
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 December 2018
GMT Time uploaded in London – 8-24 am
Post No. 5720
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கம்பன் தனது இராமகாதையில் நிறைய பழமொழிகளைக் கையாளுகிறான். ஒருவனுக்கு எவ்வளவோ பழமொழிகள் தெரிந்திருந்தாலும் அதைக் கையாளுமிடத்தினால்தான் அதன் மகிமை புரியும். காளிதாசன் உலகப் புகழ்பெற்றதற்கு, அவன் கையாண்ட 1200 உவமைகள் மட்டும் காரணம் அல்ல. அதை அவன் பொருத்திக் காட்டிய இடத்தால்தான் அவனை ‘உவமைக்கோர் காளிதாசன்’ என்று உலகம் புகழ்கிறது. அதுபோலக் கம்பனும் உரிய இடத்தில், அரிய வழக்குகளைக் காட்டுவதன் மூலம் இராமாயணத்துக்கு மெருகூட்டினான்.
‘கடலில் கரைத்த பெருங்காயம் போல’ என்ற பழமொழியை நாம் அறிவோம். அதைப் பயன்படுத்துகிறான் கம்பன்.
இதோ அந்தப் பாடல்
அருங்கடல் கடந்து இவ்வூரை அள் எரி மடுத்து வெள்ளக்
கருங்கடல் கட்டி மேருக்கடந்து ஒரு மருந்து காட்டி
குரங்கு இனி உன்னோடு ஒப்பது இல் எனக் களிப்புக் கொண்டேன்
பெருங்கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமைப்பெற்றி
பொருள்
“கடத்தற்கரிய கடலைக் கடந்தேன்; இலங்கைக்கு நெருப்பு வைத்தேன்; கடலுக்கு அணை/பாலம் கட்ட உதவினேன்; மேரு மலையைக் கடந்து சென்று சஞ்சீவி மருந்தினைக் கொண்டு வந்தேன். அதைப் பார்த்து உனக்கு இணையான குரங்கு இந்த உலகில் இல்லை என்று இராமன் சொன்னான். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இப்போது நான் இராமனுக்குச் செய்யும் தொண்டு கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆயிற்றே!”

இது மாயா சீதைப் படலத்தில் (யுத்த காண்டம்) வரும் பாடல்; அதாவது இந்திரஜித், சீதையைப் போல் ஒரு மாய உருவத்தைச் செய்து, அதை அனுமன் முன்னிலையில் கொணர்ந்து வெட்டியபோது, அனுமன் புலம்பிய புலம்பல் இது.
‘கோட்டம்’– என்ற சொல்லுக்கு ‘வாசனை தரும் பொருள்’ என்று அர்த்தம். இங்கே கடல் என்ற சொல்லுடன் வருகையில் அது பழமொழியை ஒட்டியே வந்தது.
இந்தப் பாடலிலும் இதற்கு முந்தைய ஓரிரு பாடல்களிலும் அனுமனின் சாகசச் செயல்கள் அனைத்தையும் கம்பன் பட்டியலிடுவது, அனுமன் துதி/தோத்திரம் போல அமைந்துளது.
அனுமனைச் ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவதற்குக் காரணம், அவன் ஒரு பத்திரிக்கையாளன் போல – journalist ஜர்னலிஸ்ட் போல- எழுத, பேச, சொல்ல வல்லவன். சீதை எங்கு இருக்கிறாள் என்று அறிய பல்லாயிரம் குரங்குகளை எண் திசைக்கும் ஏவிய இராமன், சீதை பற்றிய செய்திக்காக காத்திருந்தபோது, அனுமன் வந்தவுடன் சொன்ன செய்தி ‘கண்டனன் சீதையை’ என்பதாகும். அத்தைப் பாட்டி கதை சொல்லுவது போலச் சொல்லாமல், பத்திரிக்கை தலைப்பு போல ‘கண்டேன் சீதையை’ என்றான். இராமன் அவனை கட்டி அணைத்தான். இது பழைய பாடல். அதை இப்போது அனுமன் நினைவு கூறுவதன் மூலம் அந்தக் காட்சியும் அதன் முக்கியத்துவமும் மீண்டும் வருகிறது;
இதோ அந்தப் பாடல்,
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன
செஞ்சிலை உரவோன் தேடித் திரிகின்றான் உள்ளம் தேற
அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்றயான் அரக்கன் கொல்லத்
துஞ்சினாள் என்றும் சொல்லத்தோன்றினேன் தோற்றம் ஈதால்

பொருள்
சீதையே! சிறந்த வில்லாற்றல் கொண்ட இராமபிரான் வஞ்சிக் கொடி போன்ற உன்னை எங்கும் காணாது, தன் உயிரையே மறந்து உன்னைத் தேடியபோது, அவன் மனம் மகிழ்வுறுமாறு, ‘அழகிய சொல் உடையாளைக் கண்களால் கண்டேன்’ என்ற நல்ல செய்தியைக் கொடுத்தேன். இப்போது நானே போய் அரக்கன் தாக்கியபோது சீதை செத்துவிட்டாள் என்று சொல்லப் போகிறேனே; இதற்காகவா பிறந்தேன்.
இது சீதையின் மாயத் தோற்றத்தை இராவணன் புதல்வனான இந்திரஜித் வெட்டியபோது பாடிய பாடல்.
ஆக, அனுமனுடைய சாகசப் பட்டியலுடன், இங்கே கம்பன் கவிநயத்தையும் ரசிக்க முடிகிறது.
வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!

TAGS– இராமகாதை, கம்பன், கவிநயம், பெருங்காயம்
–சுபம்–