இன்கா நாகரீக அதிசய முடிச்சு மொழி – பகுதி 2 (Post No.5501)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 October 2018

 

Time uploaded in London –7-27 am  (British Summer Time)

 

Post No. 5501

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நேற்று வெளியான முதல் பகுதியில் தென் அமெரிக்காவின் பெரு, சிலி நாடுகளில் உள்ள, சூரிய தேவனை வழிபடும், இன்கா நாகரீகத்தின் (Inca Civilization) அற்புதமான நிர்வகத் திறன் பற்றியும் முடிச்சு மொழி இந்தியாவின் ஸரஸ்வதி- ஸிந்து சமவெளி நாகரீகத்தின் புரியாத எழுத்தின் புதிரை விடுவிக்க எப்படி உதவலாம் என்றும் விளக்கினேன்.

இன்கா இளவரசிக்கும் ஸ்பெயின் நாட்டு ஆக்ரமிப்பாளனுக்கும் பிறந்த கவிஞர் கார்ஸிலாஸோ டெ லா வேகா 1609-ம் ஆண்டில் முடிச்சு மொழியின் மூலம் அவர்கள் என்ன என்ன எழுதினர் என்று விளக்கியிருந்தார். அவர் ஒரு துப்புத் தகவல் கொடுத்திருந்தார். இன்காக்கள் கயிற்றில் போடும் முடிச்சு மூலம், அவர்கள் போட்ட சண்டைகள், வாதப் பிரதிவாதங்கள், சம்பாஷணைகள், வரி விதிப்பு வசூல், நிலுவை விவரம், யார் யார் வந்து மன்னர்களைப் பார்த்தனர் என்றும் எழுதிவைத்ததாக 400 ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தார். முடிச்சுகளில் எண்களைக் காண்பது எளிதாக இருந்தது. ஆனால் வரலாற்றைக் காண்பது இதுவரை புதிராக இருந்தது.

 

இப்பொழுது ‘கிணற்றில் கல் விழுந்துவிட்டது’- புதிரும் குதிருக்குள் இருந்து வெளியே வந்துவிட்டது!

அவர் பல முரணான தகவல்களைக் கூறியிருந்ததால் இதுவும் ஒரு ‘கப்ஸா’வோ என்று கருதியோரும் உண்டு. ஆயினும் கிடைத்த முடிச்சுக் கயிறுகளில் மூன்றில் ஒரு பகுதி முடிச்சுக் கயிறுகள் வித்தியாசமாக இருந்தன.

 

1920ம் ஆண்டில் நியூயார்க்கிலுள்ள அமெரிக்க இயற்கை வரலாற்றுக் காட்சியகத்தில் உள்ள முடிச்சுகளை ஒரு மானுடவியல் வல்லுநர் ஆராயத் தொடங்கியதிலிருந்து ஆர்வம் பிறந்தது. ஒரு கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கும் உயரம் அது 10 அல்லது 100 அல்லது 1000 என்று காட்டுவதை (ரிக் வேதத்தில் உள்ள டெஸிமல் ஸிஸ்டம்/ தஸாம்ச முறை) அவர் கண்டுபிடித்தார்.

 

அது சரி, 76 என்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். அது என்ன 76? என்று தெரியவில்லையே என்று ஹர்வர்ட் பல்கலைக்கழக காரி உர்டன் (Gary Urton) 25 ஆண்டுகளாக ஆராய்ந்தார்.

 

அவர் உலகம் முழுதும் மியூஸியங்கள், தனியார்களிடம் உள்ள 900 கீ பூ (Khipu) முடிச்சுக் கயிறுகளைப் படம் பிடித்தார்; பட்டியலிட்டார்; நுணுகி ஆராய்ந்தார். அப்போது அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது. முடிச்சுப் போடும் திசை, முடிச்சின் தன்மை, என்ன வண்ன நூலில் முடிச்சு போடப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் முக்கியம் என்று தெரிந்தது. 2012ஆம் ஆண்டு அவருக்கு ஞானோதயம் பிறந்தது. ஒரு முடிச்சு இருக்கும் திசையை வைத்து அந்தப் பணம் வசூலிக்கப்பட்டதா இல்லையா என்று அவர்கள் ‘எழுதி’ இருந்தது விளங்கியது. இடது பக்கம் முடிச்சு முடிகிறதா, வலது பக்கம் முடிச்சு முடிகிறதா என்பதெல்லாம் ஒரு செய்தி! ஆக 201ம் ஆண்டில், இதில் கொடுத்தவரின் தகுதி  அந்தஸ்து, அவர் பெயர் எல்லாம் இருப்பதை உணர்ந்தார்.

