‘பாரதி கண்ட சித்தர்கள்’– பாரதியார் நூல்கள் – 56 (Post No.5345)

WRITTEN BY S NAGARAJAN

Date: 21 August 2018

 

Time uploaded in London – 4-56 AM (British Summer Time)

 

Post No. 5345

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 56

சி.எஸ்.முருகேசனின் ‘பாரதி கண்ட சித்தர்கள்

 

ச.நாகராஜன்

 

புதுச்சேரி வாழ் பாரதி அன்பர் சி.எஸ். முருகேசன் எழுதியுள்ளபாரதி கண்ட சித்தர்கள் மகாகவி தன் வாழ்வில் கண்ட சித்தர்களை அறிமுகம் செய்யும் அழகிய நூல்.

190 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் முதல் பதிப்பு 2002ஆம் ஆண்டில் குறிஞ்சி, சென்னை-49இன் வெளியீடாக வந்துள்ளது.

     பாரதி சித்தர், ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள், கோவிந்த ஞானி, யாழ்ப்பாணத்துச் சாமியார் ஸ்ரீ கதிர்வேலு சுவாமிகள்,குள்ளச்சாமி சித்தர், கடற்கரையாண்டி, மௌனச் சாமியார், மிளகாய்ப் பழச் சாமியார், மகான் அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகிய பத்து அத்தியாயங்களை இந்த நூல் கொண்டுள்ளது.

புதுச்சேரியில் பல இடங்களுக்கும் சென்று பலரையும் சந்தித்து பாரதி கண்ட சித்தர்களின் சுவை மிகு வரலாற்றை ஆசிரியர் நூலில் நயம்படத்தொகுத்துத் தருகிறார்.

பாரதியை, தேசியக் கவிஞன் பாரதியாக, கதாசிரியன் பாரதியாக, கட்டுரையாளன் பாரதியாக, அரசியல்வாதி பாரதியாக, ஆன்மீகவாதி பாரதியாக, சீர்திருத்த செம்மல் பாரதியாக,பெண் விடுதலை கோரும் புரட்சியாளராக, பத்திரிகையாளராகப் பல பேர் கண்டாலும் சித்தன் பாரதியாக காணவில்லை என்னும் குறையை இந்த நூல் போக்குகிறது.

‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா,

யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டிலே’                  என்ற வரிகள் மூலம் தன்னை சித்தனாக அறிவித்துக் கொள்ளும் பாரதியார் பல சித்தர்களைக் கண்டு பல சுவையான அனுபவங்களையும் உபதேசங்களையும் பெற்றுள்ளார்.

பாரதியாரின் ஆத்ம பலத்தை விளக்கும் வகையில் அவர் வாழ்வில் நடந்த சுவையான மூன்று சம்பவங்களை விவரமாக நூலாசிரியர் முதல் அத்தியாயத்தில் தருகிறார்.

அதில் ஒரு பகுதி:

“விடிந்தால் பொங்கல் பண்டிகை. பாரதியின் கையிலோ பைசா கூட இல்லை. பண்டிகை நாளும் அதுவுமாக வீடு துடைத்துக்  கொண்டிருந்தது. பாரதியின் மனைவியான செல்லம்மாளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

 

கவிதைகளில் மூழ்கியிருந்த பாரதியாரிடம் தெரிவித்ததற்கு ‘எல்லாம் பராசக்தி பார்த்துக்குவாள்’ என்று சொல்லிவிட்டார்.

என்ன செய்வது. விதிப்படி ஆகட்டும் என்று அந்த அம்மாளும் சோர்வாக உட்கார்ந்து விட்டாள்.

அன்று மாலை புதுச்சேரி பிரபல ஜவுளிக் கடையின் முதலாளியான முதலியார் அனுப்பி வைத்ததாக பாரதியாருக்கு வேஷ்டி, துண்டு, குழந்தைகளுக்கான பாவாடை, சட்டை, அவர் மனைவிக்கான புடவை முதலியவற்றை ஒருவன் கொண்டு வந்து கொடுத்தான்,

இத்தனைக்கும் அந்த முதலியார் அவருக்குச் சாதாரண அறிமுகந்தான். நான் இப்படியொன்றும் கேட்கவில்லையேப்பா? என்று பாரதி சொல்லிப் பார்த்தார். ‘இது மாதிரி பெரியவங்களுக்கு எங்கள் முதலாளி அனுப்பி வைக்கிறது வழக்கமுங்க’ என்று சொல்லிக் கொண்டே போய் விட்டான்.

மற்றொரு கடைக்காரன் (கடற்கரை சிநேகம்) வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு யாவும் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனான்.

இவைகளைப் பார்த்து வீட்டிலுள்ளோர் அதிசயப்பட்டுக் கொண்டு இருந்தனர். பாரதியாருக்கு வேறொரு கவலை வந்து விட்டது. பண்டிகை முடிந்ததும் பால் பொங்கிற்றா? என்று கேட்டு வருபவர்களை எப்படி வெறுங்கையுடன் அனுப்புவது? யோசனையில் அவர் உழன்று கொண்டிருந்தார்.

 

அன்றிரவு ஊரே உறங்கிக் கொண்டிருந்த வேளையில் பாரதியார்  உறக்கமில்லாமல் தவித்தார். நடுநிசி. யாரோ கதவைத் தட்டினார்கள். பாரதியார் தான் சென்று கதவைத் திறந்தார். அவருக்கு அறிமுகமில்லாத ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

“இப்பொழுது தான் சொப்பனத்தில் பராசக்தி வந்து, என் கையிலிருக்கும் சில்லறையை உங்களிடம் கொடுத்து வரச் சொன்னாள்’ என்று சொல்லி ஐந்நூறு ரூபாய் சில்லறைப் பொட்டணத்தைப் பாரதியாரின் பாதங்களில் வைத்து நமஸ்கரித்தெழுந்தார்.

