
Written by S Nagarajan
Date: 1 February 2019
GMT Time uploaded in London – 5-59 am
Post No. 6015
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
நாட்டு நடப்பு
காலம் மாறிப் போச்சு!
ச.நாகராஜன்
காலம் மாறிப் போச்சு!

ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கையில் எப்படியெல்லாம் காலம் நம்மிடம் மாயாஜாலம் செய்கிறது என்பதை நினைத்துப் பார்த்து வியக்கிறேன்.
பழைய காலத்தில் மாலை வேளைகளில் பெண்கள் தங்களுக்குத் தெரிந்த கீர்த்தனைகளைப் பாடி மகிழ்வர். இப்போது எல்லோர் காதிலும் ஒரு வயர்.
தனித் தனிப் பாடல்கள். என்ன பாடல்களோ, யாருக்குத் தெரியும்.
பழைய காலத்தில் அசுர சாதகம் செய்து ஒரு பாடலை ‘ப்ராக்டீஸ்’ செய்து பாடி அப்ளாஸ் வாங்குவர்.
இப்போதோ ஒரு பாடலுக்கே பல பாடகர்கள்.
ஒருவர் பாடியது இன்னொருவருக்குத் தெரியாது. தான் பாடியதில் எந்த வரியை இசை அமைப்பாளர் எடுத்துக் கொள்ளப் போகிறார், அதுவும் தெரியாது.
பக்க வாத்தியங்களின் கதியும் இதுவே தான்.
ஒவ்வொருவருக்கும் தனி டிராக். ஒவ்வொரு வாத்தியத்திற்கும் இன்னொரு டிராக்.
நாம் தான் ‘க்ராக்’!

தீப்பெட்டி படங்களாகச் சேர்ப்பது ஒரு ஹாபி.
அந்தப் படங்களுக்கு வந்தது வேட்டு. லைட்டர் வந்தது. தீப்பெட்டியின் உற்பத்தி குறைந்தது. படங்களும் சிறிது சிறிதாக மறைந்தன.
ஸ்டாம்ப் சேர்ப்பது ஹாபி.
அதற்கும் வந்தது வேட்டு.
முதலில் கூரியர். தபால் அனுப்புவது மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. ஸ்டாம்புகளை வாங்குபவர் எண்ணிக்கையும் குறைந்தது.
அடுத்து மொபைல் போன். அதற்கப்புறம் மின்னஞ்சல்.
நொடிக்கு நொடி பேசலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் எவருடன் வேண்டுமானாலும் உலகின் எந்தக் கோடிக்கும் பேசலாம். யாருக்கு வேண்டும் கடிதம்?
ஸ்டாம்ப் பயன்பாடு அறவே குறைந்து விட்டது.
எப்படியெல்லாம் தபால்தலைகளைச் சேர்ப்போம்! அடடா, அதற்கு ஒரு போட்டி.
அதை வைக்க ஸ்டாக் புக்குகள் வாங்குவோம். ஸ்பெஷலாகத் தயாரிக்கும் அந்த ஸ்டாக் புக் ஒவ்வொன்றும் 25 ரூபாய்! அடேயப்பா, அவ்வளவு ரூபாயா! கொடுத்து வாங்கத் தான் செய்தோம்!

போஸ்ட் ஆபீஸ் சென்று பிலாடெலிக் கவுண்டரில் முதல் நாள் கவரில் அன்று வெளியான ஸ்டாம்பை ஒட்டி முதல் நாள் முத்திரை வாங்குவதில் தான் எத்தனை ஆனந்தம்.
பாரதியார் தபால் தலை, அதன் முதல் நாள் உறை! அதற்கு ஒரு சீல்!
பாரதியாரே நேரில் நம்மிடம் வந்தாற் போல ஒரு மகிழ்ச்சி!
விவேகானந்தர் ஸ்டாம்ப்! திருவள்ளுவர் ஸ்டாம்ப்! எல்லாமே அதிசயம். ஒரே பரவசம்.
மகான்களாக ஒரு தீமாடிக் கலெக்ஷன்! பறவைகளாக ஒன்று! விலங்குகளாக ஒன்று! தேசியத் தலைவர்களுக்கு ஒன்று; கொடிகளுக்குத் தனி! பின்னர் வந்த அறிவியல் விண்வெளிப் புரட்சியில் விண்வெளி வீரர்களுக்கும் விண்கலங்களுக்கும் தனி கலெக் ஷன்! விஞ்ஞானிகளுக்கு ஒன்று என்றால் திரைப்படங்களுக்குத் தனி! இப்படி எண்ண மாளாவிதத்தில் தனித் தனி ஸ்டாக் புக். இதற்கிடையில் தேசம் வாரியாகச் சேர்ப்பவர்கள் பத்தாம் பசலியாக ஆயினர்.
ஆனால் அதே சமயம் ட்ரை ஆங்கிள் ஸ்டாம்ப், வட்ட ஸ்டாம்ப், டைமண்ட் ஸ்டாம்ப், மிக மிக நீளமான ஸ்டாம்ப் போன்ற கலெ க்ஷனை வைத்திருப்பவருக்கு தனிமவுசு.

