கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை! (Post No.5399)

Research article written by by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 6 September 2018

 

Time uploaded in London – 18-55  (British Summer Time)

 

Post No. 5399

 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தமிழ்ப் பழமொழி. ஏன்?

தந்தத்திற்கு அவ்வளவு மதிப்பு. உலகெங்கிலும் இந்திய தந்தப் பொருட்கள் உள்ளன. இப்பொழுது இங்கிலாந்திலும், ரஷ்யாவிலும், மேலும் பல நாட்டு மியூஸியங்களிலும் இந்திய தந்தப் பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் பழங்கால எகிப்தில் இந்திய தந்தச் சிற்பங்கள் இருப்பது பற்றி எழுதியுள்ளேன். இதோ மேலும் சில சுவையான செய்திகள்.

இங்கிலாந்தில் இந்திய யானைத் தந்தம்

சென்னை அரும்பொருட் காட்சியகத்தின் சூபெரின்டெண்டாக இருந்த எட்வர்ட் தூர்ஸ்டன் ஒரு செய்தியைக் தெரிவித்ததார். கேரளத்தில் மன்னர் பரம்பரையில் வந்த ராம வர்மா ஒரு முறை ஐந்து அற்புதமான தந்தச் சிற்பங்களைப் பார்த்தார். அவற்றில் மனதைப் பறிகொடுத்து தந்த வேலை செய்யும் சிற்பிகளுக்கு பேராதரவு வழங்கினார். அவரை அடுத்து மன்னராக வந்த மார்த்தாண்ட வர்மா அதில் மேலும் ஈடுபட்டார். அவர் ஒரு பெரிய தந்த சிம்மாசனத்தைச் செய்து அதை  விக்டோரியா மாஹாராணிக்கு அனுப்பி வத்தை வைத்தார். உடனே பிரிட்டிஷார் அதை 1851 ஆம் ஆண்டு லண்டன் பொருட்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைத்துவிட்டு வின்ட்ஸர் அரண்மனைக்கு எடுத்துச் சென்றன்ர்.

லண்டனில் உள்ள மியூஸியங்களிலும் தனியாரிடமும் நிறைய தந்தக் கலைப் பொருட்கள் உள்ளன. மூக்குப்பொடி டப்பி முதல் ஆங்கில எழுத்துகளைச்  சிறுவர்களுக்கு கற்பிக்கும் அகரவரிசை வரை ஆயிரக்கணக்கான கலைப் பொருட்கள் இந்திய அரண்மனைகளிலும் இல்லங்களிலும் உள. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாஸ்கோவுக்குச் சென்ற பொழுது ஒரு பெரிய தந்த ஸ்க்ரீனை ரஷ்யாவுக்குப் பரிசாகக் கொடுத்தார். 1955ஆம் ஆண்டில் கொடுத்தது இப்பொழுதுஅங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

உலகம் முழுதுமுள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்து வந்த பிரிட்டிஷார், லண்டன் பிரிட்டிஷ் மியூஸியத்தில் அஸீரிய நாகரீக தந்த கலைப் பொக்கிஷத்தை வைத்துள்ளனர். ஹைதராபத்தில் சாலார் ஜங் மியூஸியத்தில் சிறப்புமிக்க கலை வேலைப்பாடுகள் மிகுந்த தந்த கைவினைப் பொருட்கள் காட்சியில் உள்ளன. பெரும் பணக்காரர்கள் சதுரங்கக் காய்களை தந்தத்தில் செய்தனர்.

மும்பையிலுள்ள பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூஸியத்தில் நிறைய தந்த கைவினைப் பொருட்கள் இருக்கின்றன. நாடு முழுதும், குறிப்பாக கேரளத்தில் நிறைய இடங்கள், தந்தச் சிற்பங்களுக்கு பெயர் போன ஊர்களாகும்.

சிந்து- ஸரஸ்வதி சம வெளி நாகரீக காலத்தில் பெண்கள் தந்தத்தினால் ஆன சீப்புகளைப் பயன்படுத்தியதும் தெரிகிறது.

