தங்கம் தரும் மயக்கம்! (Post No.6273)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 17 April 2019


British Summer Time uploaded in London – 6-45 am

Post No. 6273

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஏப்ரல் 2019 கோகுலம் கதிர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

தங்கம் தரும் மயக்கம்!

ச.நாகராஜன்

தங்கத்தின் சக்தி தான் எப்படிப்பட்ட சக்தி! தங்கம் என்றவுடன் அனைவரும் மகிழ்ந்து புன்னகை பூத்து மகிழ்வர்.

உலகம் முழுவதும் நாடு, மதம், இனம், பால், மொழி, அந்தஸ்து ஆகிய எந்த வித பேதமும் இன்றி அனைவராலும் போற்றப்படும் ஒரு வசீகர சக்தி தங்கம் தான்!

நாம் தங்கத்தைப் பிடித்திருக்கிறோமா அல்லது தங்கம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறதா என்பது தான் தெரியவில்லை என்று பீட்டர் எல்பெர்ன்ஸ்டீன் தனது நூலான ‘தி பவர் ஆஃப் கோல்ட்’-இல் கூறுகிறார்.

தாலிக்கு கொஞ்சமேனும் தங்கம் இல்லா வாழ்க்கை பாரதப் பெண்களைப் பொறுத்த மட்டில் வாழ்க்கையே இல்லை.

உலகில் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா? பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதையும் மூடினால் முழங்கால் அளவுக்குத் தங்கம் இருக்கிறதாம்!

இதற்கு மதிப்பு எல்லா நாட்டிலும் இருந்தாலும் நமது நாட்டில் இதற்கு மவுசு ஒரு படி கூடத்தான்!

இந்தியாவில் எல்லா இல்லங்களிலும் இருக்கும் தங்கம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது, அவ்வளவு தங்கம்! என்றாலும் கூட ஒரு உத்தேச மதிப்பீட்டின் படி சுமார் மூன்று லட்சம் டன் தங்கம் இந்தியாவில் இருக்கிறதாம்..

அழகுக்கு அழகு செய்கிறது;ஒரு கம்பீரத்தையும் கௌரவத்தையும் தருகிறது. பணம் இருக்கிறது என்கிற அந்தஸ்தைக் காட்டுகிறது; ஆபத்துக் காலத்தில் கை கொடுத்து உதவுகிறது; எப்போது வாங்கினாலும் நாள் செல்லச் செல்ல மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.

ஆகவே தான் தங்கம் சிறந்த முதலீடு என்று கருதப்படுகிறது.

பிக்ஸட் டெபாசிட், ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர், வெள்ளியில் முதலீடு, ஆங்காங்கே நிலம் அல்லது வீடு வாங்கல் ஆகிய எந்த முதலீட்டை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் தங்கத்தில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை என்பது உண்மை தான்!

உலகெங்கும் இதுவரை 1,65,446 டன்கள் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ஒலிம்பிக் அளவிலான இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பி விடலாம். இதில் ஐம்பது சதவிகிதம் சென்ற 50 ஆண்டுகளில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சம் டன்னுக்கு மேல் தங்கம் பூமியில் புதைந்து கிடக்கிறது.

பல விசித்திர குணாதிசயங்களைக் கொண்டுள்ள ஒரு உலோகம் என்பதால் இதை அறிவியல் அறிஞர்கள் கூட சற்று மயக்கத்துடன் தான் பார்க்கிறார்கள்.

இதன் அடர்த்தி எண் மிக அதிகம்.இது மிக கனமான உலோகமும் கூட! தண்ணீரை விட 19.3 மடங்கு அதிகம். அதே சமயம் இதை எப்படி வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்; பல்வேறு வடிவங்களாக அமைக்கலாம். மற்ற உலோகங்களை ஒப்பிடுகையில் இது மிக மிருதுவானதும் கூட! ஒரு கிராம் தங்கத்தை ஒரு சதுர மீட்டர் தங்கத் தகடாக மாற்றலாம். அந்தத் தகடில் ஒளி ஊடுருவிப் பாய்ந்து தகதகத்து நம்மை மயக்கும்; மகிழ்விக்கும்!

