
Written by S Nagarajan
Date: 16 November 2018
GMT Time uploaded in London –5-59 am
Post No. 5667
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
சிலைகளைக் காத்துக் கலைக்கூடம் அமைத்த பாஸ்கரத் தொண்டைமான்!
ச.நாகராஜன்
1
தமிழகத்தில் சிலை திருடிக் கடத்தும் மாபாவிகளைப் பற்றித் தினமும் ஒரு செய்தி வருகிறது.
தோண்டத் தோண்ட சிலைகள் – வீடுகளில், வயல்வெளிகளில் என! செய்திகளைப் படித்தால் பகீர் என்கிறது.
தமிழகத்தின் பழம் பாரம்பரியத்தைப் பற்றிப் பேசி தமிழால் வயிறை வளர்த்து, கொள்ளை அடித்துச் சொத்துச் சேர்த்த மாபாவிகள் சிலைகளின் மேலும் கை வைத்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
முகலாயர்களின் வழியேயும், ஆங்கிலேயர்களின் வழியேயும் வந்தோர் சிலைகளை உடைத்தனர்; கடத்தினர். இப்போது தமிழை வைத்து வணிகம் செய்வோர் சிலைகளையும் வணிகச் சரக்காக்கி விட்டனர். ஐயோ, தமிழகமே!
இந்தச் சிலைகளை அமைக்க மன்னர்கள் பட்ட பாடு எத்தனை; சிற்பிகள் தம்மை அர்ப்பணித்து ஆற்றிய சேவை எத்துணை பெரிய சேவை. எதிலாவது தம் பெயரை எந்த மன்னனாவது, சிற்பியாவது பொறித்தது உண்டா?

ஆனால் இப்போதோ?!
எங்கு பார்த்தாலும் ஒரு போர்டு, ஒரு சிலை. கக்கூஸ் திறந்தாலும் கல்வெட்டு; கல்லறைக்குப் போனாலும் கல்வெட்டு.
அங்கங்கு ஆர்ச். போகும் தெருக்களின் பெயர்களெல்லாம் பொல்லாதவர்களின் பெயர்கள்.
இதில் சிலை திருட்டும் இப்போது சேர்ந்து கொண்டது.
இப்படிப்பட்ட சிலைகளைக் காக்க எப்படிப்பட்ட முயற்சிகளை நம் மக்கள் மேற் கொண்டனர். அதைத் தொகுக்க வெண்டும். அது ஒரு பெரும் கலைக் களஞ்சியமாக அமையும்.
இதில் ஒரு சரித்திர ஏடு தான் தஞ்சைக் கலைக்கூடம்!
அதை அமைக்கப்பாடுபட்டவர் திரு பாஸ்கரத் தொண்டைமான். ( பிறப்பு: 22-7-1904 மறைவு 1965)

2
1951ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடந்த ஒரு சம்பவம் இது. கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொல்பொருள் ஆய்வாளர் ஒரு சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது என்றும் அதைத் தஞ்சாவூரிலிருந்து கல்கத்தா கொண்டு செல்ல அனுமதி தரவேண்டும் என்றும் மாவட்ட அரசு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க, அதிகாரிகளும் சிலை எங்கேயாவது சரியாக இருந்தால் சரி என்று அனுமதியை வழங்கினார்கள்.
சிலையைப் பார்க்க ஒரு கூட்டம் கூடியது. கரந்தை நகரைச் சேர்ந்த பொது மக்கள் சிலையை எங்கும் எடுத்துச் செல்லக் கூடாது என்று ஒரேயடியாக கோஷம் போட்டார்கள்.
அப்போது அந்த சம்பவத்தைப் பார்த்த ஒரு இளைஞர் இப்படிப்பட்ட சிலைகளை எல்லாம் ஓரிடத்தில் கொண்டு சேர்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினார்.
அவர் தான் பாஸ்கரத் தொண்டைமான்.
ராஜாஜி, டி.கே.சி., கல்கி உள்ளிட்ட ஏராளமானோரின் அன்புக்குரியவர்.
அவர் கவனிப்பாரின்றிக் கிடந்த சிலைகளை எல்லாம் சேர்த்து தஞ்சையில் கலைக்கூடம் அமைத்தார்.
நாடே அவரைப் பாராட்டியது.