அது மட்டுமல்ல தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியம் முழுதும் தந்தம் பற்றிய அரிய விஷயங்கள் இருப்பது எனது ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்

 

கி.மு இரண்டாம் நூற்றாண்டில் காளிதாசன் வாழ்ந்தான் என்று நான் சங்க இலக்கிய உவமைகள் மூலம் நிரூபித்தேன். உலகப் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாஸன் எழுதிய ரகுவம்ஸ காவியத்திலொரு அற்புதமான செய்தி வருகிறது:-

ரகு வம்ஸம் 17-21

மன்னன் அதிதி, நாற்கால் மண்டபத்தில் அமர்ந்து அபிஷேகம் செய்துகொண்டபின் உடை உடுப்பதாற்காக அருகிலோர் உள்ள மற்றோர் அறையில் வைக்கப்பட்டுள்ள யானைத் தந்த ஆசனத்தில் உட்கார்ந்தான் (17-21, ரகு வம்சம்)

 

யானைத் தந்த ஆசனம்= கஜ தந்த ஆசனம்

 

இதே போன்ற ஒன்றைத் தான் கேரள மன்னர் , விக்டோரியா மஹா ராணியாருக்கு   செய்து அனுப்பினார். சிற்ப வேலைகள் அனைத்தும் பரம்பரையாக கற்பிக்கப்பட்டதால் நூற்றாண்டுக் காலத்திலும் அது பெரிதும் மாறி இருக்காது என்று நம்பலாம்.

 

கலித்தொகையில் குறிஞ்சிக் கலியில் கபிலர் பாடலில் (40-2) பாடுகிறார்,

“வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து

ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்

சாந்த மரத்தின் , இயன்ற உலக்கையால்

ஐவன வெண்ணெல் அறி உரலுள் பெய்து

புலியால் கொல்லப்பட்ட யானையின் தந்தத்தை எடுத்து வந்து செய்த உலக்கை, மற்றும் சந்தன உலக்கையால் மூங்கில் நெல்லைக் குத்தியதாக கபிலர் பாடுகிறார்.

அகநானூற்றில் தொல்கபிலர் பாடிய பாடலில் (282), ஒரு வேடன் காட்டிலே யானையைக் கொன்று கொண்டு வந்த தந்தத்தால் தங்கத்தைத் தோண்டி எடுக்க முயன்றான். ரத்தினக் கற்களுடன் தங்கமும் வந்தது. அந்த நேரத்தில் கோடாரி போல பயன்பட்ட யானைத் தந்தம் ஒடியவே அதிருந்து முத்துக்களும் சிதறின என்கிறார் ( யானையின் மருப்பில்முத்துக்கள் இருப்பதாக , காளிதாசனும் தமிழ்ப் புலவர்களும் நம்பினர்)

 

“பெருமலைச் சிலம்பில் வேட்டம் போகிய

செறிமடை அம்பின் வல்வில் கானவன்

பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு

நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்

கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப

வைத்துதி வால் மருப்பு ஒடிய உக்க

தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு”

 

நல்ல கற்பனை! ஆயினும் அக்காலத்தில் வேடுவர்க்கு யானைத் தந்தம் கிடைத்ததால் அதைக் கொண்டு பல்வேறு பண்டமாற்றம் செய்த தகவல்களுமுள.

பாலி என்ற நகரில் ஒரு தெரு முழுதும் தந்த வேலைச் சிற்பிகள் இருந்தனர்.

 

சாஞ்சியில் கிடைத்த 2200 ஆண்டுப் பழமையான கல்வெட்டு விதிசா நகரில் இருந்த தந்த வேலை சிற்பிகள் பற்றி செப்புகிறது.

வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் கட்டில் கால்கள் தந்தத்தால் செய்யப்பட வேண்டும் என்கிறார். அதற்கெல்லாம் முன்னதாக வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அயோத்தியில் தந்த வேலைச் சிற்பிகள் இருந்தது பற்றிச் சொல்கிறார்.

 

சூத்ரகர் எழுதிய ‘மிருச்ச கடிகம்’ நாடகத்தில் ஒரு நாட்டிய மாதின் முற்றம் தந்தத்தால் ஆனதாகச் சொல்கிறார்.

 

ஹெர்குலேயம், பெக்ராம் (Herculeum, Begram) போன்ற வெளிநாட்டு நகரங்களில் இந்திய தந்தப் பொருட்கள் கிடைத்தன. சிந்துவில் பிராமணாபாத் நகரில் சதுரங்கக் காய்கள் கிடைத்தன.

 

ஆக இலக்கியமும் கல்வெட்டும் தொல்பொருத் துறை அகழ்வும் தந்தம் பற்றிப் பேசுவதால் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தந்த வேலையில் சிறந்து விளங்கியது தெரிகிறது.

போர்ச்சுகீஸிய, ஆங்கில வரலாற்று ஆய்வாளர்களும் நமது தந்த வேலை பற்றிப் பகர்ந்தனர்.

வெளிநாட்டு தந்தப் பொருட்கள் பற்றிய குறிப்புகள் எனது நேற்றைய ஆங்கிலக் கட்டுரையில் காண்க

–subham–

Leave a comment

Leave a comment