பக்தர்கள் ஆனாலும் மருந்து சாப்பிடுக: ஆதி சங்கரர் அறிவுரை (Post No.5473)

         

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 September 2018

 

Time uploaded in London – 6-56 am (British Summer Time)

 

Post No. 5473

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

பக்தர்கள் ஆனாலும் மருந்து சாப்பிடுக: ஆதி சங்கரர் அறிவுரை (Post No.5473)

 

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே-“

 

“உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”- திருமந்திரப் பாடல்

 

உலகிலேயே மிகவும் விஞ்ஞான பூர்வமான மதம் இந்து மதம். ஆயுர் வேதம் என்னும் மருத்துவ சாஸ்திரத்துக்கும் கூட ‘வேதம்’ என்ற சொல்லைச் சேர்த்த மதம். வேதம் என்றால் ‘அறிவு’. சித்த மருத்துவத்திலும் கூட ‘சித்த’ என்ற புனிதச் சொல்லைச் சேர்த்த மதம். ‘சித்த’ என்பது, அடையமுடியாத அபூர்வ சக்திகளை, காய கல்பத்தைக் குறிக்கும்.

 

உலகிலேயே கடவுளுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்த மதம் இந்துமதம் ஒன்றே. கடவுளை டாக்டர் என்றும் மருந்து என்றும் யஜூர்வேத மந்திரம் சொல்லும். ‘பேஷஜம்= மருந்து, பிஷக்= மருத்துவர்’.

 

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் இறைவனை ‘ஔஷதம்’ என்று புகழும். மூலிகைகளுக்கு ஓஷதி என்று பெயர். அவற்றிலிருந்து வருவதே ‘அவுசதம்’.

எல்லா நோய்களிலும் பெரிய நோய்- பிறவிப் பிணி. அதாவது ஜனன-மரணச் சுழல். பிறப்பு, இறப்பு என்னும் சுழல் வட்டம். ஆகையால் சமய நூல்களில் வரும் நோய் என்பது பிறவிப் பிணியைக் குறிக்கும் என்பது வியாக்கியானக்காரர்கள் சிலரின் விளக்கம். அது சரியல்ல என்பது சமய நூல்க ளைக் கற்றோருக்கு விளங்கும்.

 

பரமஹம்ஸர் போன்ற பெரியோர்கள், ரமணர் போன்ற பெரியோர்களுக்கு மட்டுமே உடல் என்பது ஒரு அழுக்குச் சட்டை போல. அவர்கள் இந்த உடலை நாம் கழற்றித் தூக்கி எறியும் சட்டை, வேட்டி போலக் கருதுவர். அவர்கள் ஜீவன் முக்தர்கள். இவர்கள் இருவருக்கும் புற்று நோய். அப்படியும் நோய் போக இறைவனை வேண்டவில்லை. ஏனெனில் வாழ்க்கையின் உயரிய பலனை இருக்கும்போதே அடைந்துவிட்டார்கள்.

 

நம்மைப் போன்ற அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு உடம்பும், உடல் ஆரோக்கியமும் அவசியம். இதைத்தான் திருமூலர் போன்ற பெரியோர்கள், சித்தர்கள் ஏராளமான பாடல் மூலம் விளக்கினர். கிராமப் புறங்களில் கூட சுவரை வைத்துத் தான் சித்திரம் என்பர். அதாவது உடல் நல்ல நிலையில் இருந்தால்தான் உயரிய லட்சியங்களை அடையமுடியும். சுவாமி விவேகாநந்தரும் அடிக்கடி மேற்கோள் காட்டும் உபநிஷத மந்திரம் – ‘ஆத்மாவை பலவீனமுடையவன் அடைய முடியாது’ என்பதாம்.

 

ஆதிசங்கரர் போன்ற மஹா தத்துவ தரிசிகளும் கூட பாடலில் உவமைகளாக இந்தக் கருத்தைச் சொல்லுவதைப் பார்க்கையில் நமக்கு அதன் பெருமை விளங்குகிறது. திருவள்ளுவரும் கூட சரிவிகித உணவு, மருந்து, நோய்கள் பற்றிப் பத்து குறள்கள் பாடிவிட்டார்.

 

இதோ விவேக சூடாமணி என்ற அற்புதமான துதியில் ஆதி சங்கரர் சொல்லும் இரண்டு பாடல்கள்:

 

பத்யம் ஔஷத ஸேவா ச க்ரியதே யேன ரோகிணா

ஆரோக்யஸித்திர் த்ருஷ்டாஸ்ய ந அன்யானுஷ்டித கர்மணா-53

எந்த ஒருநோயாளி மருந்தையும் பத்தியத்தையும் சரியான முறையில் உபயோகிக்கிறானோ அவன்தான் பூரண குணம் அடைவான்; மற்றவர்கள் அவனுக்காக செய்யும் பணிகளினால் அல்ல”- ஸ்லோகம் 53

 

இதை ஒருவர் பரிபூரண ஞானத்தை அடைவது அவரவர் முயற்சியால்தான் முடியும் என்பதற்கு அவர் உதாரணமாகக் காட்டுகிறார்.

“சொற்களும் , சாஸ்திர அறிவும், துதிகளும் உண்மை ஞானம் ஏற்பட உதவாது (அவைகள் ஏணிப்படிகளே) என்று விளக்கும்போது சங்கரர் சொல்கிறார்:-

 

ந கச்சதி விநா பானம் வ்யாதிர் ஔஷதசப்ததஹ

விநா அபரோக்ஷ அனுபவம் ப்ரஹ்மசப்தைர் ந முச்யதே- 62

“மருந்தைச் சாப்பிடாமல் மருந்தின் பெயரை உரத்த குரலில் சொன்னால் மட்டும் நோய் போய் விடாது; அதே போல பிரம்மன்/ பிரம்மம் என்று சொல்லுவதால் மட்டும் முக்தி கிடைத்து விடாது. மருந்தை எடுத்துச் சாப்பிடுபவன் போல   அதை உணர வேண்டும்”.

 

இது போல பல பாடல்களில் போகிற போக்கில் மருந்து, நோய்கள் பற்றிச் சொல்கிறார். சில நோய்கள் பிராரப்த கர்மத்தினால்- முன் வினைப் பயனால் வரும் என்றும் கூறுகிறார்.

 

திருவள்ளுவர் நேரடியாக நோய்கள் பற்றிச் சொல்கிறார். ஆதி சங்கரர் உவமைகளாகக் காட்டிச் செல்கிறார்.

படித்துப் பயன் பெறுவோம்.

 

 

–சுபம்–

Leave a comment

Leave a comment