3 D ஸ்டாம்ப் இருக்கா என்று கேட்டால் அவருக்கு ஒரு தனி இடம்!
ஸ்டாம்புகளைப் பற்றித் தகவல் தரும் ஃபோல்டர்கள் – அட அதெல்லாம் எங்கே போயிற்று இந்த நாளில்!
இளைய தலைமுறைக்கு இதையெல்லாம் சொன்னால் எங்கே கேட்கிறார்கள்?
என்ன கேம் வைத்திருக்கிறாய், என்ன வீடியோ இருக்கிறது, போகேமான், லெகோ இன்ன பிற புதிய சொற்றொடர்கள், விளையாட்டுக்கள்.
புத்தக பழக்கத்திலும் தான் எத்தனை மாறுதல்.
கல்கண்டு, அம்புலிமாமா, கண்ணன் என பத்திரிகைகள் வெளியாகும் நாட்களுக்கு கடையில் சென்று காத்திருக்கும் நாட்கள் வெற்றுக் கனவுகளாகப் போய் விட்டன.
கலர் கலராக காமிக் புக்ஸ் வந்த போது அந்தப் பத்திரிகைகள் அடி வாங்கின.

பின்னர் டி.வியும் சினிமாவும் வீடியோவும் பெருகிய போது பத்திரிகைகளை யார் படித்தார்கள்? வட்டம் குறுகிப் போனது!
எனக்குத் தெரிந்த நண்பர் பழனிச்சாமி என்று பெயர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வாசலுக்கு எதிர்த்தாற் போல உள்ள அம்மன் சந்நிதி தெருவில் பழைய கால வீட்டில் ஒரு மாடியில் அவர் இருப்பார். அந்த மாடி அறைக்குள் நுழைந்தால் குறைந்த பட்சம் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் போய் விடுவோம்.
பழைய கால கூஜாக்கள், பூஜை சாமான்கள், ரிஸ்ட் வாட்சுகள், சுவரில் தொங்கும் பெண்டுல கடிகாரங்கள், முதன் முதலில் வெளியான தபால் தலை, பழைய கால அம்மன் காசுகள், குப்தர் கால காசுகள், பழைய போஸ்ட் கார்டுகள் – எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள், கேளுங்கள் – அவரிடம் இருக்கும்.
அந்த அறையின் மதிப்பு பல லட்சம் என்று பேசிக் கொள்வோம். அங்கிருந்து வெளியே வரும் போது இன்றைய உலகில் காலடி வைக்கும் நேரத்தில் பல நூறாண்டுகள் கழித்த நாகரிகத்திற்குள் நுழைவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
காலம் மாறிப் போச்சு!
மதிப்பீடுகள் மாறுகின்றன; புதிய தொழில் நுட்பங்கள் பழையனவற்றை ஒரே கணத்தில் அடித்து தூக்கி எறிவதை வியப்புடன் பார்க்கிறோம்.
இதோ இந்த கட்டுரையில் தான் எத்தனை ‘கட் காபி பேஸ்ட்’.பழைய காலத்தில் ஒரு கட்டுரை முடிக்க பல மணி நேரம் ஆகும். பிழை பார்த்து பல காப்பி எடுத்த பின்னர் நன்கு எழுதப்பட்ட கட்டுரையை இதயம் பேசுகிறது பத்திரிகைக்கு அனுப்ப தபால் ஆபீஸ் சென்று அதை நிறுத்துப் பார்த்து, ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் போட்டு விட்டு இரு நாட்கள் கழித்து போனில் அது வந்து சேர்ந்ததா என்று கேட்டு பதில் கிடைத்த பின்னர் தான் நிம்மதியாக இருக்கும்.
இன்றோ ஒரு விரல் தட்டு.
நெட்டிஸன்!

