
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 November 2018
GMT Time uploaded in London –11-12 AM
Post No. 5682
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
மநு நீதி நூல் – பகுதி 33
மநு தர்ம சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் 110 ஸ்லோகம் வரை கண்டோம். இன்று இறுதி வரை பார்த்து ஐந்தாவது அத்தியாயத்தை முடிப்போம்.
1.இந்தப் பகுதி ரத்தின, தங்கம், வெள்ளி முதலிய பண்டங்களையும், பாண்டங்களையும் சுத்தம் செய்வது எப்படி என்று துவங்குகிறது. மநு, மனிதர்களின் சுத்தம் பற்றி மட்டுமன்றி ஏனையவற்றையும் விவாதிப்பது அக்கால நமபிக்கைகளைக் காட்டுகிறது.
கலைஞரின் கையும், பெண்ணின் வாயும் எப்போதும் சுத்தமானது-மநு சர்ட்டிபிகேட்
முதலில் புல்லட் பாயிண்டுகளில் (bullet points)
முக்கிய விஷயங்களை அலசுவேன்.
2.மநுவை எதிர்த்து துஷ்பிரசாரம் செய்யும் அயோக்கியர்கள் அடிக்கடி காட்டும் முக்கிய ஸ்லோகம் இந்தப் பகுதியில் வருகிறது. இந்துப் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று
மநு செப்பியதாக வெளிநாட்டு விஷமிகளும், திராவிட, மார்கஸீய அரை வேக்காடுகளும் அடிக்கடி மேற்கோள் காட்டுவது ஸ்லோகம் 148. இதை மற்ற ஸ்லோகங்களுடன் கோர்வையாகப் படிக்கையில் மநு, ஒரு பெண்ணின் பாதுகாப்புக்காகச் சொன்னானே தவிர, சுதந்திரம் இருக்கக்கூடாது என்று செப்பவில்லை என்பது வெள்ளிடை மலையென விளங்கும். அது மட்டுமல்ல. வேறு இடங்களில் பெண்களுக்கு ஆதரவாக மநு சொன்ன விஷயங்களை வேண்டுமென்றே மறைப்பர். எந்தக் குடும்பத்தில் ஒரு பெண் அழக்கூடிய நிலைக்குத் தள்ளப் படுகிறாளோ அநதக் குடும்பம் வேரோடு சாயும்- அடியோடு அழியும் என்று மநு சொன்னதைக் காட்ட மாட்டர்கள் அயோக்கியர்கள். அது மட்டுமல்ல; பெண்களுக்குப் புத்தாடைகளையும், நகை நட்டுகளையும் வாங்கித் தந்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் முழுக வைக்கும் இடத்தில்தான் தெய்வங்கள் வசிக்கும் என்று மநு சொன்னதையும் திருடர்கள் மறைப்பர். இதே அத்தியாயத்தில் கூட பெண்ணின் வாய் எப்போதும் சுத்தமானது என்று சொல்லுவதையும் கொடுக்காமல் ஸ்லோகம் 148-ஐ மட்டும் கொடுப்பவர்களை அயோக்கியர்கள் என்று எளிதில் இனம் காணலாம்.
இதைவிட முக்கியமானது இது சங்கத் தமிழ் பாடல்களிலும் உளது. பெண் என்பவள் பிறந்த இடத்துக்குச் சொந்தமானவள் அல்ல; அவள் ஓடிப்போனதைப் பற்றி ஏன் வருந்துகிறாய்? என்று ஒர் புலவர் பாடுகையிலும் இந்த விஷயம் வருகிறது.

3.அடுத்தபடியாக ‘தஸ்யூ’ என்னும் சொல்
வரும் ஸ்லோகம் 131. இதற்குத் திருடன், கொள்ளைக்காரன், புறம்போக்கு என்று பொருள். அந்த அர்த்தத்தில் உலகப் புகழ் காளிதாஸன் போன்றோர் பயன்படுத்துவதை அனவரும் அறிவர். ஆனால் ஆரம்பத்தில் வேதங்களை மொழிபெயர்த்த அயோக்கிய வெள்ளைக்காரர்கள், இதை ‘பழங்குடி மக்கள்’- ‘ஆரியர்களை எதிர்த்தவர்கள்’- என்று திருட்டுத்தனமாக மொழி பெயர்த்தனர். சங்க இலக்கியத்தில் சில ஜாதிகளைக் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்றும், கல்லாதவர்கள் என்றும் புலவர்கள் பாடியுள்ளனர். அதற்காக அந்த இனத்தையே நாம் பழிப்பத்தில்லை. இது போல எந்த சமூகத்திலும், ஜாதியிலும் கொள்ளைக்காரர்கள் இருப்பர். ராபர்ட் கிளைவ் போன்ற வெள்ளைக்காரன் ஒரு தஸ்யூதான்.
பெண்ணின் வாய், கலைஞரின் கை

