
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 11 April 2019
British Sumer Time uploaded in London – 5-51 am
Post No. 6251
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 7-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
நதிகளைக் காப்போம்!
ச.நாகராஜன்

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக அமைவது இந்திய நாட்டில் ஓடும் நதிகளே.
கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, வைகை என ஏராளமான நதிகள் ஆங்காங்கே வாழும் மக்களின் ஜீவாதாரமாகத் திகழ்கின்றன.
ஆனால் இப்படிப்ப்ட நதிகளின் நீரை அசுத்தமாக்குவதும், ஆற்றில் உள்ள மணலைச் சுரண்டி அள்ளி நதியின் ஜீவ ஓட்டத்தைத் தடைப்படுத்துவதும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவது வருத்தமூட்டும் ஒரு விஷயம்!
தூய்மைக்கே தூய்மை தரும் நதி என நமது பண்டைய இலக்கியங்கள் புகழும் கங்கை நதி ஐந்து மாநிலங்கள் வழியே சுமார் 2525 கிலோமீட்டர் பாய்ந்து ஓடி 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்குக் காலம் காலமாகப் பயனை அள்ளி வழங்கும் ஒரு நதியாகும்.
கங்கோத்ரியில் சிறு துளியாகத் துளிர்த்து பெரும் ஜீவநதியாக உருமாறும் இந்த நதியின் இன்றைய நிலை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கங்கோத்ரியில் இதன் தூய்மை கெடவில்லை.
பின்னர் ஹரித்வாரை அடையும் போது கங்கை நீர் நல்ல நிலையில் இருக்கிறது.
அதன் பின்னர் தொழில் நகரமான கான்பூரில் கங்கை நீர் அசுத்தமாகி விடுகிறது. அங்கு நீரை சுத்தப்படுத்தி நன்னீராக்கும் அவசியம் ஏற்படுகிறது.
கங்கை, யமுனை, மறைந்து அந்தர்வாஹினியாக ஓடும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் அலஹாபாத்திலோ கங்கை நீர் கலங்கலாக இருக்கிறது.
வாரணாசி என புகழப்படும் புனித ஸ்தலத்தில் குளிப்பதற்குத் தகுதியான நீர் என்றாலும் கூட அசுத்தத்துடனேயே இன்று பாய்கிறது.
அடுத்து பாட்னா போன்ற பகுதிகளில் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தகுதியற்ற நிலையை உடையதாக இருப்பதால் வாடர் ட்ரீட்மெண்ட் எனப்படும் நன்னீராக்கும் பணி தேவைப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு நதியாக ஆய்வு செய்து பார்த்தால் மனிதனால் மட்டுமே இப்படிப்பட்ட இயற்கைச் செல்வங்கள்
அசுத்தமாக்கப்படுவது தெரிய வரும். பெரும்பாலான தொழிற்சாலைக் கழிவுகள் உள்ளிட்ட அசுத்தங்கள் தூய்மையான நீரைக் கெடுப்பதால் இந்த நதிகளில் வாழும் ஆமை மீன் உள்ளிட்ட உயிரினங்களும் இறந்து படுகின்றன.
ஆகவே நதிக்கரையோரம் வாழும் மக்கள் புனித நதிகளைக் காக்கும் உறுதி மொழியை எடுத்துக் கொண்டு அவற்றைக் காக்க வேண்டியது இன்றைய இன்றியமையாத அவசியமான தேவை; அவசரமான தேவையும் கூட என்றே சொல்லலாம்!
***


R.Nanjappa (@Nanjundasarma)
/ April 11, 2019“நதிகளைக் காப்போம்” – இது ஒரு நல்ல கோஷம், இந்தியாவில் இதைக் கொள்கையாக நடைமுறைப் படுத்துவது சாத்தியமே இல்லை.
இன்று கங்கை என்ற பெயரில் ஓடும் நதி அசல் கங்கையே அல்ல. உண்மையான கங்கை பாகீரதி. இதில் தேஹ்ரி அணை கட்டியபிறகு, இதன் நீர் அதிகம் வருவதில்லை. அலக் நந்தா போன்ற பிற உப நதிகளின் நீர்தான் கங்கை என்ற பெயரில் ஓடுகிறது. இதுவும் சாக்கடை யாகிவிட்டது. புனிதம் என்று சொல்லி அசுத்த நீரில் மூழ்குகிறார்கள். இதுதான் நமது மக்களின் புனித மதம்.
