையில் விறகு சுமந்து செல்லுபவர்கள், “அப்பா, சுண்டல் என்ன விலை?” என்று வினவ, “அவன் பணம் ஏதும் வேண்டாம்’ ஆளுக்கு இரண்டு விறகு கொடுங்கள் போதும்” என்று சுண்டலைப் பொட்டலம் போட்டுக் கொடுத்தான். அத்தோடு இன்னும் கொஞ்சம் சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்து நாலணாவுக்கு விற்றான். பின்னர் அதற்குச் சுண்டல் கடலை வாங்கி பொட்டலம் போட்டு விற்கவே ஒரு மாதத்தில் ஏழரை ரூபாய் கிடைத்தது.
பிறகு விறகு வியாபாரத்தை ஒரு வருஷம் செய்யவே 300 ரூபாய் கிடைத்தது. பிறகு கடையை பெரிதாக்கி ஐந்தே வருஷங்களில் ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்தான். பிறகு அதை முதலீடு செய்து மளிகைக் கடை வைத்தான். பத்தே வருஷங்களில் ஊரே மதிக்கும் படி பணக்காரச் செட்டியானான் இருபது வருஷத்துக்குள் மிகப் பெரிய பணக்காரனானவுடன் அரசன் கூட அவனிடம் கடன் வாங்க வந்து நின்றான். அவன் எலியின் மூலம் இவ்வளவு பணம் சம்பாதித்ததால் அவன் பெயரே ‘எலிச் செட்டியார்’ என்று பிரபலமானது.

இது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸம்ஸ்க்ருதத்தில்
எழுதப்பட்ட நூல். ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு எடுத்துக் காட்டு
இந்தக் காலத்திலும் கூட உலகின் மிகப் பெரிய பணக்காரர் களில் ஒருவரான மித்தல் (Lakshmi Mittal) கதை இப்படித்தான்; பழைய இரும்புகளை வாங்கி விற்றவர், மூடப் போகும் இரும்பு ஆலைகளை வாங்கி லாபம் சம்பாதித்தார். பின்னர் பெரிய இரும்பு வணிகர் ஆனார். இன்று உலகின் பெரிய பணக்காரர் பட்டியலில் அவர் பெயர் உள்ளது.
‘முயற்சி திருவினை ஆக்கும்’ ( திரு = ஸ்ரீ= செல்வம்)
சுபம்.
nparamasivam1951
/ July 4, 2018நல்ல ஒரு சுய முன்னேற்ற கதை 👏