4.ஒரு பெண்ணை முத்தம் கொடுத்தால் அது எச்சில் ஆகாதா, ஒரு பறவை கொத்தி கீழே விழும் பழம் எச்சில் இல்லையா, குயவன், நெசவாளி, தச்சன் போன்றோர் செய்து கொடுப்பதை எல்லாம் பூஜையில், யாகத்தில் பயன்படுத்துகிறோமே இவை எல்லாம் கீழ் ஜாதியினர் தொட்டதுதானே என்று 5000 ஆண்டுகளுக்கு முன் வாதம் செய்த முட்டாள்களுக்கு மநு– மாபெரும் ஜீனியஸ் great genius– மாபெரும் உளவியல் நிபுணந் psychologist – அழகாகப் பதில் சொல்லிவிட்டான். இவை எல்லாம் எச்சில், தீட்டு, அசுத்தம் இல்லை – இல்லவே இல்லை. இந்த ஸ்லோகத்தை நான் கீழே தந்துள்ள திருலோக ஸீதாரமன் சரியாக மொழி பெயர்க்கவில்லை. காரணம் அவர் திருவைந்திரபுரம் இராமாநுஜாச்சாரியாரைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட நூலை
எளிமையாக்கித் தந்தவரே; ஒரிஜினல் மொழி பெயர்ப்பாளர் அல்ல. மநு நூல் மீது உரை எழுதியோர், சரியான வியாக்கியானம் செய்து இது கைவினைஞர்கள், கலைஞர்களைக் குறிக்கும் என்று விளக்கியுள்ளனர்.
5.உடலில் ஏற்படும் 12 வகை அசுத்தங்கள் என்ன? (ஸ்லோகம் 134, 135)
6.ஐந்து வகை சுத்தி கரிப்பு முறைகள் என்ன?( ஸ்லோகம் 124) என்பன கவனிக்கத்தக்கவை
7.பிராமணன் சொன்னால் போதும் அதை சுத்தம் என்று எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லும் ( ஸ்லோகம் 127) பகுதியும் குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் பிராஹ்மணர்கள் ஸத்திய சீலர்களாக இருந்ததால் அவ்வளவு மதிப்பு. வெளிநாட்டு யாத்ரீகர்களும் பிராஹ்மனர்களை உயர்த்திப் பேசியிருப்பது இதற்கு அத்தாட்சி பத்திரம் கொடுக்கும். அது மட்டுமல்ல. சங்க இலக்கியத்தில் அதிகமான செய்யுட்களை யாத்த கபிலரை மட்டும் பல புலவர்கள் ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ — என்று புகழ்வதையும் கருத்திற்கொள்கையில் இதன் பொருள் பிரகாஸமாகும்.
என் சொந்த அநுபவம்–என் அம்மா, வீட்டு வாசலில் வரும் காய்கறிக்காரி, கீரைக்காரி, மாவடு விற்பனை செய்யும் பெண்மணியிடம் பொருட்களை வாங்குகையில், ‘இதோ பாரம்மா, இத்தனை ,,,,,,, (நம்பரைச் சொல்லி) பொருட்களைத்தான் வீட்டுக்குள் கொண்டு செல்கிறேன், நன்றாகப் பார்த்துக்கொள்’ என்பார். அதற்கு அந்த
பெண்மணி, ‘அம்மா, நீங்கள் எல்லாம் சாமி மார் (பிராஹ்மணர்கள்), பொய் சொல்ல மாட்டீர்கள்; என்னிடம் காட்ட வேண்டாம்’ என்பாள். அநத அளவுக்கு உண்மை விளம்பிகளாகப் பிராஹ்மணர்கள் இருந்தவரை அவர்களை இலக்கியங்களும் பூசுரர்கள் (பூவுலகத்தில் வாழும் தேவர்கள்) என்று பாராட்டின.

8.தெய்வம் தொழாள்;
கணவனே கண்கண்ட தெய்வம்
கணவனே முதல் தெய்வம்- கணவனுக்குப் பணிவிடை செய்தால், கடவுளைக் கும்பிட வேண்டிய அவஸியம் பெண்களுக்கு இல்லை என்று எல்லா இந்திய மொழி இலக்கியங்களும் விளம்பும். ஆனால் மநுவும், திருவள்ளுவரும் அடித்துக் கூறுவது போல வேறு எவரும் மொழிந்ததாக நாம் அறியோம். கணவனை மட்டும் வணங்கி தெய்வத்தை வழிபடாமல் இருக்கும் பெண்ணுக்கு அபூர்வ சித்திகள் உண்டாகும்; மழை பெய் என்றால் பெய்யும்;மழையை நில் என்றால் நிற்கும் ;முலையை விட்டு எரிந்து அக்கினி தேவனை அழைத்தால் அவன் மதுரை நகரையே (பார்ப்பனர்,பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், வயோதிகரை விடுத்து) எரிப்பான் என்பது வள்ளுவனும், இளங்கோவும் காட்டும் இந்துப் பண்புகள்; இதையே மநுவும் உரைப்பான் (sloka ஸ்லோகம் 155).
9.சதி என்னும் உடன்கட்டை ஏறுதலுக்கு எதிர்ப்பு- ஸ்லோகம் Slokas 156-158 ‘சதி’ இல்லை
ஸ்லோகம் 156 முதல் 158 வரையுள்ள ஸ்லோகங்கள், கணவன் இறந்தவுடன், மனைவி வாழும் முறை பற்றிச் செப்பும்; அது மட்டுமல்ல. மநு வேறு எங்குமே ‘சதி’ என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் பற்றி மொழியவில்லை. இது இரண்டு விஷயங்களைக் காட்டும்:-
1.ஒரிஜினல் மநு வாழ்ந்தது ரிக்வேதம் இருந்த 5000, 6000 ஆண்டுகளுக்கு முந்தைய காலம். ஏனெனில் உலகின் பழைய நூலான ரிக் வேதமும் சதி பற்றி கதைப்பதில்லை. மேலும் ஸரஸ்வதி நதி பற்றியும் ‘ரிக்’கும், மநுவும் கதைப்பர். இவை எல்லாம் ஒரிஜினல் மநு தர்ம சாஸ்திரத்தின் சுவடுகள். ஆக மநுவைப் போல மகளிரைப் பாராட்டிய, போற்றிய பெருமகன் எவருமிலர் என்பதை ஐந்தாம் அத்தியாயம் வலியுறுத்துகிறது.









Tags–கலைஞரின் கை, சதி, சுத்தமானதுபெண்ணின் வாய்,
—-subham–