
WRITTEN BY S NAGARAJAN
Date: 27 October 2018
Time uploaded in London – 5-43 AM (British Summer Time)
Post No. 5595
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 26-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி நான்காம்) கட்டுரை
தங்க புத்தர்!
ச.நாகராஜன்
அறிவியலுக்கும் புத்த மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு நாளுக்கு நாள் அது வலுப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், ‘எதையும் நீயே ஆராய்ந்து பார்த்து, கண்டுபிடித்து ஒப்புக்கொள்’ என்ற புத்தரின் உபதேசம் தான்! அறிவியலும் இதையே தானே சொல்கிறது!!
அத்துடன் கூட இப்போதுள்ள தலாய்லாமா பிரபல விஞ்ஞானிகளை தனது தர்மஸ்தலாவிற்கு வரவழைத்து அறிவியலும் புத்த மதக் கொள்கைகளும் இணைவதற்கான பாலமாக இலங்குகிறார். அவரது அறிவுரைப்படி நிறைய லாமாக்களும், புத்த பிக்ஷுக்களும் அமெரிக்காவில் உள்ள தலை சிறந்த பரிசோதனை மையங்களுக்குச் சென்று தன்னார்வத்துடன் தியானம் உள்ளிட்ட பல வித சோதனைகளுக்கும் உள்ளாகின்றனர்; வியக்கவைக்கும் உண்மைகளை வெளியுலகிற்கு அளிக்கின்றனர்.
புத்த மதத்தை இப்போது “மனம் பற்றிய அறிவியல்” (Science of Mind) என்று கூறத் தொடங்கியுள்ளனர். நீல்ஸ் போர், ஓப்பன்ஹீமர், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் புத்த மதக் கொள்கைகளை தங்கள் ஆய்வு உரைகளில் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.
புத்த மதத்திற்கும் தங்கத்திற்கும் கூட நிறைய தொடர்பு உண்டு; புத்தமதத்தைப் பொறுத்த வரை தங்கம் சூரியனுடன் இணைக்கப்படும் அரிய ஒரு உலோகம். தீ ஜுவாலை அல்லது அறிவு அல்லது விழிப்பு ஆகியவற்றுடன் தங்கம் தொடர்பு படுத்தப்படுகிறது. அறிவு, ஞானம், தூய்மை, சந்தோஷம், சுதந்திரம் ஆகிய அனைத்துமே தங்கத்தினால் குறிப்பிடப்படுகிறது.
அறிவியலும் கூட சூரியனையும் தங்கத்தையும் அவற்றின் பல அரிய சிறப்புக்களுக்காக ஆராய்கிறது; வியப்பூட்டும் உண்மைகளை விளக்குகிறது.
புத்த மதம் அறிவுறுத்தும் அஷ்ட மங்கலம் எனப்படும் எட்டுப் பொருள்களான ஜோடி மீன்கள் இரண்டு, தங்கத் தாமரை, எட்டு ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரம் உள்ளிட்ட அனைத்தும் தங்கத்தால் செய்யப்படுபவையே. சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும் நல்கும், சிரிக்கும் புத்தர் – லாஃபிங் புத்தா – சிலைகளில் பொதுவாக தங்கப் பூச்சு பூசப்படுகிறது.
உலகெங்கும் ஏராளமான இடங்களில் புத்தரின் சிலைகள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன; ஆனால் அதை விட கூடுதலான் அளவில் புத்தரின் திருவுருவம் தங்கத்தில் வார்த்து எடுக்கப்பட்டுள்ளது. திபத்தில் உள்ள சிலைகள் அனைத்தும் பத்தரைமாத்து தங்கத்தால் பூசப்பட்டுள்ளன. தாய்லாந்தில் பாங்காக்கில் உள்ள வாட் ட்ரைமிட் ஆலயத்தில் உள்ள தங்க புத்தர் முழுவதும் தங்கத்தால் ஆனது. இதன் எடை மலைக்க வைக்கும் 5.5 டன்கள்! இதன் உயரம் 3.91 மீட்டர்.அகலம் 3.01 மீட்டர். உலகின் மிகப் பெரிய தங்க புத்தர் சிலை இது தான்!
பண்டைக் காலத்தில் அயுத்தயா என்னும் இடம் சிதிலமடைய அங்கு இந்த சிலை யாரும் கவனிப்பாரின்றி கிடந்தது. பாங்காக் புதிய தலைநகரமாக ஆக்கப்படவே அப்போதிருந்த அரசன் பழைய சிலைகளை புதிய இடத்தில் நிறுவுமாறு கட்டளையிட்டான். சிலைகள் நகர்ந்தன. தங்க புத்தரும் பாங்காக்கில் வாட் சோடாநரம் என்ற இடத்தில் ஒரு ஆலயத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டது. அந்த ஆலயமும் இடியும் நிலைக்கு வரவே சிலை வாட் ட்ரைமட் ஆலயத்திற்கு வந்தது. அங்கு இடமே இல்லாததால் தகரத்தைக் கூரையாகக் கொண்ட ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டது. புது கட்டிடம் ஒன்று கட்டப்படவே 1954ஆம் ஆண்டு சிலையை அங்கு கொண்டு போவதற்காக சிலையை எடுத்தனர். அப்போது சிலை சிறிது சேதமடைந்தது. சாதாரணமாக இது ஒரு துரதிர்ஷ்டமாகக் கருதப்படும். ஆனால் அதுவே ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக அமைந்தது. தங்க புத்தர் தானே வெளிப்பட்டார்.
