கரூவூர் ஆநிலை- சுவையான வரலாறு! (Post No.5197)

Written by S NAGARAJAN

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London –   7-34 AM (British Summer Time)

 

Post No. 5197

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கொங்குமண்ட  சதகம்

பிரமனின் படைப்புத் தொழிலை காமதேனு செய்த தலம் கருவூர் திரு ஆநிலை

.நாகராஜன்

கருவூர் என்பது கொங்கு நாட்டுத் தலங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

கரூவூர் ஆநிலை என்று வழங்கப்படும் இதன் வரலாறு சுவையான ஒன்று. இது பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழினுள் ஒன்று. திருஞானசம்பந்தரின் பதிகம் பெற்ற தலம் இது.

கொங்கு தேசத்தில் இருபத்துநான்கு நாடுகள் உள்ளன.

அவையாவன: பூந்துறை நாடு, தென்கரை நாடு, காங்கேய நாடு, பொன்கலூர் நாடு, ஆறை நாடு, வாரக்கனாடு, திருவாவினன்குடி நாடு, மண நாடு, தலையனாடு, தட்டய நாடு, பூவாணியனாடு, ஆரையனாடு, ஒடுவங்க நாடு, வடகரை நாடு, கிழங்கு நாடு, நல்லுருக்கனாடு, வாழவந்தி நாடு, அண்ட நாடு, வெங்கால நாடு, காவடிக்கனாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, காஞ்சிக்கோயில் நாடு, குறும்பு நாடு ஆகியவையாகும்.

இவற்றில் கருவூர் ஆநிலை வெங்கால நாட்டில் உள்ளது.

திருஆநிலை என்று புகழப்படும் இது சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து பதிகளுள் ஒன்றாகும். கருவூர்த் தேவர் பிறந்த இடம். இறைவனின் திருநாமம் பசுபதிநாதர். இறைவி : சுந்தரவல்லி.

காமதேனு வழிபட்டதால் கோவிலுக்கு திருஆநிலை என்று பெயர் ஏற்பட்டது

இதைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 11ஆம் பாட்டில் புகழ்ந்துரைக்கிறது இப்படி:-                                                            

 

வீழுஞ் சடையார் பசுபதி யீச்சுரர் வெண்ணெய்மலை                 

சூழும் புகழொடு தோற்றிய நாடொழு தர்ச்சிக்கநீ

ராழுங் கடல்புவி யண்டமெ லாமுற வண்டர்தொழ

வாழும் பசுவுற் பவமான துங்கொங்கு மண்டலமே

 

 

இதன் பொருள் : பசுபதி ஈஸ்வரரைப் பூஜித்து கடல் சூழ்ந்த பூமியையும் மற்றுமுள்ள அண்டங்களையும் பிரம்மாவைப் போல படைத்தல் தொழிலைச் செய்த காமதேனு பிறந்தது வெண்ணெய் மலை சூழ்ந்த கருவூர். அது உள்ளது கொங்கு மண்டலமே.

 

கருவூரின் வரலாறு : ஒரு காலத்தில் காமதேனு கருவூர்ச் சிவபெருமானைப் பூசித்து வணங்கி வந்தது. பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்வதால் கர்வம் மிகப் பெற்றார். அதை அடக்க,  பிரமதேவனைப் போல படைக்கும் ஆற்றலைப் பெறுவாய் என சிவபிரான் காமதேனுவிடம் திருவாய்மலர்ந்தருள, அவ்வாறே காமதேனு அந்த ஆற்றலைப் பெற்று சராசரங்களை முன்போலப் படைத்தது. அக்கருவூருக்கு வடதிசையில் புசிப்பு நிமித்தம் வெண்ணெய் மலையென ஒன்று வகுத்துப் பூசித்துக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த தலத்திற்கு திரு ஆநிலை என்று பெயர் வழங்கி வரலாயிற்று.

 

இந்தத் தலத்தைப் பற்றி கரூர்ப் புராணத்தில் வரும் பாடல் வருமாறு:-

வருதிநீ சுரபி தொல்லை மறையவன் போல வேலை        

பொருதிரை யாடை ஞாலத் தெமையருச் சனைபு ரிந்து                   

 தருகுதி சராச ரங்க ளனைத்தையு மென்முன் றாழா              

விரைமலர் தூவித் தேநு விடையோடும் போயிற் றன்றே               

  • கரூர்ப் புராணம்

கொங்கு மண்டலச் சதகம் போற்றும் திரு ஆநிலை இன்று கரூர் என்று புகழ் பெற்று விளங்குகிறது.

***

 

 

Leave a comment

Leave a comment