
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 5 December 2018
GMT Time uploaded in London – 11-14 am
Post No. 5738
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்களைத் தொடர்ந்து காண்போம்
நீதி சதகம் 37
அரசனுக்கு ஆபத்து கெடு மதி உடையவரின் ஆலோசனை;
சந்யாசிக்கு ஆபத்து பந்தங்கள் (மடம், சொத்து, சுகம்);
புதல்வனுக்கு ஆபத்து அதிக செல்லம்;
அறிவாளிக்கு ஆபத்து தொடர்ந்து படியாமை;
குடும்பத்துக்கு ஆபத்து கெட்ட மகன்/ மகள்;
நற்பெயர்க்கும் மரியாதைக்கும் ஆபத்து கெட்டவர் சஹவாசம்;
புத்திக்கு ஆபத்து கள் குடித்தல்;
விவசாயத்துக்கு ஆபத்து நிலத்தைக் கவனியாமை/ பராமரிக்காது இருத்தல்;
அன்புக்கு ஆபத்து உறவினரை விட்டு வெளிநாடு செல்லல்;
வளத்துக்கு ஆபத்து விவேகமின்மை;
செல்வத்துக்கு ஆபத்து மெத்தனம்.– நீதி சதகம் 37
ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தேன்; ஒருவேளை, வள்ளுவனை பர்த்ருஹரி மிஞ்சிவிடுவானோ என்று. உண்மைதான் வள்ளுவன் ஈரடியில் ஏழுக்கும் மேலான சொற்களில் சொல்லுவதை பர்த்ருஹரி மிகச்சொற்பமான சொற்களில் சொல்கிறான்.
Bhartruhari Nitisataka 37
दौर्मन्त्र्यान्नृपतिर्विनश्यति यतिः सङ्गात्सुतो लालनात्
विप्रोஉनध्ययनात्कुलं
कुतनयाच्छीलं खलोपासनात् ।
ह्रीर्मद्यादनवेक्षणादपि कृषिः स्नेहः प्रवासाश्रयान्
मैत्री चाप्रणयात्समृद्धिरनयात्त्यागप्रमादाद्धनम् ॥ 1.42 ॥
த்ரௌர் மந்த்ர்யான் ந்ருபதிர் விநஸ்யதி யதிஹி சங்காத் ஸுதோ லாலனாத்
விப்ரோ அனத்யயனாத் குலம் குதநயாத்சீலம் கலோபாசனாத்
ஹ்ரீர்மத்யாதனவேக்ஷணாதபி க்ருஷிஹி ஸ்நேஹக ப்ரவாஸாஸ்ரயான்
மைத்ரீ சா ப்ரணயாத் ஸம்ருத்ததிரனயா த்யாகப்ரமாதாத்தனம்
சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்;
ஒரு ஆட்சியாளரிடம் கெட்ட ஆலோசனை வழங்கும் ஒரு அதிகாரியோ, மந்திரியோஇருந்தால் போதும்; அவ்வளவுதான் அந்த அரசனோஆட்சியாளனோ அஸ்தமித்து விடுவான்.

வள்ளுவன் சொல்லுவான்,
நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பதாகும் அறிவு – 451
நல்ல மழை நீர் எந்த நிலத்தில் விழுகிறதோ, அதன் குணத்தை அடையும்; அது போல நல்லவர்கள் யாருடன் சேருகிறார்களோ அந்த குணத்தையே அடைவர் என்பான் வள்ளுவன்
இன்னொரு குறளில் இதை அடிக்கோடிட்டுக் காட்டுவான்
நல்லினத்தினூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்- 460
நல்லவர்கள் துணக்கு இணையான துணை வேறில்லை
தீயவர்கள் தொடர்பு போல துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை
ஆக வள்ளுவனும் பர்த்ருஹரியும் உரைப்பது ஒரே உண்மையையே!

வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்காதே!
கள் குடிப்பது பற்றி இந்துக்கள் அறைவது போல வேறு எவரும் பறைந்தது இல்லை. வள்ளுவனுக்குத் தெரியும்- தமிழர்கள் குடியால் அழிவர் என்று; ஆகையால் பத்துக் குறள்களில் பிட்டுப் பிட்டு வைக்கிறான். பர்த்ருஹரி ஒரே வரியில் சொன்னான்.
கள்ளுக் குடிப்பவன் ஒளியிழப்பர் (921)- அதாவது முகத்தில் தேஜஸ் போய்விடும்; மதிப்பும் மரியாதையும் அழிந்து விடும்
‘உண்ணற்க, உணில் – சான்றோர் இல்லை’ –என்பான் (922) அடுத்த குறளில்
வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்காதேடா தமிழா என்று ஒரு குறளில் செப்புகிறார்
‘பொருள் கொடுத்து மெய்யறியாமைகொளல்’ (925)
‘கள்’ என்பது விஷத்தை குடிப்பதற்குச் சமம்-
‘நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’- 926; என்ன அழகான வாக்கியம்; வள்ளுவனுக்கு இணை வள்ளுவனே! அவர்கள் நடைப்பிணங்கள் என்றும் அதே குறளில் சாடுகிறார்.
கள்ளுண்ணாமை என்னும் பத்து குறட்பாக்களையும் எல்லா இடங்களிலும்போர்டு எழுதி ஒட்ட/கட்ட வேண்டும்.

ஒருவனை வஞ்சிப்பது பந்தபாஸம்
அஞ்சுவதோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பதோரும் அவா-366
துறவறவியலில் அவா அறுத்தல் என்ற அதிகாரத்தில் அழகாகச் சொல்கிறான். ஒருவனைக் கெடுப்பது ஆசைதான். ஆகையால் ஆசைக்கு அஞ்சி வாழ்வதே அறம்; எந்தவித பந்த பாசம் இருந்தாலும் அவன் சந்யாஸி இல்லை.
ஏனெனில் துறவு என்னும் அதிகாரத்தில்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்- 341
ஒருவனுக்கு எந்தெந்தப் பொருளில் ‘அட்டாச்மெண்ட்’ attachment இல்லையோ அநதந்தப் பொருளால் அவனுக்குத் துன்பம் இல்லை.
எதில் நமக்கு விருப்பம்- இணைப்பு- பாசம்- பந்தம் உண்டோ அதனால் துன்பம்தான்.
ஒருவனுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் விவேகமோ, சுறு சுறுப்போ இல்லாவிடில் பணம் அழிந்து போகும்.
‘குந்தித் தின்றால் குன்றும் கரையும்’ என்பது தமிழ்ப் பழமொழி.
குன்று போல தானியமோ, பணமோ இருந்தாலும் உழைக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அது
கரைந்து விடும்.
கூரை மீது ஏறி கொள்ளி வைப்பவனே நல்ல பிள்ளை
மகன் பற்றி வள்ளுவன் சொன்னதை எல்லோரும் அறிவோம்,
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ் சொல் – 70
இவன் தந்தை என்ன என்ன விரதம் இருந்து, எந்தெந்தக் கோவிலுக்குப் போய், சாமியை வேண்டி இந்தப் பிள்ளையைப் பெற்றானோ என்று உலகம் விஅயக்க வேண்டும்; அப்படிப்பட்ட குண நலன்களுடன் இருப்பவ்னே மகன்; இதுவே மகன் செய்யும் உதவி.
இதற்கு நேர் மாறாக இவன் தந்தை இவனை ‘ராகு காலத்தில் பெற்றானோ, அல்லது கெட்ட காலத்தில் பெற்றானோ’ என்று ஊரே தூற்றும்படி இருக்கக்கூடாது.
அடேய், உன் மகன்களில் எவனடா நல்ல பிள்ளை? என்று ஊரே பதறியபோது,கதறியபோது,

‘அதோ கூரை மீது ஏறி கொள்ளி வைக்கிராறானே, அவன்தான் இருப்பதற்குள் நல பிள்ளை’— என்ற கதை ஆகி விடும்.
கணவனோ, மகனோ நீண்ட காலம் பிரிந்து வெளிநாட்டிற்குப் பயணமானால் அந்த வீட்டுப் பெண்மணியோ, மகனோ மகளோ எளிதில் கெட்டுப்போக வாய்ப்பும் உண்டு. அன்பும் மறைவதுண்டு. இதையும் பர்த்ருஹரி செப்புகிறான்.
மொத்தம் 100 ஸ்லோகங்கள்; இன்னும் வரும்.
tags–வள்ளுவன் ,பர்த்ருஹரி, கூரை மீது ஏறி கொள்ளி ,வேண்டாத சனியனை விலை, ‘கள்’, நீதி சதகம் 37
தொடரும்……………………..