எங்கு சிற்பம், சிலை என்றாலும் அங்கு பாஸ்கர தொண்டைமான் சென்று விடுவார்.
அவர் எழுத்தராகப் பணி புரியத் தொடங்கி கலெக்டராகப் பதவி உயர்வு பெற்றவர்.
கலா ரஸிகர்.கவிதை ரஸிகர். எழுத்தாளர். சிறந்த நிர்வாகி. வேங்கடம் முதல் குமரி வரை என்ற நூலை எழுதியவர். ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று அதைப் பற்றி எழுதியவர்.
3
செப்டம்பர் 2005இல் ‘கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக்களஞ்சியம்’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் சிலைகளை அமைக்கக் காரணமாக அமைந்த நிகழ்ச்சியும் அவரது அரும் பணியும் விவரிக்கப்பட்டுள்ளது.
பாஸ்கரத் தொண்டைமானின் புதல்வியார் திருமதி ராஜேஸ்வரி நடராஜன் பக்கங்கள் என்பதில் வரும் ஒரு பகுதியை அப்படியே கீழே காணலாம்:
திரு தொண்டைமான் அவர்களைத் தஞ்சை ஜில்லாவிலே பதவியேற்கச் செய்தது இறைவன் திருவுள்ளம் என்று தான் கூற வேண்டும். இராஜராஜ சோழன் கல்லால் இழைத்த காவியமாகிய பெரிய கோயிலை எடுப்பித்து வான்புக தேடிக்கொண்ட தஞ்சையிலே தான், தொண்டைமான் அவர்களும் கலைக்கூடம் அமைத்து அழியாப் புகழைத் தேடிக் கொண்டார்கள்.
கலைக்கூடம் தோன்றிய வரலாறே ரசமானது. ஒரு நாள் தஞ்சைக்கருகில் உள்ள கருத்தட்டாங்குடிக்கு தொண்டைமான் சென்றார்கள். அங்கே கையிழந்த பிரம்மா ஒருவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார். கலையழகில் தோய்ந்த தொண்டைமானுக்கு, இப்படி வயல்வெளிகளிலும், ரோட்டுப் புறங்களிலும், சந்து பொந்துகளிலும் சீந்துவாரற்றுக் கிடக்கும் தெய்வத் திருவுருவங்களை எல்லாம் ஒன்று சேர்த்து உயிர் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அவ்வளவு தான். பிரம்மா தஞ்சை நோக்கிக் கிளம்பினார். அதுவரை ஏறிட்டுப் பார்க்காதவர்கள் கூட எதிர்ப்பைக் கிளப்பினார்கள். எதிர்ப்பை எல்லாம் சமாளித்துக் கொண்டு தஞ்சை அரண்மனை வந்து அமர்ந்து விட்டார் பிரம்மா. இதுவே பெரும் சாதனைக்குப் பிள்ளையார் சுழியாக அமைந்தது.
அது முதல் தஞ்சை ஜில்லாவிலே கேட்பாரற்றுக் கிடந்த சிலைக்ளுக்கெல்லாம் அடித்தது யோகம். திரு தொண்டைமானவர்களின் ஆர்வமும் தூண்டுதலும் ரெவினியூ இலாகாவினரிடையேயும் மக்களிடையேயும் புது விழிப்பையும் உற்சாகத்தையுமே ஊட்டி விட்டன. ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று சிலைகளைக் கொண்டு வந்து குவித்தார்கள். பழைய அரண்மனையின் ஒரு பகுதியிலேயே இவை குடியேறின. சிற்பங்களுக்கேற்ப பீடங்களும், விளக்கங்களும் அமைக்கப்பட்டன.
குறைந்த கால அளவில் கவினார் கலைக்கூடம் ஒன்று உருவாகிவிட்டது. தொண்டைமானவர்களது விடா முயற்சியால். பொருளாதார நிலையைச் சரிக்கட்ட கலை விழாக்களும் நடத்தப் பெற்றன. தஞ்சையில் இதுபோல முன்னும் நடந்ததில்லை.பின்னும் நடந்ததில்லை என்னும் அளவுக்குப் புகழ் பெருகியது. கலைக் கூடத்திலே இன்று சேர்த்து வைக்கப்பட்டுள்ள கலைச் செல்வங்களின் மதிப்பு சுமார் மூன்றரைக் கோடி ரூபாய் என்று மேல் நாட்டு நிபுணர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் தொண்டைமான் அவர்களின் பணியின் உயர்வையோ சிறப்பையோ நான் சொல்ல வேண்டியதில்லையல்லவா?
