
Written by S Nagarajan
Date: 16 February 2019
GMT Time uploaded in London – 6-18 am
Post No. 6080
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
புதிய ஒரு பத்திரிகை தமிழ் உலகில் துவங்கி இருக்கிறது லஞ்சத்தை ஒழிக்க. பத்திரிகையின் பெயர் ‘தி ஆன்டி கரப்ஷன் பிரஸ் தமிழ்நாடு’! அதில் ஜனவரி 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்! – மீள வழி என்ன?
ச.நாகராஜன்
எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்!
நமது அன்றாட வாழ்க்கையில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு சாமனியனால் வாழவே முடியவில்லை.
சாணக்கியன் கூறினான் அன்று : அரசு வேலையில் இருப்போர் லஞ்சம் வாங்குவதை லேசில் அறிய முடியாது என்று. ஏன்? நீருக்குள் ஒரு மீன் நீரை அருந்துவதை எப்படிக் கண்டுபிடிக்க முடியாதோ அதே போல அரசு ஊழியர் லஞ்சத்தை வாங்குவாராம் (குடிப்பாராம்!)
என்ன அழகிய உவமை!
விண் முதல் மண் வரை லஞ்சம்!
ஆகாய விமானம் வாங்குவதில் ஊழல் என்றால் மண்ணுக்குள் அடக்கம் செய்யும் சுடுகாட்டிலும் ஊழல். சுடுகாட்டுக் கூரை போடுவதிலும் லஞ்சம்!
ரியல் எஸ்டேட்.
ரிஜிஸ்டிரார் அலுவலகம்
சுரங்கம்
விமானம்
மின்சாரம் அதைச் சார்ந்த துறை
அரசுச் சான்றிதழ் தரும் இடங்கள்

எந்தத் துறை பற்றி வேண்டுமானாலும் இப்படி சொல்லிக் கொண்டே போனாலும் அங்கெல்லாம் அடிக்கும் ஷாக் – லஞ்ச ஷாக்!
இதை அன்றாட வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு விட்டோம் நாம்.
தடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் கல்லூரி இடம் கிடைக்காமல் போய் விடுமே! (எஞ்சினியரிங் மெடிகல் என்றால் பல லட்சம் ‘அழ’ வேண்டி இருக்கிறது) என்று பயப்படுகிறோம். மருத்துவ உதவி இல்லாமல் போய் விடுமே என்று பயப்படுகிறோம்!
ஒரு தனி மனிதனால் ‘சிஸ்டத்தை’ மாற்றி விட முடியுமா என்ன என்ற ஆதங்கமும்,கையாலாகாத்தனமும் வேறு இருக்கிறது!
ஒரு சர்வே கூறுகிறது – இந்தியாவில் பத்தில் ஏழு பேர் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டியிருக்கிறது;லஞ்சம் தராமல் ஒரு காரியமும் நடப்பதில்லை என்று.
லஞ்சம் குறைவாக இருக்கும் நாடு ஜப்பான் தான்! ஜப்பானில் லஞ்சம் கொடுப்பது 0.2% தானாம்!
உலகெங்கும் எடுத்துக் கொண்டு பார்த்தால் லஞ்சம் கொடுக்கும் தொகை ஆண்டு ஒன்றுக்கு ஒரு டிரில்லியன் டாலரைத் தாண்டுகிறதாம். அதென்ன டிரில்லியன் (ஒன்றுக்குப் பின்னால் 29 சைபர் போட்டால் வரும் தொகை தான் மலைக்க வைக்கும் எண்ணிக்கையான டிரில்லியன் – ஒரு டாலர் சுமார் 70 ரூபாய் – அதாவது 70 டிரில்லியன் ரூபாய்கள்!)
மீள வழியே இல்லையா?
இருக்கிறது.
உத்வேகம் ஊட்டும் நிஜ சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. மாதிரிக்கு ஒன்றே ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

மார்டனுக்கு கடைசி டிரைவிங் வகுப்பு அது. ஹங்கேரியில் டிரைவிங் லைசென்ஸ் கிடைப்பது சற்று கஷ்டம் தான்! மார்டன், ‘எப்படி சார் என் டிரைவிங்?’ என்று அவருக்குச் சொல்லிக் கொடுக்கும் இன்ஸ்ட்ரக்டரைக் கேட்க அவர் கூறினார் :”எல்லாம் சரிதான்! ஆனால் லைசென்ஸ் கிடைக்க வேண்டுமென்றால் 25000 ஹங்கேரி ஃபாரின்ட்ஸ் (அமெரிக்க டாலர் 100க்குச் சமம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7000 ரூபாய்) தர வேண்டும்; அதுவும் இறுதி டெஸ்டுக்கு முன்னால் தர வேண்டும்; இன்னும் அரை மணிக்குள் தந்தால் அவரைச் சரி செய்து விடலாம் என்றார்.