31 கிராம் தங்கத்தை மெல்லிய கம்பியாக மாற்றினால் அது 100 கிலோமீட்டர் தூரம் இருக்கும்!

தங்கத்தின் மீது எந்தக் கெமிக்கலும் தன் “வேலையைக்” காண்பிக்க முடியாது. மிகச் சில இரசாயனங்களே தங்கத்தைத் “தாக்க” முடியும்..

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும் கூட அதன் பளபளப்புப் போகாது.

அழகான சிவந்த மங்கையரின் மார்பிலும் தலையிலும் இடையிலும் காலிலும் வெவ்வேறு ஆபரணமாக மாறி அது தவழும் போது அதன் மதிப்பும் தனி தான்; அதை அணியும் அழகியின் மதிப்பும் தனி தான்!

ஒரு நாட்டின் பணத்தின் மதிப்பு பண வீக்கத்தால் மாறுபடலாம்; அரசியல் மாற்றங்களால் செல்லாமல் போய் விடலாம். அரசாங்கம் நோட்டுக்களை ‘டீமானிடைசேஷன்” செய்து மதிப்பிழக்கச் செய்யலாம்.

நிலம், வீடு போன்றவை இயற்கைச் சீற்றத்தால் அழிந்து படலாம்; மதிப்புக் குறையலாம்.

ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர்கள் நூற்றுக் கணக்கான காரணங்களால் மதிப்பை இழந்து முதலீட்டு விலையை விடக் குறையலாம், ஏன் ஜீரோ என்ற அளவிற்கு தாழ்ந்து போகலாம்.

ஆனால் தங்கம் ஒன்று மட்டுமே தன்னம்பிக்கை தரும் ஒரு பாதுகாப்பான இன்வெஸ்ட்மெண்டாக காலம் காலமாக இருந்து வருகிறது. மதிப்பும் குறையாது; மானத்தையும் இழக்க விடாது!

வீட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் தங்கம் உதவுவதில்லை; நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் கூட உதவிக்கு ஓடி வருவது தங்கம் தான்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் ஒரு பிரச்சினை எழுந்த போது அந்த நாட்டின் பிரதமர் மஹாத்திர் முஹம்மது அந்த நாட்டு மக்களிடம் தங்களிடம் உள்ள தங்கத்தை அரசாங்கத்திடம் தற்காலிகமாக முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். மலேசிய மக்களும் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தங்கத்தை முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டனர். தங்கம் அரசின் பொக்கிஷத்தை நிரப்பிய போது நிலைமை சீர் திருந்தியது. உடனே மலேசியா அரசாங்கம் தங்கத்தை மக்களிடம் திருப்பித் தந்தது.

பெரு நாட்டில் ஏராளமான தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அதில் சுரங்க வேலை செய்யச் செல்வோர் கிளம்பும் போது வீட்டாரிடம், “அல் லேபர் மில் வாய் நோ சே சி வொல்வேர்” என்று சொல்வார்களாம். அதாவது, “வேலை செய்யப் போகிறேன். திரும்பி வருவேனோ வரமாட்டேனோ தெரியாது” என்பது இதன் பொருள். இப்படிச் சொல்லி விட்டு சுரங்க வேலைக்குச் சென்றால் ஒரு வேளை இறந்து விட்டாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏராளமான நன்மை வந்து சேருமாம்.

தங்கத்திற்காக உயிரை விடக் கூடத் தயார் என்பதையே இது காட்டுகிறது.

பெரு நாட்டில் மட்டுமல்ல; நமது நாட்டிலும் கூட எதை இழந்தாலும் இழக்கத் தயார்; ஆனால் தங்கத்தை இழக்கத் தயாரில்லை” என்பது தான் நிலை.

அப்படிப்பட்ட அருமையான மஞ்சள் உலோகத்தை ‘இன்வெஸ்ட்மெண்ட் டாப்’ என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

மங்கையர் தங்கம் மங்காத செல்வம்!

தங்கம் தரும் மயக்கமடி – தங்கமே தங்கம்!

எங்கும் எதிலும் இல்லையடி – தங்கமே தங்கம்!!

