பாரதியும் வானசாத்திரமும்! – 2 (Post No.5769)

Written by S Nagarajan

Date: 12 DECEMBER 2018


GMT Time uploaded in London –4- 59 am


Post No. 5769

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாரதி இயல்

பாரதியும் வானசாத்திரமும்! – 2

ச.நாகராஜன்

பாரதியார் வானவியல் பற்றிக் கூறிய பாடல்களில் முக்கிய வரிகள்/ பகுதிகள் இங்கு தொடர்கின்றன.

பாரதியாருக்கு அறிவியல் பூர்வமான வானவியலில் மிக அதிகமாக ஆர்வம் உண்டு.

சூரியன், சந்திரன், நட்சத்திரம், அண்டம் இவற்றை எல்லாம் கவிதைப் பொருளாக உள்ள அனைத்திற்கும் பாரதியார் பயன்படுத்தி உள்ளார்.

சுட்டும் விழிச்சுடர் தான் சூரிய சந்திரரோ என்பன போன்ற உவமைகள் ஏராளம் உள்ளன.

ஒவ்வொரு வானக் காட்சியிலும் அவர் இறைவனின் மஹாசக்தியை எண்ணி வியக்கிறார்.

தமிழர்கள் வானவியலில் அதிக ஆர்வம் காட்டவில்லையே என்ற பச்சாதாபமும் அவருக்கு உண்டு.

முன்னாளில் வான சாஸ்திரத்தில் இந்தியா தலை சிறந்து விளங்கியதை அவர் நினைவு கூர்கிறார்.

இன்று அவர் இருந்தால் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ விண்ணில் ஏவும் ஏவுகணைகளைப் பார்த்து சந்தோஷப்படுவார்.

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்ற அவரது கனவை இந்தியா கூடிய விரைவில் நிறைவேற்றும்.

கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதியை இங்கு தொடர்கிறோம்:

கண்ணன் என் தாய்

விந்தைவிந்தை யாக எனக்கே – பல 

விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்; 
சந்திரனென் றொரு பொம்மை – அதில் 

தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்; 
மந்தை மந்தையா மேகம் – பல 

வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்; 
முந்தஒரு சூரியனுண்டு – அதன் 

முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. 

வானத்து மீன்க ளுண்டு – சிறு 

மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்

கண்ணன் எனது சற்குரு

சந்திரன் சோதி யுடையதாம்; – அது 

சத்திய நித்திய வஸ்துவாம்; – அதைச் 
சிந்திக்கும் போதினில் வந்துதான் – நினைச் 

சேர்ந்து தழுவி அருள்செயும் -; 

”ஆதித் தனிக்பொரு ளாகுமோர்; – கடல் 

ஆருங் குமிழி உயிர்களாம்; – அந்தச் 
சோதி யறிவென்னும் ஞாயிறு – தன்னைச் 

சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; – இங்கு 
மீதிப் பொருள்கள் எவையுமே – அதன் 

மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;-

கண்ணம்மா – என் காதலி – 1 
(காட்சி வியப்பு) 

செஞ்சுருட்டி – ஏகதாளம் 
ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான், – கண்ணம்மா! 

சூரிய சந்திர ரோ? 
வட்டக் கரிய விழி, – கண்ணம்மா! 

வானக் கருமை கொல்லோ? 
பட்டுக் கருநீலப் – புடவை 

பதித்த நல் வயிரம் 
நட்ட நடு நிசியில் – தெரியும் 

நக்ஷத் திரங்க ளடீ! …

கண்ணம்மா – என் காதலி – 2 
(பின் வந்து நின்று கண் மறைத்தல்) 

நாதநாமக்கிரியை – ஆதிதாளம் 
சிருங்கார ரசம்

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே 

வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்; 
மூலைக் கடலினையவ் வான வளையம் 

முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்; 

கண்ணம்மா – என் காதலி – 6
வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு; 

 
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு; 

கவிதைத் தலைவி

வான சாத்திரம்,மகமது வீழ்ச்சி,


சின்னப் பையல் சேவகத் திறமை;


எனவரு நிகழ்ச்சி யாவே 

நிலாவும் வான்மீனும் காற்றும்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;


தாரகை யென்ற மணித்திரள் யாவையும்
சார்ந்திடப் போமனமே,
சரச் சுவையதி லுறி வருமதில்
இன்புறு வாய்மனமே!


சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத்
திங்களையுஞ் சமைத்தே
ஓரழ காக விழுங்கிடும் உள்ளத்தை

ஒப்பதொர் செல்வமுண்டா’

சாதாரண வருஷத்து தூம கேது

எண்ணில் பல கோடி யோசனை யெல்லை

எண்ணிலா மென்மை யியன்றதோர் வாயுவால்

புனைந்த நின்னொடு வால் போவதென்கிறார்;

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்

நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;

உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே

தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கிலர்

சுய சரிதை

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;

உலகத்தை நோக்கி வினவுதல்

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?

ஆத்ம ஜெயம்

அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?

