
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 9 December 2018
GMT Time uploaded in London – 12-38
Post No. 5756
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பர்த்ருஹரி நீதி சதகம் ஸ்லோகங்கள் 38, 39
தானம் போகோ நாசஸ்திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய
யோன ததாதி ந புங்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி – 38
दानं भोगो नाशस्तिस्रो
गतयो भवन्ति वित्तस्य ।
यो न ददाति न भुङ्क्ते
तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥
பொருள்
“ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது; தானம் கொடுப்பதாலோ, தனக்குப் பயன்படுத்துவதாலோ, இழப்பதாலோ போய்விடும். முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதோருக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கிறது”.
அதாவது,
“செல்வத்தை, காசு பணத்தை, ஒருவன் தனக்கோ பிறருக்கோ பயன்படுத்த வேண்டும் அல்லது அது வீணாகிப் போகும். பணக்காரன், தானும் அனுபவியாமல் தர்மமும் செய்யாமல் இருந்தால் அது நாசமாகும்.-38”
பழமொழி 400 என்னும் தமிழ் நூல் இதை இன்னும் அழகாகச் சொல்லும்.
நாய் கையில் கிடைத்த தேங்காய் போல என்று
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம் –பழமொழி 216
பொருள்
“ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !
மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”
நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.
கருமிகள் எனப்படும் லோபிகளும் இதுபோன்றவர்களே.
4.WHAT MISERS HAVE HOARDED THE WICKED WILL TAKE
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
என்று கொன்றை வேந்தனில் அவ்வையாரும் கூறுவார்
நாம் எல்லோரும் மைடாஸ் (Midas, the Miser) கேட்ட வரம் பற்றிய கதையை அறிவோம்.
xxx
மணிஹி சனோல்லீடஹ ஸமரவிஜயீ ஹேதிதலிதோ
மதக்ஷீணோ நாகஹ சரதி ஸரிதஹ ஸ்யானபுலினாஹா
கலாசேஷஸ் சந்த்ரஹ ஸுரத்ம்ருதிதா பால வனிதா
தனிம்னா சோபந்தே கலிதவிபவாஸார்திஷு நராஹா – 39
मणिः शाणोल्लीढः समरविजयी हेतिदलितो
मदक्षीणो नागः शरदि सरितः श्यानपुलिनाः ।
कलाशेषश्चन्द्रः सुरतमृदिता बालवनिता
तन्निम्ना शोभन्ते गलितविभवाश्चार्थिषु नराः ॥ 1.39 ॥
ரத்தினக் கல்லை அறுத்து அறுத்து பட்டை தீட்டினாலும் ஜொலிக்கத்தான் செய்கிறது;
விழுப்புண் அடைந்தாலும் வெற்றி பெற்ற வீரனின் முகம் பெருமித ஒளி வீசுகிறது;
யானையானது மத நீர் அனைத்தும் வடிந்தும் கம்பீரமாகக் காட்சி தருகிறது;
நதியானது தண்ணீர் குறைந்த காலத்திலும் அழகுடன் தோன்றுகிறது;
அமாவாசைக்கு அடுத்த இரண்டாவது நாளிலும் நிலவு அழகாகத்தான் ஒளிர்கிறது;
காதலனுடன் கட்டிப் புரண்டு காலையில், களைப்புடன் எழுந்தபோதும் மனைவியின் அழகு குன்றவில்லை;
பணக்காரன், அவனது செல்வம் முழுதையும் தர்மம் செய்தபோதும் பொலிவுடன் திகழ்கிறான்.
இவற்றில் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து ரஸிக்கலாம்.
இருந்தபோதும் கவிஞன் சொல்ல வரும் விஷயம், கையில் உள்ள எல்லாவற்றையும் தானம் கொடுத்தபோதும் செல்வந்தனுக்குப் புகழும் புண்ணியமும் எஞ்சி நிற்கும் என்பதாகும்.
காளிதாசனின் ரகுவம்ஸ காவியத்திலும், சங்க இலக்கியப் புற நானூற்றிலும் தானத்தினால் ஒருவனுக்கு ஏற்பட்ட வறுமையை புலவர்கள் புகழ்கிறார்கள்.
அதே போல ஒரு வீரனுக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் அழகு தருமேயன்றி அழகைக் குறைக்காது என்பதையும் தமிழ், ஸம்ஸ்க்ருத நூல்கள் பன்முறை பகர்கின்றன.
இதோ சில எடுத்து காட்டுகள்

மாரி, பாரி, வாரி: காளி.,கம்பன் கபிலன்!!!
Written by London Swaminathan
Post No.1125 ; Dated :– 23 June 2014.
மாரி என்றால் மழை;
பாரி என்பவன் கடை எழு வள்ளல்களில் ஒருவன்;
வாரி என்றால் கடல்.
காளிதாசன், கபிலன் என்பவர்கள் 2000 ஆண்டுகளு க்கு முன் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உதித்தவன் கம்பன் என்னும் கவிஞன். இம்மூன்று கவிஞர்களும் சொல்லேர் உழவர்கள்; ஒரே விஷயத்தை தமக்கே உரித்தான பாணியில் நயம்பட உரைப்பதைப் படித்து மகிழ்வோம்.
கி.மு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன். அவனது ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில் 200—க்கும் மேலான உவமைகளை சங்கப் புலவர்கள் கையாண்டிருப்பதை ஏற்கனவே ஆறு, ஏழு கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதி இருக்கிறேன்.