***

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    தங்கம் இயற்கை தரும் அற்புதப் பொருள். இதை பெரியோர்களில் சிலர் நன்கு உணர்ந்திருந்தனர். நமது நாட்டு ஞானிகள் அதற்கு சமய ரீதியாக ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்து பாமர மக்களும் அதன் மேன்மையை உள்ளபடி உணராவிடினும் அதை வாழ்வில் அனுபவிக்கச் செய்தனர். வீடு, நிலம் வாங்குவது எளிதல்ல; ஆனால் யாரும் சிறிது சிறிதாகத் தங்கத்தை வாங்கிச் சேர்த்துவிடலாம்; அது பல தலைமுறைகளுக்கு வரும்!
    நமது நாட்டில் பண்டைக்காலத்திலிருந்து அரசர்கள் சண்டை, சச்சரவில் ஈடுபட்டே வந்திருக்கிறார்கள். நாட்டின் அரசும். எல்லைகளும் மாறியே வந்திருக்கின்றன. இத்தகைய சமயங்களில் வீடு, நிலத்தைப் பெயர்த்தெடுத்துச் செல்ல முடியாது; தங்கம் நம்முடன் எங்கும் தங்கும்!
    பொருளாதாரத்தில் பணச் செலாவணிக்கு [ money exchange] அடிப்படையாக இருந்தது தங்கம் தான். இதில் முக்கியமாக இருந்த நிலை, புழக்கத்தில் உள்ள பணத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தங்கமாக இருக்கவேண்டும் என்பது.

    ரிசர்வ் வங்கி 1935ல் உருவானபோது, அதுவும் பணப்புழக்கத்தின் 20% தங்கமாகவைத்திருக்கவேண்டும் என்பதே நியதியாக இருந்தது. [ proportional reserve system]. ஆனால் நேருவும், டி.டி. கிருஷ்ணமாச்சாரியும் சேர்ந்து அடித்த சோஷலிசக் கூத்தில், இரண்டாம் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (1957) நாடு திவாலாகும் நிலைக்கு வந்தது. ரூபாய் மதிப்பிழக்கத் தொடங்கியது நேரு அரசால் குறிப்பிட்ட அளவு தங்கத்தை ரிசர்வாக வைக்க இயலவில்லை. தகிடுதத்த நிபுணர் டி.டி.கே proportional reserve என்பதைMinimum Reserve என மாற்றினார். அதாவது எவ்வளவு பணம் புழக்கத்திற்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவு ரிசர்வே போதும் என சட்டம் செய்தார்கள். இன்றுவரை இதுதான் அமுலில் இருக்கிறது! இன்று நமது ரூபாயின் புழக்கத்திற்கு தகுந்த பாதுகாப்பு அரசின் வசமோ, ரிசர்வ் வங்கியின் வசமோ இல்லை! ரிச்சர்வ் வங்கி சேர்த்துவைத்திருப்பதையும் அரசே கொள்ளை யடிக்கிறது.

    முதல் உலகப் போருக்குமுன் பல நாடுகள் உலக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களிடையேயான இறுதி பரிவர்த்தனை தங்கத்தின் வாயிலாகவே நிறைவேறியது. தங்கம் நாடுகளிடையே தட்டுப்பாடின்றிக் கைமாறியது. நிலைமை வர்த்தகத்தின் தன்மையைப் பொறுத்து தானாகவே சீரடைந்தது. இது Gold Standard என்ற முறையாகும். இந்த நிலையை ” Orchestra without a Conductor” என்பார்கள். முதல் உலகப் போர் இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தன. சர்வதேச அளவில் இருந்த தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவில் குவிந்தது! பிற நாடுகள் வர்த்தகத்தில் ஈடுபடமுடியவில்லை.

