
Written by S NAGARAJAN
Date: 19 JULY 2018
Time uploaded in London – 7-06 AM (British Summer Time)
Post No. 5235
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
சக்தியும் சிவனும் ஒன்று; சக்தியின்றேல் சிவன் இல்லை!
ச.நாகராஜன்

ஹிந்து மதம் விளக்கும் தத்துவங்களுள் மிக முக்கியமான தத்துவம் சிவனும் சக்தியும் ஒன்றே; சக்தியின்றேல் சிவன் இல்லை என்பது தான். பெண்மைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தலையாய சிறந்த மதம் ஹிந்து மதமே.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த தத்துவத்தை அறியாதவர்கள் (மேலை நாட்டோரும் நம் நாட்டு செகுலரிஸ்டுகளும்) ஏராளம்.
இந்த சக்தி–சிவன் தத்துவத்தை விளக்கும் தலம் திருச்செங்கோடு.
திருச்செங்கோடு பழைய கால கொங்கு மண்டலப் பிரிவில் கீழ்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்தது. தற்காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.
இந்தத் தலத்தின் பெருமையை விளக்கும் பாடல் கொங்கு மண்டலச் சதகத்தில் 13வது பாடலாக அமைந்துள்ளது.
பாடல் வருமாறு:-
நெடுவா ரிதிபுடை சூழுல கத்தி னிமலியுமை
யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்
நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ
வடிவான துந்திருச்செங்கோடு சூழ்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : – கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் உமா தேவியாரோடு சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக ஒரு வடிவமாக திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலமே.

பாடல் விளக்கும் புராண வரலாறு மஹிமை வாய்ந்த ஒன்று.
கைலாயத்தில் சிவபெருமானை தரிசிக்க பிருங்கி முனிவர் வந்தார். பரம்சிவனைத் தவிர ஏனைய அனைத்துமே அழியும் தன்மையுள்ளன என்று அவர் நினைத்ததால் அவர் சிவ பெருமானை மட்டுமே வணங்குவார். ஆகவே அவர் உமையை வணங்காமல் சிவபெருமானை மட்டுமே வணங்கிச் சென்றார். இன்னொரு நாள் சிவபெருமானும் உமையும் ஒரே ஆசனத்தில் திருமேனி பிரிவு தோன்றாமல் இறுக அணைத்து அமர்ந்திருந்ததைக் கண்ணுற்றார். என்ன செய்வது என்று எண்ணிய பிருங்கி முனிவர் ஒரு வண்டின் வடிவத்தை எடுத்தார்.
கழுத்துச் சந்தின் வழியே சென்று சிவபெருமானை மட்டும் வலம் செய்தார். உமாதேவி சினந்து, ‘என்னை அவமதித்தாய்;ஆகவே என் கூறு ஆன பொருளை நீக்கி விடு’ என்று கூறினார்.உடனே ஊன் முதலியன பிருங்கி முனிவரின் சரீரத்தை விட்டு நீங்கவே, அவர் மயங்கி விழுந்தார்.
“கிரணம் இன்றி சூரியன் இல்லை; சூடின்றி நெருப்பில்லை; ஆதலின் சக்தி இன்றி சிவம் இல்லை; இந்த உண்மையை உணராது மயங்கி இருந்தாய்’ என்று அருளி பிருங்கியை சிவபிரான் எழுப்பினார்.
உண்மை உணர்ந்த பிருங்கி முனிவர் சிவபெருமானையும் பார்வதியையும் வணங்கி மகிழ்ந்தார்.
‘சிவம் வேறு; நாம் வேறாக இருப்பதால் அன்றோ இந்த முனிவன் நம்மை வணங்காமல் சென்றான்’ என்று எண்ணிய உமை, கேதாரம், காசி, காஞ்சி,திருவண்ணாமலை முதலிய தலங்களில் தவம் புரிந்து திருச்செங்கோட்டுத் தலத்தில் எழுந்தருளி கேதார விரதம் இயற்றினார். சிவ பரஞ்சுடரின் இடப்பாகத்தைப் பெற்று ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரராக விளங்கினார்.
திருச்செங்கோட்டு தலத்தின் இறைவன் பெயர் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்.
இறைவியின் பெயர் பாகம்பிரியாள்.
இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலம். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு இங்கு தனி சந்நிதி உண்டு. ஏராளமான சிறப்புகளைப் பெற்றது இந்தத் தலம் (விக்கி பீடியாவில் பட்டியலிடப்பட்ட இதன் சிறப்புகளைக் காணலாம்)
திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களின் ஒன்றைக் கீழே காணலாம்:
வெந்தவெண் ணீறணிந்து விரிநூறிகழ் மார்பினல்ல
பந்தணவும் விரவா ளொரு பாக மமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்செங் குன்றூர் ன்ற
அந்தணனைத் தொழுவா ரவல மறுப்பாரே

திருச்செங்கோட்டுப் புராணத்தில் வரும் ஒரு பாடல் இது:
பணிமலையி லெழுந்தருளிப் பரைக்கொருபா கங்கொடுத்த பரிசின் றோற்றம்
அணிமணித்தண் டூச்சியின்மூன் றங்குலியை வளைத்தமைத்த வனப்புக் கொப்பா
மணிவரைமா துமையிடத்து வைத்தணைத்து மகரகுழை வலத்தே நாலத்
தணிவிலொளி தயங்கியதண் டரளமணிந் தோடிரூபா லாகித்தானே.
தென்னாடுடைய சிவனே போற்றி |
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ||
***