2016 ஆம் ஆண்டில் மேலும் புதியன கண்டார். அவருடைய அதிர்ஷ்டம். 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆறு இன/ஜதி மக்களிடையே வசூலித்த பணம் பற்றிய விவரமும் (ஸ்பானிய மொழியில்) ஆறு முடிச்சுக் கயிறுகளும் இருந்தன. அதன் பின் 132 கயிறுகளை ஆரய்ந்ததில் அக்காலத்தில் ஸ்பானிய ஆக்ரமிப்பாளர் எழுதிய விஷயங்களும் முடிச்சுகளும்  ஒரே விஷயத்தைச் செப்பின. 132 பேர் செலுத்திய வரிப்பணம் பற்றிய தகவல் அவை.

 

அவரிடம் ஒரு மாணவர் படித்து வந்தார். அவர் பெயர் மான்னி மேற்றானோ. அவர் இன்கா ஜாதி. ஆனால் ஆக்ரமிப்பாளரின் ஸ்பானிய மொழி பேசுபவர். ஆக இன்னும் நன்றாக விளங்கியது. அவர் பெரிய முடிச்சவிக்கி!

 

அந்தக் கயிறுகளில் உள்ள பாணி (ஸ்டைல்/ பேட்டர்ன்) என்ன இனம் என்று காட்டுவதைக் காண்பித்தார்.  இதை வாஷிங்டன் பல்கலைக் கழக கீ பூ முடிச்சு ஆராய்ச்சியளார் பிடித்துக் கொண்டு, இதில் கதை, வரலாறுகளும் இருக்க முடியும் என்ற கோணத்தில் ஆராய்ந்தார். அவரைப் போலவே பிரிட்டனிலுள்ள செயின்ட் ஆன்றூஸ் பல்கலைக் கழக  ஸபீன் ஹைலண்டும் ஆராய்கிறார். அவர் தொலை தூர தென் அமெரிக்க கிராமங்களுக்குச் சென்று படம் எடுத்தார். கீ பூ பயன்படுத்துவோரைப் பேட்டி கண்டார். பெரு நாட்டின் லிமா நகரிலுள்ள ஒரு பெண்மணி தொலைதூர கிராமத்தில் ஒரு சர்ச்சில் பாதாள அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கீ பூ – கயிறுகள் பற்றித் தகவல் கொடுத்தார்.

பல மாதங்களுக்கு நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் அந்த கீ பூ முடிச்சுக் கயிறுகளை தரிசிக்கும் பாக்கியம் அவருக்குக் கிட்டியது. ஆனால் அந்த இனத்தின் தலைவர் ஒரு சமூக விழாவில் கலந்துகொள்ள வேறு ஒரு ஊருக்குப் போவதால் இரண்டு நாட்களுக்குள் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யலாம என்ற ஆணை பிறந்தது.

ஹைலண்டும் விடாப்பிடியாக அதைப் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒவ்வொரு பிரதானக் கயிற்றிலிருன்டுந்து பல சின்னக் கயிறுகள் தொங்குவதையும் அவைகளில் முப்பரிமாணத்தில் தகவல் கோர்க்கப்பட்டிருப்பதையும் அறிந்தார். வண்ணங்கள் வெவ்வேறு; முடிச்சின் சிக்கல்கள் வெவ்வேறு; பலவிதப் பிராணிகளின் ரோமமங்கள் வேறு.

 

அந்தக் கிராம மக்கள் கீ பூ என்பது ‘பிராணிகளின் மொழி’ என்று கூறியதற்கு அவருக்கு விளக்கமும் கிடைத்தது. 95 வகைகளைக் கண்டவுடன் அவற்றில் சில எழுத்துக்களையோ சொற்களையோ

குறிக்கின்றன என்று அறிந்தார். இரண்டு கலர் ரிப்பன்கள் கட்டப்பட்ட கயிறு இரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தது என்றவுடன் இவர் ஊகத்தில் அதன் பெயரைக் கண்டுபிடித்தார். கிராம மக்களுடன் பேசியபோது அப்படி ஒரு இனம் இருப்பது உண்மையே என்றும் அறிந்தார்.

சில பட எழுத்துகள் போன்றவை; சில அசைச் சொற்கள் (Ideographic, syllbic) உடையவை; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வண்ணங்களும் பின்னப்பட்ட பாணிகளும், முடிச்சின் கன பரிமாணமும் பல எழுத்துக்களையும் சொற்களையும் காட்டின. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பெரு நாட்டில் தங்கி ஆராயப் போகிறார். ஸ்பானியப் படை எடுப்பாளர் அந்தக் காலத்திலேயே (1530ம் ஆண்டு) கீ பூ மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்கியதால் அவர்கள் ஸ்பானிய மொழியில் எழுதியதையும் முடிச்சு மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. மேலும் பல புதிய விஷயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உளது.

இது போல இந்தியர்களும் ஆரிய-திராவிட வாதத்தைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு புதிய கண்ணோட்டத்தில் ஸரஸ்வதி- சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய்தல் அவசியத் தேவை ஆகும்.

 

நியூ ஸைன்டிஸ்ட் New Scientist வார இதழில் ஆங்கில மூலத்தில் முழு விவரமும் உளது; கண்டு மகிழ்க.

 

–சுபம்–

Leave a comment

Leave a comment