    20 நூற்றாண்டின் தலை சிறந்த பொருளாதார வல்லுனர் John Maynard Keynes தங்கத்தின் மீது அமையாத ஒருமுறை வேண்டும் என வாதாடினார். ஆனால் அமெரிக்கர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக அமெரிக்க டாலர் தங்கத்துடன் இணைக்கப் படுமெனவும், தங்கம் அவுன்ஸுக்கு 35 டாலர் என்ற விலையில் வாங்கி விறக்கப்படுமென்றும், பிற நாடுகளின் பணமும் தங்கத்தின் மதிப்பைப் பொறுத்து டாலருடன் இணைக்கப் படுமெனவும் ஒரு முறை வந்தது. IMF என்ற பன்னாட்டு நிதி அமைப்பு இந்த அடிப்படையில் தோன்றியது. 1961 வாக்கில் இந்த நிலை சீராக இயங்கத்தொடங்கியது. ஆனால் வியட்னாம் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் டாலர் உலக அளவில் மதிப்பிழக்கத் தொடங்கியது. அவர்களால் 35 டாலர் விலையில் தங்கத்தை விற்க இயலவில்லை. பதறிப்போன அதிபர் நிக்ஸன் 1971 ஆகஸ்டு பதினைந்தாம் தேதியன்று இனி அமெரிக்கா இந்த முறையை ஏற்காது என அதை ரத்து செய்தார். உலக நாடுகளின் கரன்சிக்கள் அனைத்தும் நிலையற்ற தன்மையை அடைந்தன. இந்த நிலை இன்றுவரை தொடர்கிறது. தங்கத்தின் சம்பந்தம் விட்டதால் உலகப் பொருளாதாரமே பல்டி அடித்தது.

    ஒரு நாட்டின் செல்வம் எது என ஆராய்ந்தால் அது மக்களிடம் இருக்கும் தங்கம் தான் என்பது விளங்கும்! எந்த அரசும் எந்த நிலையிலும் திவாலாதான். இது மக்களுக்குப் புரிவதில்லை! அரசு மக்களின் வரிப்பணத்திலோ அல்லது கடன்வாங்கியோதான் காலம் தள்ளுகிறது! அரசுக்கு வருமானமும் இல்லை, சேமிப்பும் இல்லை! அது அன்றாடங்காய்ச்சி பிச்சைக்காரன் தான். மக்களிடம் உள்ள செல்வமே நாட்டில் அசல் செல்வம். GDP என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தான், ஜிகினா வேலைதான்.

    அரசுக்கு மக்களின் தங்கத்தின் மீது ஒரு கண் என்றைக்கும் இருக்கிறது. மொரார்ஜி தேசாய் நிதி மந்திரியாக இருந்தபோது தங்கத்தின் மதிப்பைக் குறைக்க ஒரு வழி செய்தார். சொக்கத் தங்கம் 24 காரட். நகைக்கான தங்கம் 22 காரட். இதை 18, 14 காரட்டாகக் குறைக்கவேண்டும் என்று ஒரு முறையைக் கொண்டு வந்தார். நாடெங்கிலும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.
    சமீபத்தில் நமது கோவில்களில் இருக்கும் தங்கத்தின் மதிப்பை அறிந்துகொள்ள ரிசர்வ வங்கியை அரசு தூண்டியது. நமது சுதந்திர பாரத அரசு, கஜினி முகம்மதுவுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. இதை மக்கள் உணரவேண்டும்.

    சுதேசி சமஸ்தானங்கள் இந்தியாவுடன் சேர்ந்தபோது அந்த மன்னர்களுக்கு மானியம் வழங்கும் முறையை நமது அரசியல் சாசனத்தில் பொறித்துவைத்தனர். ஆனால் இந்திரா அம்மையார் அதை மூர்க்த்தனமாகக் கைவிட்டார். திருப்பித் தருவதாகச் சொல்லி இன்று தங்கத்தைக் கேட்கும் அரசு, அதை திருப்பித்தரும் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?
    அரசுக் கொள்கைகளால் பணவீக்கம் என்னும் பணத்தின் மதிப்புக் குறையும் அம்சம் தொடர்ந்து வருகிறது. பண வீக்கத்திற்கெதிரான ஒரே பாதுகாப்பு தங்கம் தான். அரசுகள் வரும், போகும் : தங்கத்தின் மதிப்பு என்றும் கெடாது. 916 KDM போன்ற நிலை உலக அளவில் வந்த பிறகு, மொரார்ஜி போன்றவர்கள் மீண்டும் வந்தாலும் ஒன்றும் புரட்ட முடியாது. மக்கள் என்றும் விழிப்புடன் இருந்து, ஸ்டாக் மார்க்கெட், mutual fund போன்ற வலைகளில் விழாமல் தங்கத்தைச் சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும்.

  2. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  April 20, 2019

    super points. everybody should read this. thanks for the input. nagarajan

Leave a comment