இதைக் கண்டு பாரதியாருக்குப் புல்லரித்துப் போயிற்று. அந்த ஆளைப் பற்றி விசாரித்ததற்கு ஏதோ முத்தியால் பேட்டை நெசவாளி என்று சொல்லிக் கொண்டு போய் விட்டார்.

அதன் பிறகு பாரதியார் தூக்கம் கலைந்து விளக்கைப் பெரிதாக்கி வைத்துக் கொண்டு பராசக்தி மேல் பாட்டு எழுத உட்கார்ந்து விட்டார். மறு நாள் பொங்கல் பண்டிகை அவர் வீட்டில் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.’ (இந்த சம்பவத்தை திரு சம்பந்தம் எழுதிய ‘புதுவையில் பாரதி’ – பக்கம் 181-182 இலிருந்து எடுத்துத் தருகிறார் நூலாசிரியர்)

இதே போல சித்தபிரமை பிடித்த புதுச்சேரி தமிழ் வித்வான் பங்காரு பத்தரின் மகனைச் சரியாக்கிய சம்பவமும் நூலில் விவரமாகத் தரப்பட்டுள்ளது.

ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள் வரலாறு பலரும் அறியாத ஒன்று. இவரைப் பற்றி பாரதியார் விளக்கமாக எழுதியுள்ளார். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறைச் சுருக்கமாக நூலாசிரியர் பல சம்பவங்களுடன் விவரிக்கிறார்.

1837ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமிகள் ஜீவ சமாதி எய்தினார்.

இன்றும் அவரது குருபூசை ஆண்டு தோறும் வைகாசி மாதம் 15ஆம் தேதி அவரது சமாதியில்- சித்தர் கோவிலில் – நடை பெறுகிறது.

கோவிந்த ஞானி என்ற அத்தியாயம் பாரதியார் பாடிய

‘வன்மை திகழ் கோவிந்த ஞானி – பார்மேல்

யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்’ என்ற வரிகளில் உள்ள கோவிந்த சித்தரைப் பற்றி விளக்குகிறது.

ஒருநாள் கருவடிக்குப்பத்தில் தனிமையில் பாரதியார் தனது தந்தையைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த கோவிந்தஞானி சித்தர் அங்கிருந்த குளத்து நீரில் அவரது தந்தையாரின் திருமுகத்தைக் காண்பித்தார். பின்னர் அவரது தாயாரின் வடிவத்தையும் பாரதியார் கண்டார்.

இதை அவர், “முனி ஒருநாள் இறந்த எந்தை தன்னுருவங் காட்டினான், பின்னே யென்னைத் தரணிமிசைப் பெற்றவளின் வடிவமுற்றான்” என்ற வரிகளால் குறிப்பிடுகிறார்.

 

யாழ்ப்பாணத்துச் சாமியார் ஸ்ரீ கதிர்வேலு சுவாமிகளைப் பற்றி நான்காம் அத்தியாயம் விவரிக்கிறது.

மாங்கொட்டைச் சாமி எனப்படும் குள்ளச்சாமி சித்தரின் தொடர்பு பாரதியாருக்கு அவர் புதுச்சேரியில் தங்கியிருந்த இறுதி நாட்களில் கிடைத்தது. ஸ்ரீ அரவிந்தரின் சீடர்கள் புதுச்சேரியில் அவருடன் கடற்கரையில் கூடியிருந்த ஒரு சமயத்தில் குள்ளச்சாமி பைத்தியத்துடன் உங்கள் நண்பர் பாரதியார் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று ஒரு சீடர் கூறிய போது அரவிந்தர், அவரை சாதாரண மானுடராக எண்ணாதீர்கள், அவர் ஒரு மகான் என்று கூறினார்.

அந்த சித்தர் பாரதியாருக்கு செய்த உபதேசம் பற்றிய சம்பவத்தை குள்ளச்சாமி சித்தர் என்ற அத்தியாயம் தருகிறது.

இன்னும் மௌனச் சாமியார் பற்றியும் பெண் சாமியாரான மிளகாய்ப் பழச் சாமியாரைப் பற்றியும் நூலில் காண்கிறோம்.

மகான் அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை ஆகிய அத்தியாயங்களில் சுவை மிகு தகவல்களைப் பெறுகிறோம்.

பாரதியாரின் கவிதா ஆவேசத்திற்கு ஸ்ரீ அரவிந்தரின் நட்பும் ஒரு முக்கிய காரணம். ரிக் வேத சூக்தங்களில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவற்றை அவரிடமிருந்து பாரதியார் கற்றார். பாரதியாரிடமிருந்து அரவிந்தர் தமிழ் மொழியைக் கற்றார்.

இப்படி பல தகவல்களை நூல் முழுவதும் காண முடிகிறது.

பாரதியாரைச் சித்தர் என்ற நோக்கில் பார்க்கும் இந்த நூல் பாரதி இயலில் ஒரு முக்கிய நூல். ஆய்வு செய்து இதை எழுதியுள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர்.

பாரதி அன்பர்கள் இதைத் தங்கள் பாரதி இயல் நூலகத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

***

Leave a comment

Leave a comment