
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 November 2018
GMT Time uploaded in London – 7-55 AM
Post No. 5716
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பர்த்ருஹரி நீதி சதக தொடர்ச்சி 34,35, 36
‘சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?’ (Post No.5716)
ஸ்லோகம் 34
சிங்கக் குட்டியானாலும் கூட அது மிகப் பெரிய யானையைத் தாக்க விரும்பும்; இளம் வயதானாலும் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆசைப்படுவது வீர தீரர்களின் செயலாகும். பெருமை அடைய, புகழ் பெற வயது ஒரு தடை இல்லை.
ஸிம்ஹக சிசுரபி நிபததி மத மலின கபோலபித்திஷு கஜேஷு
ப்ரக்ருதிரியம் ஸத்வவதாம்ந கலு வயஸ் தேஜஸாம் ஹேதுஹு
“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?
மாற்றம் காண்பதுண்டோ?”
என்ற திரைப் படப் பாடலை இது நினைவு படுத்துகிறது. இயற்றியவர் கண்ணதாசன்; படம்- பாகப் பிரிவினை
xxx

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’
1961ம் ஆண்டு வெளி வந்த திரைப்படத்தின் பாடல் வரிகள்
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’
மிகவும் பொருள் பொதிந்தவை. ஆயினும் இதை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பர்த்ருஹரியும், அதற்கு முன்னர் தெய்வப் புலவன் வள்ளுவனும் செப்பிவிட்டனர்.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியாங்கு – குறள் 247
பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்வு இன்பமாக அமையாது. கருணையற்றவர்களுக்கு சுவர்க்க போகம் கிடைக்காது
பர்த்ருஹரி சொல்கிறார்,
நம்முடைய பரம்பரை எக்கேடு கெட்டுப் போகட்டும்; நம்முடைய குணங்கள் அதல, பாதாளத்துக்குப் போகட்டும்; நம்முடைய அடக்கம் மலை உச்சியிலிருந்து விழட்டும்; நம்முடைய பெருந்தனமை தீயில் கருகட்டும்; நம்முடைய துணிவை வஜ்ராயுதம் துண்டிக்கட்டும்; இப்படியெல்லாம் நடந்தாலும் பணமும் வசதியும் இருந்துவிட்டால் நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம்; பணமும் வசதியும் இல்லாவிடில் மற்ற குணங்கள் அனைத்தும் புல்லுக்குச் சமானம்!
ஜாதிர்யாது ரஸாதலம் குணகணஸ்தத்ராப்யதோ கச்சதாம்
சீலம் சைலதடாப்தத்வபிஜனஹ ஸந்தஹ்யதாம் வஹ்னினா
சௌர்யம் வைரிணி வஜ்ரமாசு நிபதத்வர்த்தோ அஸ்து நஹ கேவலம்
யேனைகேன வினா குணாஸ்த்ருண லவப்ராயாஹா ஸமஸ்தா இமே – 35
பணம் இருந்தால் போதும்; குணம் உதவாது என்ற உலக நடைமுறையை பர்த்ருஹரி அழகாகப் பறைந்தார்.
வள்ளுவன் மொழியும் மற்றுமொரு குறளும் நோக்கற்பாலது
இன்மை என ஒருபாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் -குறள் 1042
வறுமை என்னும் கொடிய பாவி ஒருவனைப் பற்றிக்கொண்டால் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் தொடர்ந்து வரும்– என்பது வள்ளுவன் வாய்ச்சொல்.

பணம் இருந்தால்தான் மற்ற நல்ல காரியங்களை செய்ய முடியும்; அது இல்லாவிடில், அதை நாடித் தேடி ஓடுவதிலேயே வாழ்நாள் கழிந்துவிடும் என்பது சொல்லாமலே விளங்கும்
பர்த்ருஹரி அடுத்த ஒரு ஸ்லோகத்திலும் இக்கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவார்:-
யஸ்யாஸ்தி வித்தம்ஸ நரஹகுலீனஹ
ஸ பண்டிதஹ ஸச்ருதவான் குணக்ஞஹ
ஸ ஏவ வக்தா ஸ ச தர்சநீயஹ
ஸர்வ குணாஹா காஞ்சனமாஸ்ரயந்தி – 36
பணமுள்ளவன்தான் படித்தவன், ப்ரபு; அவன் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்; அவன்தான் வழிகாட்டி; அவன் ஒருவனே அழகன்; பேச வல்லவன்; உண்மைதான்! எல்லா குணங்களும் தங்கத்திலே அடங்கிவிட்டது.
இவ்வாறு பர்த்ருஹரி புலம்புவதின் உள் அர்த்தம் வெள்ளிடை மலை என விளங்கும். இது உலக நடைமுறை.
சங்க இலக்கியப் பாடலான குறுந்தொகையும்
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு –பாடல் 120
பணம் இல்லாதவன் இன்பத்துக்கு ஆசைப்பட்டது போல என்று காட்டும்
பணம் இல்லாதவன் பிணம் என்று நாலடியார் செய்யுள் அறையும்
ஒத்த குடிப் பிறந்த கண்ணும் ஒன்றில்லாதார்
செத்த பிணத்திற் கடை- பாடல் 281

அப்பர் செப்பியது,
மாடுதானதில்லெனின் மானுடர்
பாடுதான் செல்வாரில்லை- (அப்பர் தேவாரம், கொண்டீசரம்-3) என்று மாடு (செல்வம்) இல்லாதவர் படும் பாட்டைப் பாடுவார் அப்பர்
எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கிவ்வுலகில் இன்பமே போல்
ஒட்டாவே கண்டீர்- என்று திருத்தக்க தேவரும் சீவக சிந்தாமணியில் விளம்புவார்.
xxx
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)
பாடல்: பணம் பந்தியிலே -குணம் குப்பையிலே
இசை: கே.வி .மஹாதேவன்
பாடல் வரிகள்: கா .மு. ஷெரீப்
பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே
இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே (பணம்)
ஒன்றும் தெரியாத ஆளானாலும் பணமிருந்தாலே
அவனை உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே (ஒன்றும்)
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை (என்ன)
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்கமாட்டாதே (பணம்)
ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான்
பணம் அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மைதான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (ஏழ்மை)
இதை எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)
உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்களுண்டு
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு(மண்ணாய்)
நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு.(பணம்)
xxx

सिंहः शिशुरपि निपतति
मदमलिनकपोलभित्तिषु गजेषु ।
प्रकृतिरियं सत्त्ववतां
न खलु वयस्तेजसो हेतुः ॥ 1.34 ॥
जातिर्यातु रसातलं गुणगणैस्तत्राप्यधो गम्यतां
शीलं शैलतटात्पतत्वभिजनः सन्दह्यतां वह्निना ।
शौर्ये वैरिणि वज्रम् आशु निपतत्वर्थोஉस्तु नः केवलं
येनैकेन विना गुणस्तृणलवप्रायाः समस्ता इमे ॥ 1.35 ॥
यस्यास्ति वित्तं स नरः कुलीनः
स पण्डितः स श्रुतवान्गुणज्ञः ।
स एव वक्ता स च दर्शनीयः
सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति ॥ 1.36 ॥
TAGS- பணம் பந்தியிலே, ‘சிங்கத்தின் கால்கள், நீதி சதக 34,35, 36
–subham–