கிளிப்பாட்டு

ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று, 
ஆயிர மாண் டுலகில் – கிளியே! – அழிவின்றி வாழ்வோமடீ! 

சூரிய தரிசனம் 
ராகம் – பூபாளம் 

சுருதி யின்கண் முனிவரும் பின்னே 
      தூமொ ழிப்புல வோர்பலர் தாமும் 
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும் 
      பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்; 
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே! 
      பானுவே! பொன்செய் பேரொளித் திரளே! 
கருதி நின்னை வணங்கிட வந்தேன்; 
      கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 

வேதம் பாடிய சோதியைக் கண்டு 
      வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்; 
நாத வார்கட லின்னொலி யோடு 
      நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்; 
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே 
      கடுகியோடும் கதிரினம் பாடி 
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன் 
      அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 


 ஞாயிறு வணக்கம் 

கடலின்மீது கதிர்களை வீசிக் 
      கடுகி வான்மிசை ஏறுதி யையா! 
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு 
      பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள். 
உடல் பரந்த கடலுந் தன்னுள்ளே 
      ஒவ்வொரு நுண்டுளி யும்வழி யாகச் 
சுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே 
      சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே. 

என்ற னுள்ளங் கடலினைப் போலே 
      எந்த நேரமும் நின்னடிக் கீழே 
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும் 
      நின்றன் ஜோதி நிறைந்தது வாகி 
நன்று வாழ்ந்திட செய்குவை யையா! 
      ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா! 
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம் 
      வாழ நோக்கிடும் வள்ளிய தேவா! 

காதல் கொண்டனை போலும் மண்மீதே, 
      கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே! 
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல் 
      மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை; 
சோதி கண்டு முகத்தில் இவட்கே 
      தோன்று கின்ற புதுநகை யென்னே! 
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே 
      ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன். 


வெண்ணிலாவே 

எல்லை யில்லாதோர் வானக் கடலிடை 
      வெண்ணிலாவே! – விழிக் 
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை 
      வெண்ணிலாவே! 
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு 
      வெண்ணிலாவே! – நின்றன் 
சோதி மயக்கும் வகையது தானென்சொல் 
      வெண்ணிலாவே! 
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன் 
      வெண்ணிலாவே! – இந்த 
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன் 
      வெண்ணிலாவே! 
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று 
      வெண்ணிலாவே! – வந்து 
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு 
      வெண்ணிலாவே! 

மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர் 
      வெண்ணிலாவே! – அஃது 
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது 
      வெண்ணிலாவே! 
காத லொருத்தி இளைய பிராயத்தள் 
      வெண்ணிலாவே! – அந்தக் 
காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள் 
      வெண்ணிலாவே! 
மீதெழும் அன்பின் விலைபுன் னகையினள் 
      வெண்ணிலாவே! – முத்தம் 
வேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு 
      வெண்ணிலாவே! 
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் 
      வெண்ணிலாவே! – நின் 
தண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்? 
      வெண்ணிலாவே! 

நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு 
      வெண்ணிலாவே! – நன்கு 
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் 
      வெண்ணிலாவே! 
மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன் 
      வெண்ணிலாவே! – அந்த 
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன் 
      வெண்ணிலாவே! 
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி 
      வெண்ணிலாவே! – இங்கு 
தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர் 
      வெண்ணிலாவே! 
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும் 
      வெண்ணிலாவே! – நல்ல 
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் 
      வெண்ணிலாவே! 

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர் 
      வெண்ணிலாவே! – நினைக் 
காதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை 
      வெண்ணிலாவே! 
சீத மணிநெடு வானக் குளத்திடை 
      வெண்ணிலாவே! – நீ 
தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை 
      வெண்ணிலாவே! 
மோத வருங்கரு மேகத் திரளினை 
      வெண்ணிலாவே! – நீ 
முத்தி ணொளிதந் தழகுறச் செய்குவை 
      வெண்ணிலாவே! 
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் 
      வெண்ணிலாவே! – நலஞ் 
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ? 
      வெண்ணிலாவே! 

மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும் 
      வெண்ணிலாவே! – உன்றன் 
மேனி யழகு மிகைபடக் காணுது 
      வெண்ணிலாவே! 
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை 
      வெண்ணிலாவே! – மூடு 
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும் 
      வெண்ணிலாவே! 
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் 
      வெண்ணிலாவே! – நின் 
சோதி வதனம் முழுதும் மறைத்தனை 
      வெண்ணிலாவே! 
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள் 
      வெண்ணிலாவே! – இருள் 
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி 
      வெண்ணிலாவே! 

இன்னும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவற்றில் அவன் கண்ட வானக் காட்சிகளை அடுத்துப் பார்த்து இந்தத் தொடரை முடிப்போம்!

***

அடுத்த கட்டுரையுடன் இந்தக் குறுந்தொடர் முடியும்

Leave a comment

Leave a comment