
WRITTEN BY S NAGARAJAN
Date: 26 October 2018
Time uploaded in London – 6-41 AM (British Summer Time)
Post No. 5592
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
திருநீலகண்டம் அருளப்பெற்ற திருக்கொடி மாடச் செங்குன்றூர்!
ச.நாகராஜன்
சீர்காழியில் அவதரித்து, தேவாரம் அருளிய திருஞானசம்பந்தர் பல்வேறு ஊர்களுக்கும் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடி அருளி வந்தார்.
ஒரு சமயம் காவேரிக்குத் தென்கரையிலுள்ள ஆலயங்களைத் தரிசித்து வருகையில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள திருச்செங்கோடு திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். திருச்செங்கோடு என்று நாம் அழைக்கும் ஊர் திருக்கொடி மாடச் செங்குன்றூர் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஊராகும். அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்துப் பின்னர் பொன்னி நதிக்கு மேற்புறம் உள்ள திருநண்ணா முதலிய தலங்களைத் தரிசித்துப் பின்னர் மீண்டும் திருச்செங்கோட்டிற்கு எழுந்தருளினார்.
அப்போது குளிர்காலம்.கடும் பனியால் அனைவரும் வருந்திக் கொண்டிருந்தனர். பலநாள் அங்கு அவர் பக்தர் குழாமுடன் வசித்து வருகையில் குளிர் ஜுரம் கண்டு அடியார்கள் பலரும் வாடினர்.
அதைக் கண்ட அருளாளர் திருஞானசம்பந்தர் ‘அவ்வினைக் கிவ்வினை’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். குளிர் ஜூரம் அடியர்களைத் தீண்டக் கூடாது என்று ஆணையிட்டுப் பாடினார்.

அவ்வளவு தான், குளிர் ஜுரம் உடனே அடியார்களை விட்டு அகன்றது. அதுமட்டுமல்ல, அந்த நாட்டில் பலரையும் வருத்தி வந்த அந்த நளிர் ஜுரம் நாட்டை விட்டே அகன்றது.
இந்தப் பதிகம் திருநீலகண்டம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
இன்றும் இதை விபூதி இட்டு ஓதுவாரை ஜுரம் பீடிக்காது என்பது அனுபவப் பழக்கமாகும்.
திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டம் வருமாறு:-
1.116 திரு நீலகண்டப் பதிகம்
பண் – வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
| 1249 | அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். |
1.116.1 |
| 1250 | காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். |
1.116.2 |
| 1251 | முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம் விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். |
1.116.3 |
| 1252 | விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். |
1.116.4 |
| 1253 | மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம் செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். |
1.116.5 |
| 1254 | மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப் பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். |
1.116.6 |
| (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.116.7 | |
| 1255 | கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். |
1.116.8 |
| 1256 | நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம் சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். |
1.116.9 |
| 1257 | சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். |
1.116.10 |
| 1258 | பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான் இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண் திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே. |
1.116.11 |
(இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.) முதலாம் திருமுறை
இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த திருக்கொடி மாடச் செங்குன்றூர் உள்ள மண்டலம் கொங்கு மண்டலமே என்று கொங்குமண்டலச் சதகத்தின் 48ஆம் பாடல் கொங்கு மண்டலத்தைப் போற்றிப் புகழ்கிறது.

பாடல் வருமாறு:-
திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின் பெருக்காக “வவ்வினைக் கிவ்வினை யாமெனப்” பீடுபெறத் திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேயமுற்றும் வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு மண்டலமே
இப்பாடலின் திரண்ட பொருள் : – சீர்காழிப் பிள்ளையாராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருச்செங்கோடு என வழங்கும் திருக்கொடி மாடச் செங்குன்றூருக்குத் திருக்கூட்டத்தாருடன் எழுந்தருளியிருந்த சமயம் அவ்வடியார்களை நளிர் ஜுரம் தீண்டவே. “அவ்வினைக் கிவ்வினையாம்” என்ற பாடலைத் தொடக்கமாகக் கொண்டு பதிகம் அருளவே அவ்வூர் மட்டுமன்றி அந்நாடு முழுவதும் அந்நோய் தீர்ந்தது. அப்படி ஓதப்பெற்ற தலத்தைக் கொண்டது கொங்கு மண்டலமே.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!
***
R.Nanjappa (@Nanjundasarma)
/ October 29, 2018ஞான சம்பந்தர் பாடியருளிய பதிகங்கள் அனைத்துமே தெய்வீகச் சக்தி யுடையவை, இதை நாம் அனுபவத்தில் உணரலாம். இந்த திருநீலகண்டப் பதிகம் அபாரமானது. இதில் ஒரு முக்கியச் செய்தி அடங்கியிருக்கிறது.
உடலுக்கு வரும் குளிர் ஜுரம் முதலிய உபாதைகள் துன்பம் தருபவைதான். அவற்றை நீக்குவதற்கு வழியும் அவசியமானதுதான். அனால் மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கும் மிகப்பெரிய துன்பம் பிறவித் துன்பம்தான், இதைத்தான் “மஹதோ பயம்” என்று பகவான் கீதையில் கூறுகிறார்.
புனரபி ஜனனம், புனரபி மரணம்- திரும்பத் திரும்ப இந்த ஜனன மரணச்சிக்கல் மயமான சம்சாரத்தில்-(ம்ருத்யு ஸம்ஸார ஸாகரம்- கீதை) -ஏன் வீழ்கிறோம்?