4
பாஸ்கரத் தொண்டைமானின் அரும் பணியைப் பற்றி இன்று எத்தனை பேர் அறிவர்? அவரது பணியின் சிறப்பைச் சொல்வார் இன்று இல்லையே!
சிலைகளை இன்று கடத்தியோர் பற்றிப் பெரிதாக மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்பட்டதாகக் காணோம். அதைக் கண்டுபிடித்த போலீஸ் அதிகாரியும் பெரிதும் பாராட்டப்படக் காணோம்.
மாறாக காமக் கவிஞன் அழைத்த கதையும், சினிமாக் கதை திருட்டுக் கதையா, இல்லையா அதில் வருபவரின் பெயர் யாருடையது என்பதைப் பற்றியும் தான் ‘விழிப்புணர்வும்’, சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
நொடிக்கு ஒரு செய்தி; நாளுக்கு ஒரு வீடியோ!
சமூக அவலங்கள் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகள் தேவை தான்.
அத்துடன் கூட, தமிழ் மக்கள் சிலைகளின் மீதும் கருத்தை வைக்க வேண்டிய தருணம் இது!
நமது பாரம்பரியத்தை உணர்த்தும் சிலைகளைக் காப்போம்; சந்ததிகளுக்கு அளிப்போம்!
****
R.Nanjappa (@Nanjundasarma)
/ November 18, 2018ஸ்ரீ பாஸ்கரத் தொண்டைமான் ஒரு சிறந்த கலா ரசிகர், விமர்சகர். Carlyle, Ruskin போன்ற சிறந்த இலக்கியவாதி. தமிழ் நாட்டில் யார் கண்டுகொள்வார்கள்? தெய்வீகத் தமிழில் திளைத்த திரு.வி.க, டி.கே.சி ஆகியோர் போன்று அவரையும் ஓரங்கட்டிவிட்டனர். கற்றோரைக் கற்றோரே காமுறுவர்!
இவருடைய இலக்கிய அறிவும் கலா ரசனையும் ஓருங்கே சேர்ந்து பரிமளிப்பதை இவருடைய ” வேங்கடம் முதல் குமரிவரை”, ‘வேங்கடத்துக்கு அப்பால்” ஆகிய புத்தகத் தொகுதியில் படித்து அனுபவிக்கலாம். நமது புராதனக் கோவில்களைப்பற்றிச் சொல்லும் இப்புத்தகங்கள் பொக்கிஷமாகத் திகழ்கின்றன.
இதில் ஒரு பகுதியில் ஒரு விஷயத்தை விளக்குகிறார், பழநி முருகன் விக்ரஹம் பற்றியது. பழநி முருகன் தரிப்பது ஆண்டிக்கோலம். ஆனால் அது மொட்டை ஆண்டியா, சடையாண்டியா எனச் சந்தேகம்! இதைதீர்க்க அங்கு சென்று விக்ரஹத்தை நன்கு பார்த்து, அவர் சடையாண்டியே எனத் தீர்ப்பு வழங்குகிறார்! இப்படிப் பல அருமையான செய்திகள் அடங்கியது இப்புத்தகத் தொகுதி. இன்று வெளிவரும் கோவில் பற்றிய புத்தகங்களில் இத்தகைய இலக்கிய நயம் இருப்பதில்லை!
நம் நினைவில் இருக்கவேண்டிய மாமனிதர்!
Santhanam Nagarajan
/ November 18, 2018வேங்கடம் முதல் குமரி வரை ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கிறது. கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம் 2005இல் அவரது நூற்றாண்டு பிறந்த விழாவையொட்டி வெளியிடப்பட்ட நூல். அவரது புதல்வியார் ராஜேஸ்வரி நடராஜன், டி,கேசி.ராஜாஜி உள்ளிட்டோர் எழுதிய அழகான கட்டுரைகள் இதில் உள்ளன. இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம். பலருக்கும் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
பதிவிற்கு நன்றி. நாகராஜன் (முகாம் : சான்பிரான்ஸிஸ்கோ)