
Written by S NAGARAJAN
Date: 8 JULY 2018
Time uploaded in London – 5-52 AM (British Summer Time)
Post No. 5193
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
மஹாபாரதச் செல்வம் : ஸம்வாதம்
மரணம் உண்டா, இல்லையா? – திருதராஷ்டிரனின் கேள்வி?
ச.நாகராஜன்
1
மஹாபாரதம் ஐந்தாவது வேதம் என்று புகழப்படுகிறது. வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன் சாரத்தை மஹாபாரதம் தருகிறது. வேதங்களை அனைவரும் கற்று ஓத முடியாது; அதற்குரிய காலமும் போதாது. ஆனால் மஹாபாரதத்தை அனைவரும் படிக்கலாம். அதை படிக்க போதுமான காலமும் மனித வாழ்வில் உண்டு.
பல மர்மங்களை வேதம் மட்டுமே அவிழ்க்கிறது. அந்த மர்மங்களை மஹாபாரதத்தில் தேடிப் பார்த்தால் கிடைக்கும்.
மர்மத்தை அவிழ்க்கும் விடையும் கிடைக்கும்.
உத்யோக பர்வத்தில் நாற்பத்திரண்டாவது அத்தியாயம் ஸநத்ஸுஜாதருக்கும் திருதராஷ்டிரனுக்கும் நடந்த அருமையான சம்வாதம் ஒன்றை விளக்குகிறது.
அதன் சாரத்தை சுருக்கமாக இங்கே காணலாம்.

2
திருதராஷ்டிரன் : ஸநத்ஸுஜாதரே! மரணம் (மிருத்யு) என்பது இல்லையென்று நீர் உபதேசித்திருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். தேவர்களும் அசுரர்களும் மரணம் இல்லாமல் இருப்பதற்காக குருகுல வாசத்தை அனுஷ்டித்தார்களே; அவ்விரண்டில் எது உண்மை?
ஸநத்ஜ்ஸுஜாதர் : சிலர் கர்மாவினால் மரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் மரணம் இல்லை என்று சொல்கிறார்கள். மரணம் என்னும் மிருத்யு இருக்கிறான்; இல்லை என்கிற இரண்டும் சத்தியமாக இருக்கின்றன. சில வித்வான்களால் இந்த மிருத்யுவானது அனாத்மாவில் ஆத்ம புத்தியாகிய மோகமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நானோ ஆத்ம ஸ்வரூபத்திலிருந்தும் தவறுதலான அஞ்ஞானத்தை மிருத்யுவாக – மரணமாகச் – சொல்கிறேன். அதேபோல தன் ஸ்வரூபத்தில் இருக்கையில் தவறாமையை மோட்சமாகச் சொல்கிறேன். தவறுதலால் அசுரர்கள் அவமானத்தை அடைந்தார்கள். தவறாமையால் தேவர்கள் பிரம்மமானார்கள்.
மரணமானது பிராணிகளை புலி போலத் தின்பதில்லை. ஏனெனில் மரணத்தின் ரூபமானது அறியப்படுகிறதில்லை, அல்லவா? சிலர் இதைக் காட்டிலும் வேறாக யமனை மிருத்யுவாகவும், புத்தியில் வசிப்பவனாகவும், மரணமற்றவனாகவும், பிரம்மநிஷ்டனாகவும், அந்தத் தேவனைப் புண்ணியசாலிகளுக்கு சுகத்தையளிக்கிறவனும் பாவிகளுக்குத் துக்கத்தைக் கொடுக்கிறவனுமாகப் பித்ருலோகத்தில் ராஜ்யத்தை ஆள்பவனாகவும் சொல்கிறார்கள்.
இவனுடைய ஆணையால் மனிதர்களுக்குக் கோபமும் தவறும் லோபரூபமான மிருத்யுவும் உண்டாகின்றன.
அகங்காரத்தினால் சாஸ்திரங்களுக்கு விரோதமான வழிகளில் செல்கின்றவன் ஆத்மாவின் தியானத்தை அடைவதில்லை.