ரகுவம்சம் (17—72) என்னும் காவியத்தில் வரும் ஸ்லோகம் இது:
வறுமையில் வாடிய புலவரும் ஏழைகளும் அதிதி என்ற அரசனை அடைந்தனர். அவன் அள்ளி அள்ளிக் கொடுத்தான். அந்தப் பொருளை வாங்கி ஊருக்குத் திரும்பி வந்தவுடன் அவர்களும் எல்லோருக்கும் வாரி வழங்கி வள்ளல் என்ற பெயர் எடுத்துவிட்டனர். இதன் உட் பொருள்:–அப்பொருளைப் பெற்றோர், அப்பொருளுக்கு மூல காரணமான அதிதி என்னும் மன்னனையே மறந்துவிட்டனர். மேகங்களும் இப்படித்தான் கடல் நீரை மொண்டு எல்லோருக்கும் மழையாகத் தருகிறது. இதன் உட்பொருள்:–எல்லா கவிஞர்களும் மேகங்களை வள்ளல் என்று புகழ்கின்றனர். ஆனால் அந்த மேகங்களுக்கும் நீர் கொடுத்தது கடல் என்பதை மறந்துவிட்டனரே!!
ரகுவம்சம் 1-18ல் திலீபன் என்னும் மன்னனின் கொடைத் தன்மையை வருணிக்கையில் ‘’சூரியன் கடல் நீரை உறிஞ்சுவது ஆயிரம் மடங்கு திருப்பித் தருவதற்கன்றோ! அதே போல திலீபன் வரி வாங்கியதும் ஆயிரம் மடங்கு மக்களுக்குத் திருப்பித் தருவதற்கன்றோ!!’’ – என்பான்.
ரகுவம்ச அரசர்கள் எப்படிக் கொடுத்துக் கொடுத்து வறியவர் ஆயினரோ அதே போல பாரியும் ஆய் என்ற வள்ளலும் வறியவர் ஆனதை முடமோசியாரும் கபிலரும் பாடுகின்றனர்.
புறம் 127 முடமோசியார் பாடிய பாடலில், ‘’ உன் மனைவி கழுத்தில் உள்ள தாலி ( ஈகை அரிய இழையணி மகளிரொடு ) மட்டுமே கொடுக்க இயலாது. மற்ற எல்லாவற்றையும் நீ பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய் என்பார்.
கபிலன் பாடல்
பாரியினுடைய 300 ஊர்களும் ஏற்கனவே இரவலர்க்கு வழங்கப்பட்டு விட்டது என்பதை முற்றுகையிட்ட மூவேந்தரிடம் கபிலர் கூறினார்.
புறம் 107 கபிலர் பாடிய பாடலில், மேகம் உவமை வருகிறது.:-
பாரி பாரி என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே.
எல்லோரும் பாரியையே புகழ்கின்றனரே. உலகத்தைக் காப்பதற்கு மாரி (மழை/மேகம்) யும் உள்ளனவே. இது பழிப்பது போல பாரியைப் புகழ்வதாகும்.

கம்பன் பாடல்
கம்பனும் ராமாயண பால காண்டத்தில் இதே உத்தியைக் கையாளுகிறான்:
புள்ளி மால் வரை பொம் எனல் நோக்கி, வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின் , வழங்கின் மேகமே (ஆற்றுப் படலம், பால காண்டம்)
மற்றவர்களுக்கு தானம் செய்யும்போது ஏற்படும் இன்பத்தைக் கருதி தம்மிடமுள்ள செல்வத்தை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களைப் போல மேகங்களும் கோசல நாட்டில் மழையைக் கொட்டித் தீர்த்தனவாம்! இது கடைசி இரண்டு வரிகளின் பொருள்.

முதல் இரண்டு வரிகளின் பொருள்:– பெருமையுடைய இமயமலை பொலிவுடையதாக இருக்க வேண்டும் என்று கருதி வெள்ளி நிறக்கம்பிகள் போல தாரை தாரையாக மழை இறங்கியது.
ஆக மேகத்தையும் கடலையும், மழையையும் கொண்டு மன்னர்களின் வள்ளல் தன்மையை புலவர்கள் விளக்கும் நயம் மிகு பாடல்கள் படித்துச் சுவைப்பதற் குரியனவே!
உலகில் இப்படி வள்ளன்மைக்கு உவமையாக மழை, மேகம், கடல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை பாரதம் முழுதும் வடமொழி, தென்மொழிப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். இது பாரதீயர்களின் ஒருமுகச் சிந்தனையைக் காட்டுகிறது, ஆரிய—திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோருக்கு இதுவும் ஒரு அடி கொடுக்கும்!
tags– நீதி சதகம் ஸ்லோகங்கள் 38, 39
–சுபம்–
tskraghu
/ December 11, 2018Enjoyed reading it, thank you.
Tamil and Vedas
/ December 11, 2018Thanks.