மார்டனுக்கு Transparency International ஞாபகம் வந்தது. அரை மணி கழித்து வருவதாகச் சொன்ன மார்டன் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனலுக்குப் போன் செய்தார்.
லஞ்சத்தை ஒழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட அந்த நிறுவனத்திடமிருந்து வந்த பதில் : “பணத்தைத் தயார் செய்கிறேன்; ஆனால் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று சொல்லுங்கள். ஏனெனில் போலீஸுக்குப் போகக் கூட நேரம் இல்லை.”
அப்படியே மார்டன் சொல்ல வலை விரிக்கப்பட்டது. வங்கி நோட்டில் உள்ள சீரியல் நம்பர்களை போலீஸ் குறித்து வைத்துக் கொள்ள குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் அந்த நோட்டுகளை அவர் ‘கொடுக்க வேண்டியவருக்கு” கொடுக்கும் போது வீடியோவும் ரகசியமாக எடுக்கப்பட்டது.
லஞ்சம் வாங்கியவரை போலீஸார் ஆதாரத்துடன் கைது செய்தது. டெஸ்டை நேர்மையாக எதிர் கொண்ட மார்டன் லஞ்சம் கொடுக்காமல் அதைப் பெற்றார்.
அதிசயமான அரிதான நிஜ சம்பவம் தான்!
ஆனால் மார்டன் போன்றவர்கள் ஆயிரக் கணக்கில் உருவானால் லஞ்ச அசுரனை அழித்து விடலாம்!
சரி, ஒவ்வொருவரும் என்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டுக் கொண்டால் உடனே
பதிலும் கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9ஆம் தேதி “பன்னாட்டு லஞ்ச எதிர்ப்பு தினமாக” – International Anti-Corruption Day”-ஆக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதில் நாமும் இணைந்து அதன் கொள்கை நிறைவேறப் பாடுபடலாம்.
(இதில் சேர லஞ்சம் தர வேண்டியதில்லை. ஹி.. ஹி..)
2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி ஐக்கியநாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்த தினம் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உத்வேகம் ஊட்டும் சம்பவங்கள் உலகில் ஆயிரக்கணக்கில் பெருகி வருகின்றன.
2030ஆம் ஆண்டிற்குள் லஞ்சத்தைக் களை எடுத்து அழிப்போம் என்ற லட்சிய வாசகத்தைக் கேட்கும் போதே உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும்.
இப்படி ஒரு லட்சியம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளுவோம்; அனைவருக்கும் எடுத்துச் சொல்லி அதில் சேரச் செய்வோம்.
லஞ்சத்திலிருந்து மீள இது முதல் ஸ்டெப்; முதல் அடி!
போகும் இடம் வெகு தூரம்;
போக வேண்டும் நெடு நேரம்!
என்றாலும் ஒவ்வொரு அடியாய் முன்னேறுவோம். இருள் அடர்ந்த வழி தான்; என்றாலும் கையில் லஞ்ச ஒழிப்பு என்ற சின்ன கை விளக்கு இருக்கிறதில்லையா!
அது வெளிச்சம் காட்டும்; ஒவ்வொரு அடியாய் முன்னேறுவோம்; ஒவ்வொருவரும் முன்னேறுவோம்.
அனைவரும் இணைக!
புதிய உலகம் காண்போம்.
லஞ்சமில்லாத ஒளி உலகம் காண்போம்.
***
Rama Nanjappa
/ February 16, 2019உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் காரியம் சாதிக்கக் கற்றுகொண்ட நம் நாட்டில் லஞ்சம் ஒழியாது.
இதற்கு வித்திட்டது ஆங்கிலேயரே. ஐ.சி,எஸ் அதிகாரிகளும் பிற உயர் அதிகாரிகளும் பொதுவாக லஞ்சம் வாங்காது இருந்தனர். ஆனால் கீழ் மட்டங்களில் லஞ்சம் வாங்கும்/கொடுக்கும் வழக்கம் இருந்தது.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே இது தொடங்கிவிட்டது. அவர்கள் ஆட்சி வங்காளத்தில் நிலைத்தவுடன், கவர்னர் ஜெனரலிலிருந்து லஞ்சம் பெறுவது வழக்கமாகியது. வாரன் ஹேஸ்டிங்க்ஸ் காலத்தில் லஞ்சம் கொள்ளையாகவே பரிணமித்தது. வாரன் ஹேஸ்டிங்க்ஸ் மீது ‘இம்பீச்மென்ட்” (கொடுங்குற்றச்சாட்டு) நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் ஸர் எட்மண்ட் பர்க் ஆற்றிய உரை மிகப்பிரசித்தம். ஆனால் ஹேஸ்டிங்ஸ் தண்டனையின்றி தப்பினார்.