உலகத்தின் மறு கோடிக்குக் கட்டுரை பறந்து பளிச்சிடுகிறது!
கூகிள் ஆண்டவரே சரணம்!!
எங்கும் மாற்றம்; எதிலும் மாற்றம்!
காலம் மாறிப் போச்சு!
***
R.Nanjappa (@Nanjundasarma)
/ February 2, 2019ஆம், காலம் மாறித்தான் வருகிறது. காலம் என்றுமே மாறித்தான் வந்திருக்கிறது. பழையன கழிந்து புதியன புகுந்தவாறே இருந்து வந்திருக்கிறது. ஆனால் இன்று மாற்றத்தின் வேகமும் மாறிவருகிறது! முன்பு வருஷக்கணக்கில் நிகழ்ந்தவை இன்று நாள் கணக்கில் மாறிவிடுகின்றன. ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால், பழையது எதுவும் நிலைப்பதில்லை!
ஆல்வின் டாஃப்லர் Alvin Toffler 1970ல் Future Shock என்று ஒரு புத்தகம் எழுதினார். அதில் உலகில் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்தார். குறுகிய காலத்தில் மிக அதிக மாற்றங்கள் நிகழ்கின்றன Too much change in too short a time. மக்களால் இதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தனி நபராகட்டும், சமுதாயமாகட்டும் ஒருவித மனத் தட்டுப்பாட்டிற்கு ஆளாகின்றனர்- இது ஒரு நோய் போன்றது என்றார். Individuals and societies are unable to perceive and adjust to the changes and this leads to a certain psychological state -which he called ‘future shock”.
The cumulative effect of such changes, and the incredible rapidity of the changes in changes are indeed driving us mad! Psychologists used to say that human nature requires stable environment for healthy functioning as it gives enough time to adjust to change. That is the reason why habits were considered valuable, as they standardised our responses to stock situations. But now we have no such breathing time! Our cell phone itself announces many updates to many programs almost daily! So, this is a constant whirl that has overtaken us!
பருவகாலங்கள் மாறி மாறி வந்து காலம் கழிகிறது. ஆயுள் தேய்கிறது; இதை மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லை என்று ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் சொன்னார்:
दिनयामिन्यौ सायं प्रातः
शिशिरवसन्तौ पुनरायातः ।
कालः क्रीडति गच्छत्यायु-
स्तदपि न मुञ्चत्याशावायुः
தினயாமியௌ ஸாயம் ப்ராத:
ஶிஸிர வஸந்தௌ புனராயாத:
கால: க்ரீடதி கச்சத் ஆயு:
ததபின முஞ்சத் ஆஶாவாயு:
இதையே பிரபல ஹிந்தி திரைக் கவிஞர் ஆனந்த பக்ஷி Anand Bakshi எழுதினார்:
Subaah aate hai
raat jaate hai
subaah aate hai
raat jaate hai yuhi
waqt chalta hi rehta hai rukta nahi
ek pal me ye aage nikal jaata hai
aadmi theek se dekh paata nahin
aur parde pe manzar badal jaata hai
ek baar chale jaate hai jo din raat subaah shaam
woh phir nahi aate
woh phir nahi aate
Zindagi ke safar mein, guzar jate hain jo makam
woh phir nahin aate,
woh phir nahin aate
( காலைவருகிறது, இரவு கழிகிறது. இவ்வாறு காலம் நிற்காமல் ஓடுகிறது. ஒரு நொடியில் காலம் நகர்ந்து போய்விடுகிறது. இது மனிதனுக்குச் சரியாகப் புரிவதில்லை. (சிறிது யோசிப்பதற்குள் ) திரையில் காட்சி மாறிவிடுகிறது! ஒருமுறை சென்ற பகலும் இரவும், காலையும் மாலையும் திரும்பி வருவதில்லை! மனிதன் வாழ்க்கைப் பயணத்தில் கடந்து போன லக்ஷியங்கள் மீண்டும் வருவதில்லை )
ஆம், இந்த மாற்றங்களும் அவற்றின் வேகமும் நம்மை திணரவைக்கின்றன! வாழ்க்கையின் லக்ஷியத்தையே மறக்கச்செய்கின்றன!
These changes are forcing us to live in an artificial atmosphere of our own creation!
Santhanam Nagarajan
/ February 2, 2019Future Shock – 1970இல் வெளி வந்த புத்தகம். அருமையான புத்தகம். சிறப்பான வரிகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. சென்றதினி மீளாது என்பது பாரதியின் வாக்கு. எங்கே போகிறோம்? எந்த வேகத்தில் போகிறோம்? இவ்வளவு வேகமும் மாற்றமும் ஏன்? அதுவும் தெரியவில்லை. நல்ல வரிகளை நினைவு படுத்தியதற்கு மீண்டும் நன்றி
ச.நாகராஜன் பங்களூஉரு