

Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 15 April 2019
British Sumer Time uploaded in London – 6-55 am
Post No. 6265
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 9-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
மாசுபடுத்தப்பட்ட காற்றினால் ஏற்படும் அவலம்!
ச.நாகராஜன்
சுத்தமான காற்று ஆரோக்கிய வாழ்வைத் தரும் என்பதும் மாசு படுத்தப்பட்ட காற்று ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும் என்பதும் அறிவியல் போதிக்கும் உண்மைகள்.
சுத்தமற்று இருக்கும் காற்றை நாம் சுவாசிக்கும் போது மூளை தன் இயல்பான செயல் திறனை இழக்கிறது; தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் செயல்திறனை இழக்கின்றனர்; மாணவர்களால் இயல்பாக படிக்க முடிவதில்லை என்பன போன்றவற்றை ஏற்கனவே அறிவியல் ஆய்வுகள் தெளிவு படுத்தியுள்ளன.
இப்போது மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Masschusetts Institute of Technology – MIT) தனது ஆய்வு ஒன்றின் மூலம் மாசு படுத்தப்பட்ட காற்று மனிதனின் சந்தோஷத்தையும் குறைக்கிறது என்பதை அறிவித்துள்ளது.
இதை இந்த ஆய்வைச் செய்த இணைப் பேராசிரியரான சிகி ஜெங் (Siqi Zheng), “சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தப்பட்டு பெருமளவில் காற்று அசுத்தமடைந்த நாட்களில் அதை சுவாசிக்கும் மக்கள் பெருமளவு எரிச்சலுடன் இருப்பதோடு அபாயகரமான முடிவுகளைப் பல்வேறு விஷயங்களிலும் எடுக்கின்றனர்” என்று கூறுகிறார். பின்னால் தாங்கள் எடுத்த முடிவுகளுக்காக அவர்கள் வருத்தமும் அடைகின்றனர்.
இந்த ஆய்வானது 144 சீன நகர்களில் எடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கு கொண்டனர்.
காற்றின் தரத்தை அளக்க உதவும் அளவீடுகளில் நுண்மத் துகள்கள் அதிகமாக இருக்கும் நாட்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதில் பங்கு கொண்டோர் சமூக ஊடகங்களின் மூலமாகத் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இதில் பெறப்பட்ட ஏராளமான தரவு எனப்படும் Dataக்களின் மூலமாக காற்று மாசுக்கும் மனிதனின் மகிழ்ச்சியற்ற மனநிலைக்கும் நேரடி தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. World Health Organization எனப்படும் உலக சுகாதார நிறுவனம் ஆறு மாசுகள் மனிதர்களின் ஆரோக்கியத்தைச் சீர்கேடு அடையச் செய்வதாக இனம் காட்டியுள்ளது. நுண்மத் துகள்கள், தரை மட்ட ஓஜோன், கார்பன் மானாக்ஸைடு, சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்சைடு, காரீயம்
(Particle pollution, ground-level ozone, carbon monoxide, sulfur oxides, nitrogen oxides, and lead) இவற்றினால் சுவாசக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், நரம்பு மண்டல சீர்கேடுகள், கண்களில் எரிச்சல், தோல் வியாதிகள் உள்ளிட்ட பல வியாதிகளும் உருவாகின்றன. ஆஸ்த்மா, நுரையீரல் கான்ஸர், அல்ஜெமிர் மற்றும் பார்கின்ஸன் வியாதி, மனக் கோளாறுகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மாசுபடுத்தப்பட்ட காற்றே காரணம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது நமது இன்றியமையாத கடமையாக இன்று ஆகி விட்டது. இதை உணர்வோம்; உயர்வோம்!