60களில் சீன ராணுவத்தினரின் நடமாட்டத்தைக் கவனிக்கவேண்டும் என்று கருதி இந்திரா அம்மையார் அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ,ஏ யுடன் சேர்ந்து ( ஒருபுறம் அரசியல் ரீதியாக அவர்களை வெளிப்படையாகத் திட்டிக்கொண்டே ) ரகசியமாக இமயமலைச்சாரலில் ( நந்தாதேவியில் என்று நினைவு) ஒரு அணுசக்தி சாதனத்தை ரகசியமாகப் பொருத்திவைத்தார். இங்கு வீசும் பனிப்புயல் ஒன்றில் இந்த சாதனம் மறைந்து எங்கோ புதைந்துவிட்டது. இது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது அணுசக்திக் கருவியானதால் இதிலிருந்து எழும் கதிரியக்கம் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும். இது இமயமலைப்பகுதியின் நீர்வளத்தை எப்போது, எப்படி, எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை எந்த விஞ்ஞானியோ அரசியல் வாதியோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. There is a clear risk of radioactive contamination of Himalayan river waters. இந்த நிலையில் கூலிக்கு மாரடிக்கும் விஞ்ஞானிகளும் நாட்டை கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகளுமா நதிகளைக் காக்கப் போகிறார்கள்?
நதிகள் இன்று அசுத்தப்படுவதற்கு தொழிற்சாலைகளின் கழிவு, மக்கள் நீரைத் தவறான வழிகளில் பயன் படுத்துதல், நமது சிறு, பெரு நகரங்களின் கழிவுகள் untreated sewage நதிகளில் கலத்தல் ஆகியவையே முக்கிய காரணம். நமது பொருளாதார, தொழில் முறைகள் அடிப்படையில் மாற்றம் காணாதவரையில் இந்த நிலை மாறாது. அப்படி மாற்றம் காண்பது இன்றைய அரசியல்-பொருளாதாரச் சூழ்நிலையில் சாத்தியமே இல்லை.
நதிகளின் மீது அணைகளைக் கட்டி நீரின் போக்கைத் தடுத்துவிட்டோம். இதனால் நதி பாயும் தடத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. தஞ்சாவூர் டெல்டா பகுதிகள் போன்ற இடங்கள் வரண்டு, கடல் நீர் உள்ளே வரும் அபாயம் இருக்கிறது. அணை சமாசாரம் அரசியலாகிவிட்டது. டெல்லி தர்பார் தஞ்சை டெல்டாவைக் கருதி தூக்கம் கெடுமா? நடக்காத செயல்.
நதிகளைப்பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே தோற்றுவிப்பது எளிய, குறுகிய காலத்தில் நடக்கும் செயலல்ல. இதற்காக பொருளும் சக்தியும் காலமும் செலவிட யார் தயாராக இருக்கிறார்கள். காந்திஜி பல விஷயங்களில் ‘யங்க் இந்தியா’, ‘ஹரிஜன்’ பத்திரிகைகளில் கிராம முன்னேற்றம், சுகாதாரம், மதுவிலக்கு ,சுதேசி போன்றவை பற்றி பல வருஷங்கள் தொடர்ந்து எழுதி வந்தார். ஆனால் இன்று இவற்றை யார் சட்டை செய்கிறார்கள்? குடிப்பது உரிமை என்று அரசினரே மதுக்கடைகள் நடத்துகிறார்கள். இந்த நிலையில் நதிகளின் தூய்மை குறித்து யார் போராடப்போகிறார்கள்? தேஹ்ரி அணையை எதிர்த்தும் நர்மதா அணையை எதிர்த்தும் சுந்தர்லால் பஹுகுணா, மேதா பட்கர் முதலியவர்கள் குரல் எழுப்பினார்கள். ஆனால் அவர்களை அரசு எப்படி நடத்தியது? பொது மக்கள் கண்டுகொண்டார்களா?
சுதந்திர இந்தியாவில் மக்கள் சக்தியினால் ஏதாவது பெரிய சாதனை நிகழ்ந்திருக்கிறதா ? எமர்ஜென்சியை எதிர்ப்பதற்கு ஜய பிரகாஷ் நாராயணனும் ஆசார்ய க்ருபலானியும் இருந்தார்கள். இன்று அத்தகைய தூய தலைவர்கள் இருக்கிறார்களா?
கங்கைக்கு ஆதாரமான பனிப்பாறைகள் பின்வாங்குகின்றன. இன்னும் 50 ஆண்டுகளில் கங்கை வரண்டுவிடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
சீனா பகுதியில் ப்ரம்மபுத்ராவில் அணைகளைக்கட்டி இந்தியாவிற்கு நீர்வரத்தைத் தடுக்கிறார்கள். உலகம் தழுவிய வெப்பயமயமாதலினாலும், ஏற்கெனவே நடந்துவிட்ட லட்சக் கணக்கான மரங்களின் அழிவினாலும் காவிரி போன்ற நதிகளில் கூட நீர்வரத்து குறைந்துவருகிறது. பெய்யும் மழை நீரையும் சேகரித்து தூய்மையாகப் பாதுகாக்க நமக்குத் தெரியவில்லை. இந்த நிலையில் நதிகளின் தூய்மையைக் காப்பது சாத்தியமா? யோசிக்கவேண்டும்.