மோகத்தை அடைந்தவர்களான அவர்கள் அந்த மரணத்தின் வசமாகி, இங்கிருந்து பரலோகம் சென்று மறுபடியும் கீழே விழுகிறார்கள். பிறகு புலன்களை (கர்மங்களை) அனுசரித்து அவர்களைச் சுற்றுகின்றன. இதனால் மரணம் காரணமாக அவன் மிருத்யு ஆகிறான். அவர்களுக்குக் கர்மம் பயன் தரத் தொடங்குகின்றன. அவர்கள் அந்த கர்ம பயனில் விருப்பமுள்ளவர்களாகி அதனைத் தொடர்கிறார்கள்.
ஆகவே அவர்கள் மரணத்தைத் தாண்டுவதில்லை.
தேகத்தை எடுத்த ஒருவன் பரமாத்மாவை அடையக் கூடிய யோகத்தை அறியாததால் போகத்தின் சேர்க்கையை அடைகிறான். அது புலன்களுக்கு மகா மோகத்தை உண்டு செய்கிறது.
புலன்களின் சேர்க்கை புலன் இன்பத்தை நினைக்கச் செய்து அனுபவிக்கத் தூண்டுகின்றன. காமமும் குரோதமும் மூடர்களை மிருத்யுவுக்குக் கொடுக்கின்றன.
தீரர்களோ தைரியத்தினால் மிருத்யுவைத் தாண்டுகிறார்கள்.
எந்த வித்வான் விஷயங்களை (புலனின்பம் தொடர்பானவற்றை) தள்ளுகிறானோ அவனை மிருத்யுவானவன் பிடிப்பதில்லை.
காமங்களை அனுபவிக்கும் ஒருவன் காமங்களுடன் நசிக்கிறான்.
காமங்களை விட்டவன் எல்லா புண்ணிய பாவத்தையும் நாசம் செய்கிறான்.
இதோ பிராணிகளுக்கு அஞ்ஞான ரூபமான இருளாகிற நரகமானது காணப்படுகிறது. பிராணிகள், மோகத்தை அடைந்து மேலே பார்த்துக்கொண்டு பள்ளத்திற்கு எதிராய்ப் போவது போல ஓடுகின்றன. இவ்வுலகில் மூடனுடைய செய்கை போன்ற செய்கையில்லாத இந்த மனிதனுக்கு மிருத்யுவானவன் புல்லால் செய்யப்பட்ட புலி போல என்ன செய்வான்?
விஷயங்களை நினையாமல் இருப்பவன் வேறு ஒன்றையும் நினைப்பதில்லை. அப்போது மிருத்யுவானவன் புல்லால் செய்த பாம்பு போல ஆகிறான்.
கோபத்தாலும் லோபத்தாலும் உண்டான மோஹ பயங்களுடன் கூடிய இந்த ஆத்மாவே மிருத்யு.
இவன் உமது சரீரத்தில் இருக்கிறான்.
இவ்வித மிருத்யு உண்டாவதைத் தெரிந்து கொண்டு ஞானத்தில் இருப்பவன் இவ்வுலகத்தில் மிருத்யு பற்றிய பயத்தை அடைவதில்லை. அவனுடைய விஷயத்தில் மிருத்யுவானவன் மிருத்யுவின் விஷயத்தை அடைந்து மனிதன் நசிப்பது போல நசிக்கிறான்.

3
மரணத்தைப் பற்றி மஹாபாரதத்தில் பல இடங்களில் முக்கியமான கருத்துக்கள் இடம் பெறுகின்றன.
அதில் மிக முக்கியமான விஷயமாக சொல்லப்படுவது மரணம் ஏற்படுவது கோபத்தாலும் லோபத்தாலுமே என்பது தான்.
புலனின்பத்தால் ஏற்படும் கர்மங்களின் வழியே ஜனன மரணச் சுழல் ஏற்படுகிறது. விஷய தோஷங்களை விட்டவன் தீரனாகி மரணத்தை வெல்கிறான்.
தீரனுக்கு முன்னால் மிருத்யுவானது புல்லால் செய்த புலி. புல்லால் செய்த பாம்பு.
அருமையான இந்த உவமைகள் மூலம் ஸநத்ஸுஜாதர் வாயிலாக மரணபயத்தை வெல்ல வழி கூறும் மஹாபாரதம்,அந்த வழியைக் கடைப்பிடித்தால், அவர்களுக்கு மரணம் இல்லை, ஆனால் மிருத்யுவுக்கே மிருத்யு ஏற்படும் என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறது.
இந்தக் கருத்து பல இடங்களில் வெவ்வேறு விதமாகத் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறது.

ஐந்தாவது வேதமாகக் கொண்டாடப்படும் மஹாபாரதம் அனைவருக்கும் ஒரு வரபிரசாதம்!
***