இந்த ஆங்கிலக் கம்பெனி நிதிப்பற்றாக்குறையினால் கடன் கோரி பிரிட்டிஷ் அரசுக்கு மனுச்செய்தது, அதேசமயம். இந்தியாவில் வேலை செய்த கம்பெனியின் ஊழியர்கள் பிகுந்த செல்வத்துடன் இங்கிலாந்து திரும்பி. கண்ட எஸ்டேட் களையும் வாங்கி பார்லிமென்டில் இடம்பிடித்தார்கள். இவற்றை Rotten Boroughs என்பார்கள். கம்பெனி ஊழியர்கள் செல்வந்தர்களாக வரும்போது கம்பெனி எப்படி நிதிப் பற்றாக்குறையினால் தடுமாறுகிறது என யோசித்த பார்லிமென்ட், ஏதோ ஊழல் நடக்கிறது எனக்கண்டு 1773ல் ஒழுங்குமுறைச் சட்டம் ( Regulating Act) கொண்டுவந்தது. ஆனால் நிலைமை சீராகவில்லை. 1832ல்தான் Rotten Boroughs சீர்திருத்தச் சட்டம் கொண்டுவந்தார்கள்.
கம்பெனி ஆட்சி போய் பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி வந்தபிறகு (1858), அரசு நிர்வாகம் பரவியது. அப்போது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டிய நிலை வந்தது. இங்கு பிரிட்டிஷாரின் அபார மூளை வேலை செய்தது. இந்தியர்கள் பொதுவாக பல சமயங்களில் ஒருவர்க்கொருவர் பொருள்/பண்டங்களை அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கம் எனக் கண்டார்கள். அதனால் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் நிலையிலிருந்த சில துறைகளில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குறைவாக இருக்கலாம் என முடிவுசெய்தார்கள் ! இதன் விளைவாக அத்துறைகளில் இருந்தவர்கள் அன்பளிப்பு பெறுவதை அங்கீகாரம் பெற்ற முறையாகவே கருதத் தலைப்பட்டார்கள். போலீஸ், ரெவினியூ, கல்வி ஆகிய துறைகளில் சம்பளம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டது! அன்பளிப்பாக இருந்தது கேட்டு வாங்கும் முறையாக மாறியது! இந்த விஷயங்களை Romesh Chander Dutt எழுதிய The Economic History of India என்ற புத்தகத்தில் பார்க்கலாம்.
ஆக, லஞ்சத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நேருவின் சோஷலிஸ ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடியது.. அது “International Phenomenon” இதற்கு ஏன் கூப்பாடு போடவேண்டும் என்று கேட்டார், எமர்ஜென்ஸி ராணி இந்திரா அம்மையார்!
இன்று அரசு ஊழியர்களின் சம்பளம் பன்மடங்கு அதிகரித்து விட்டது ஆனால் லஞ்சம் குறைந்தபாடில்லை!
இன்று எதற்கும் ஒரு லங்கு. லகான் இல்லாமல் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு அரசினர் தரும் சலுகைகளும், வழங்கும் பொருள்களும் பிற கட்சிகள் தரும் வாக்குறுதிகளும் ஓட்டுக்காகத் தரும் லஞ்சம் தானே!
இன்று லஞ்சமில்லாமல் எங்கும் எதுவும் நடப்பதில்லை. பாவம், அன்னா ஹஃஜாரே! லஞ்சத்திற்கு எதிராகக் குரல் எழுப்பவும் தடை! பலே பாரத நாடு!
Santhanam Nagarajan
/ February 16, 2019என்ன செய்வது? லஞ்சம் வாங்காதவன் இளிச்சவாயன் என்ற பட்டப்பெயரைப் பெறுகிறான். நீதி மன்றமோ 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு கிழவராக இருந்த வாட்ச்மேனுக்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை அளித்தது. ஆனால் மல்லையா போன்ற கோடீஸ்வரர்களையும் சர்காரியாவினால் ஊழல் மன்னன் என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டவர் ஒரு தண்டனையுமின்றி வாழ அனுமதிக்கிறது/அனுமதித்தது. வாய்தா மேல் வாய்தா. பல வருடம் இழுக்கப்படும் கேஸ்கள்! இதற்கிடையில் இப்படி ஒரு பத்திரிகை.
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது! இருப்பினும் முயற்சி எடுக்கப்படுகிறது. தனிமனித ஒழுக்கத்தை முடிந்தவரை பரப்பலாம்.
நல்ல கருத்துக்களுடன் பதிவிட்டமைக்கு நன்றி