அது நமது வினைகளால் வருகிறது. நாம் முன் ஜென்மங்களில் செய்த வினையே நமது ஊழாக மாறி பிறவியில் தள்ளுகிறது. விதிகாணும் உடம்பை விடா வினையேன் என்பார் அருணகிரி நாதர்.
இந்தக் கருத்து நமது மதத்தில் ஒரு அடிப்படையான இடத்தைப் பெற்றுவிட்டது. ஊழை வெல்ல-மாற்ற முடியாது என்பது ஒர் அடிப்படைக் கோட்பாடு. சாஞ்சித, ஆகாமி கர்மங்களை ஓரளவு கட்டுப்படுத்தலாம், ஆனால் பிராரப்த வினையை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும் என்பது கொள்கை.
வேதாந்தத்தில் இதை இரு நிலைகளில் அணுகுகிறார்கள். சங்கரர் மரபில் வரும் அத்வைதத்தில், ஞானம் ஒன்றினால்தான் கர்மம் தீரும் ( அதாவது, கர்மம் என்பதை அனுபவிக்க அஹங்காரம் என்பது இருக்காது-அது ஞானத்தினால் கரைந்துவிடும்) என்பது அடிப்படை நிலை. அதனால் ஞானம் எய்தாதவரை ஒருவன் கர்மத்தை அனுபவித்தே தீர வேண்டும். இது ஒரு extreme நிலை= fatalism எனலாம். பின்னர் வந்த புத்தமதமும் இதே நிலையைத்தான் கொண்டிருக்கிறது.
ஆனால், வேதாந்ததின் பிற பிரிவுகளில் பக்திக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அதனால் பகவானின் கருணையால் கர்மத்தைத் தொலைக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் என்பது அவர்கள் நிலை. கிறிஸ்தவ மதமும் இதே நிலையில்தான் இருக்கிறது.
இந்த சர்ச்சை ஹிந்துமதத்தில் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில்தான் ஞானசம்பந்தர் நமக்கு சஞ்சீவியாக வருகிறார். ‘ஆமாம், முன்பு செய்த வினைக்கு இப்பிறவியைப் பெற்று வாடுகிறீர்கள் என்று சொல்லத்தெரிகிறதே, இதற்கு என்ன உய்வு என்பது தெரிந்து அதை நாடாமலிருப்பது உங்களுக்கு வெட்கமாக இல்லையா ‘ எனக் கேட்கிறார். அந்த வழியையும் சொல்கிறார்: ‘நாம் கை (முதலிய )கரணங்களால் பகவானுக்குத் தொண்டு செய்து, அவன் கழலைப் பணிவோம்; அப்போது நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து பற்றா’ என்று ஒரு பெரிய ரகசியத்தைச் சொல்கிறார். அதை திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறார். இதை முதல் பாடலிலேயே சொல்கிறார்! ஒவ்வொரு பாடலிலும் வற்புறுத்திச் சொல்கிறார்!
{ தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்திக்க போய வினைகள் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என ஆண்டாள் பாடியதையும் நினைவு கூர்வோம்.)
ஞானசம்பந்தர் அன்னையின் ஞானப்பால் உண்ட குழந்தை. இவர் முருகனின் அவதாரம் என்பது அருணகிரிநாதரின் துணிபு. இதைத் திருப்புகழில் பல இடங்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். சம்பந்தருக்குமேல் தெய்வமில்லை என்பதை கந்தரந்தாதியில் சொல்கிறார்.( திகழு மலங்கற்-பாடல் 29) இப்படிப்பட்ட ஞானசம்பந்தரின் வாக்கு வீணாகுமா? அதனால் அவர் சொன்ன ரகசியத்தைப் பற்றி, அவர் சொன்ன வழியைப் பின்பற்றி நாம் அனைவரும் வினைத்தொல்லையிலிருந்து நீக்கம் பெறவேண்டும்!
தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!
முருகன் அருளினால் வினைகள் நீங்கும் என்பதை கந்தரந்தாதியில் 66ம் பாடலில் அருணகிரிநாதர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
ஞானசம்பந்தர் பக்தி மார்கத்திலும் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்தவர். தலம் தோறும் சென்று பதிகம் பாடிப் பரமனைப் பணியும் நெறியைத் தொடங்கிவைத்தவர். இதைப் “பதிகப் பெருநெறி” என நம்பியாண்டார் நம்பிகள் கொண்டாடுவார். இப்பதிகப் பெருவழியில் நாமும் சென்று வினையின் நீங்கி வளம்பெறலாமே!
Santhanam Nagarajan
/ October 31, 2018அற்புதமான கருத்து, அதுவும் ஒரு ரகசியத்தை விண்டு சொல்லி இருக்கிறீர்கள். செய்த வினைகள் போக கை வினை செய்வீர்! இதற்கு ஆண்டாளின் திருப்பாவையையும் எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள். இப்படித்தான் பெரிய பெரிய ரகசியங்களை போகிற போக்கில் பெரிய மகான்கள் சொல்லிக் கொண்டே போவார்கள். நாம் தான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான்கு பாடல்களில் ஆணை நமதே என்று சம்பந்தர் ஆணையிட்டுப் பாடி இருக்கிறார். அவர் முருகப் பிரானே தான்! நன்றி, உங்கள் பின்னூட்டம் அனைவரையும் முன்னோக்கிச் செல்ல வைக்கும்!
முகாம் : சான்பிரான்ஸிஸ்கோ