சிலையில் சிறிது தங்கம் தென்படவே ஜாக்கிரதையாக மேல் பூச்சைப் பிரித்தனர். உள்ளே அற்புதமான தங்க மய புத்தர் தரிசனம் தந்தார்.
அதை முறைப்படி ஆராயவே அதன் மதிப்பு உலகிற்குத் தெரிய வந்தது. இப்போது உலகின் மிகப் பெரிய தங்கச் சிலையாக பாங்காக்கில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் தங்க புத்தர்!
அறிவியல் அறிஞர்களின் பார்வை புத்த மதத்தின் பக்கம் இப்போது திரும்பவே, தங்க புத்தரின் சிலையை தரிசிக்க சாமான்யர்களுடன் விஞ்ஞானிகளும் வருகின்றனர்.
பாங்காக்கில் தங்க பிரேமில் மஞ்சள் வண்ணத்தில் பல புத்தரின் படங்களை ஆங்காங்கே வீடுகளிலும், ஹோட்டல்களிலும், பார்க்கலாம். அத்துடன் அங்குள்ள பெரிய கட்டிடங்கள் கூட தங்கம் மற்றும் மஞ்சள் வண்ணக்கலவையிலான உட்புற அலங்காரங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். அறிவியலும் ஆன்மீகமும் தங்கம் மூலம் இணையும் ஒரு தலமாக பாங்காக் வாட் ட்ரைமின் ஆலயத் தலம் திகழ்கிறது!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிஸன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி வாழ்க்கையை அணுக வேண்டிய முறையைக் கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியாக அமைகிறது. அவருக்கு 67 வயது ஆகி விட்ட நிலையில் ஒரு நாள் மாலையில் அவர் தனது லாபரட்டரியிலிருந்து வீடு திரும்பினார். இரவு சாப்பாடு முடிந்த போது ஒரு ஆள் ஓடி வந்து ஒரு அவசரத் தகவலைச் சொன்னான். சில மைல்கள் தள்ளி இருந்த எடிஸனின் ஆய்வு மற்றும் உற்பத்தி கம்பெனி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது என்பது தான் அந்த மோசமான அவசரத் தகவல்.
அவர் மிக அமைதியாக தனது மகனை நோக்கிக் கூறினார் : “போ,போ! சீக்கிரம் உன் அம்மாவையும் அவளது தோழிகளையும் அழைத்து வா. இப்படிப்பட்ட தீப்பிடிக்கும் காட்சியை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.” ஒரு குழந்தையின் குதூகலத்துடன் இதைக் கூறிய எடிஸன், “நீ கவலைப்படாதே! தேவையில்லாத எல்லாக் குப்பையும் ஒரு வழியாக ஒழிந்து போயிருக்கும்” என்றார்.
ஒரு கெட்டதில் நல்லதைப் பார்க்கும் உடன்மறை எண்ணம் கொண்ட எடிஸன் வாழ்வில் மோசமான நிகழ்ச்சி எப்போது நடந்த போதும், “சரி போ! அப்படி நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும்” என்ற தைரியத்துடனேயே இருந்தார்
மனம் உடைந்து போகாத நிலையில் அவர் மறுநாள் பத்திரிகையாளரிடம், தான் திரும்பித் தொழிலை ஆரம்பிக்க முடியாத அளவுக்கு மிகவும் வயதான ஒருவன் அல்ல என்று கூறினார். “இது போல எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்து விட்டேன். சலிப்பும் சோர்வும் மனிதனை அணுகாதபடிக்கு வைக்கும் நிகழ்வுகள் இவை” என்றார்.
முற்றிலும் அழிந்து போன தொழிலகம் மூன்றே வாரங்களில் பழையபடி இயங்கத் துவங்கியது. நான்காம் வாரத்திலிருந்து பழையபடி இரண்டு ஷிப்ட் வேலை துவங்கியது. புதிய தயாரிப்புகளை உலகிற்கு வழங்க ஆரம்பித்தது. அன்றைய மதிப்பில் தீப்பிடித்ததால் நஷ்டம் பத்து லட்சம் டாலர்கள்! (இன்றைய மதிப்பில் 230 லட்சம் டாலர்கள்!) எடிஸன் தன் உழைப்பினாலும் தைரியத்தினாலும் அந்த வருடமே அன்றைய மதிப்பில் நூறு லட்சம் டாலர் வருமானத்தை ஈட்டிக் காட்டினார். மனித வரலாற்றில் வெகு சில பேர்களே இப்படிப்பட்ட மோசமான நிகழ்வுகளை துணிவுடன் எதிர்கொண்டு அதையும் மீறி நல்ல முன்னேற்றத்தை அடைந்து காண்பித்திருக்கிறார்கள். தைரியமும் உழைப்புமே உயர்வுக்கான வழி!