
WRITTEN BY S NAGARAJAN
Date: 17 October 2018
Time uploaded in London – 5-43 AM (British Summer Time)
Post No. 5549
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 57
சா.தாசன் : பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு
ச.நாகராஜன்
பாரதி ஆர்வலர் சா.தாசன் (தமிழ் விரிவுரையாளர், கிறித்தவக் கல்லூரி, மார்த்தாண்டம்) கேரளப் பல்கலைக் கழகம் தந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி எழுதிய திறனாய்வு நூல் பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு.
1970ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் 188 பக்கங்களைக் கொண்டது.
தோற்றுவாய்,உரைநடையில் பாஞ்சாலி சபதம், படைப்பின் நோக்கம், கவிதையும் பொருளும், விடுதலை உணர்வு, புதுமைக் கருத்துக்கள், பாரதியும் பரம்பொருளும், பழமை மறவாப் புதுமை, இறுவாய் ஆகிய ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட இந்த நூல் பாஞ்சாலி சபதத்தை மிக நுணுக்கமாக ஆராய்கிறது.
முதலில், பாஞ்சாலி சபதத்தை அப்படியே உரைநடையாகத் தருகிறார் நூலாசிரியர்.

வியாச முனிவர் எழுதிய பாரதம், பன்னீராயிரம் பாடலைக் கொண்ட பெருந்தேவனாரின் பாரதம், வில்லி பாரதம், அரங்கநாத கவிராயர் இரண்டாயிரத்து ஐநூறு செய்யுள்களில் பாடிய பாரதம் (பிற்பகுதி பாடப்பட்டது) நல்லாபிள்ளை எழுதிய பதினோராயிரம் பாடல்களைக் கொண்ட நல்லாப்பிள்ளை பாரதம் ஆகியவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடும் தாசன், பாரதியார் பாஞ்சாலி சபதத்தைப் புதுமையான நடையில் படைத்த காரணத்தை அழகுற விளக்குகிறார்.
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்,பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என்று இப்படி எழுதிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தை இயற்றி புதிய உயிரை தமிழுக்கு அளித்து விட்டார்.
நூலில், பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் அமைத்துள்ள வெவ்வேறு சிந்து நடை விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சிந்து நடை தவிர பிறவகைச் செய்யுள்களையும் நூலாசிரியர் ஆராய்வதோடு சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் பாரதியாரின் வரிகளோடு ஒப்பிட்டு பாரதியாரின் ஆழ்ந்த புலமையை வியந்து பாராட்டுகிறார்.
துரியோதனன் கட்டிய மண்டபத்தைப் பற்றி பாரதியார் கூறுகையில்,
“வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்…
சொல்லை யிசைத்துப் பிறர் செய்யுமாறே
சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார்”
என்கிறார்.

கட்டிடத்தையும் காவியத்தையும் இணைத்துப் பார்க்கும் அற்புதமான இந்த உவமையை நூலாசிரியர் விவரித்து மகிழ்கிறார்; நம்மையும் மகிழ்விக்கிறார்.
பாரதியாரின் உவமை நயம் உலகின் உன்னதக் கவிஞர்களின் உவமை நயத்துடன் ஒப்பிட்டு மகிழக் கூடிய ஒன்று.
அதை இந்த நூலாசிரியர் அழகுற விளக்குகிறார்:
“வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ! – இவ்
வேந்தரை நாம் வெல்லலாகுமோ!”
“மாமலையைச் சிறு மட்குடம் – கொள்ளச்
சொன்ன தோர் நூல் சற்றுக் காட்டுவாய்”
“குன்றின் மேலே ஏற்றி வைத்த விளக்கைப்போல
குவலயத்திற் கறங்காட்ட தோன்றினாய் நீ”
“தீபத்தில் சென்று கொளுத்திய – பந்தம்
தேசு குறைய எரியுமோ!”
“ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை
நாடித் தொழுதிடும் தன்மைபோல்”
“தின்ன வருமோர் தவளையைக் கண்டு
சிங்கஞ் சிரித்தருள் செய்தல் போல்”
“பேயினை வேதம் உணர்த்தல் போல் – கண்ணன்
பெற்றி உனக்கெவர் பேசுவார்?”
கல்லிடை நாருருப் பாருண்டோ – நினைக்
காரணங் காட்டுத லாகுமோ !
“நாயொன்று தேன் கலசத்திலே – எண்ணித்
துன்று முவகையில் வெற்றுநா-வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல்”
“செருப்புத் தோல் வேண்டியே – இங்குக் கொல்வரோ
செல்வக் குழந்தையினை”
இப்படிப் பல உவமைகளை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டுகிறார் இந்நூலாசிரியர்.
அடுத்து பாரதியாரின் பாஞ்சாலி சபதம் விடுதலை வேட்கையின் அடிப்படையில் எழுந்த ஒரு காவியமே என்று ஆணித்தரமாக உரைக்கும் நூலாசிரியர் அதை இப்படி ஒப்பிட்டுக் காட்டுகிறார்:
பாஞ்சாலி – பாரத அன்னையாகவும்
தருமன் – பாரதத்தை ஆண்ட பண்டைய மன்னருள் ஒருவனாகவும்
துரியோதனன் – ஆங்கிலேய ஆட்சியாளனாகவும்
வீமன் – விடுதலை வேட்கை கொண்ட ஓர் இந்திய வீரனாகவும்
பாரதியாரால் கற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் – தருமம்
மறுபடியும் வெல்லும்” என்று பாடி பாரதியார் தமது விடுதலை வேட்கையைப் புலப்படுத்துகிறார்.
அடுத்து, பாஞ்சாலியைப் புதுமைப் பெண்ணாக பாரதியார் சித்தரிப்பதை எடுத்துக் காட்டுகளுடன் நூல் விளக்குகிறது.
‘நடப்பது நடந்தே தீரும்; நீ உன் கடமையைச் செய்’ என்ற பாரதியாரின் திடமான கருத்தை அவரின் பாடல்கள் மூலமாக ஆசிரியர் விளக்குகிறார்.
அடுத்து சர்வமத சமரஸ மனப்பான்மை கொண்ட பாரதியார் ஏசு கிறிஸ்து,அல்லா, புத்தன் என அனைவரையும் போற்றிப் பாடியதோடு,
“தெய்வம் பலபல சொல்லிப் – பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் – எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்”
என்று கூறியுள்ளதை விவரிக்கிறார்.
நூலின் முடிவுரையாக ஆசிரியர் தான் கண்ட ஆய்வு முடிவை இப்படி கடைசி பாராவில் விளக்குகிறார்:


Draupadi derobing sculptures posted by Lalgudi Veda
“பாஞ்சாலி சபதத்தில் ஒளிர்வன பாரதியாரின் எண்ணங்கள் அல்ல, பாரதியாரே, எண்ணங்களின் நுண்ணிய வடிவில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார். பாஞ்சாலி சபதத்தைக் காண்பவர் உண்மையில் பாரதியாரையே காண்கிறார்கள் – முழுமையாகக் காண்கிறார்கள்”
நூலாசிரியர் சா. தாசனின் இந்த முடிவை நமது முடிவாக ஏற்றுக் கொள்வதில் ஆட்சேபணை யாருக்கும் இருக்கப் போவதில்லை. அவரது முடிவே அனைவரது முடிவும் தான்!
சிறந்த திறனாய்வு நோக்கில் அரிய பல கருத்துக்களை ஒருங்கிணைத்து ஒப்பிட்டு இந்த நூல் தருகிறது.
பாரதி ஆர்வலர்கள் படித்து மகிழ வேண்டிய நூல் இது!
***