பாண்டியன் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி! (6312)

WRITTEN  by S Nagarajan
swami_48@yahoo.com


Date: 26 April 2019


British Summer Time uploaded in London – 13-49

Post No. 6312

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கொங்கு மண்டல சதகம்

பாண்டியனின் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி!

ச.நாகராஜன்

கொடும் பஞ்சம் நிலவிய காலம் அது. பாண்டிய நாட்டில் தன் சேனை வீரர்களுக்கு அன்னம் கொடுக்க முடியாமல் வருந்தினான் பாண்டிய மன்னன்.  தன் சேனையின் ஒரு பகுதியை முளசை வேலப்பன் என்பவரிடம் அனுப்பினான்.

வேலப்பனோ பெரு மகிழ்ச்சி எய்தினார். பாண்டிய நாட்டின் பஞ்சம் தீரும் வரையில் அந்தப் படைவீரர்களுக்கு அமுதூட்டி மகிழ்ந்தார். இயல்பு நிலை திரும்பியவுடன் படை வீரர்கள் பாண்டிய நாடு திரும்பினர்.

வேலப்பனின் இந்த அற்புதமான செயலைக் கண்டு மகிழ்ந்த பாண்டிய மன்னன் அவருக்கு அன்னத்தியாகி என்ற பட்டத்தை அளித்தான்.

இந்தச் செய்தியை வரலாறு கூறுகிறது.

“தென்னவன் படைக்குச் செழிப்புறு வரையி

லன்ன மளித்த அன்னத் தியாகி”

என்று இவ்வாறு முளசையார் மெய்கீர்த்தி கூறுகிறது.

இந்த வரலாற்று வீரனை கொங்கு மண்டல சதகம் தனது 77ஆம் பாடலில் பாடிச் சிறப்பிக்கிறது.

பாடல் இதோ:

பன்னப் படாதருந் தப்புன லற்றிடோர் பஞ்சமுற்றுங்

கன்னித் துறைப்பாண் டியன்படைக் கெல்லாங் களித்தமுதிட்

டன்னத்தியாகி யெனவச் செழிய னழைக்க வுயர்

வன்னப் பரிவேன் முளசையுஞ் சூழ்கொங்கு மண்டலமே

இந்தப் பாடலின் திரண்ட கருத்து : உண்ணுதற்குத் தண்ணீரும் கூட அகப்படாத கொடிய பஞ்ச காலத்தில் பாண்டியனின் சேனைக்கு அமுதூட்டி அன்னத்தியாகி என்று புகழ் பெற்ற வேலன் என்பவனது முளசை நகரும் கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம்.

மாசிவிழாப் பூசவிழா வைகாசித் திருநாண்மண் டபங்கடாமும்

பூசைபடி தினமாறு படிமாலை திருவிளக்கும் புரிந்தெந்நாளும்

தேசமது புகழ்ந்திடவே யேவைவளம் பதியன்னத் தியாகராசர்

நேசமுடன் பணிமலைவா ழுமைபாகர் தமைவணங்கி நிலைநின்றாரே

என்ற திருச் – திருப்பணிமாலைப் பாடலும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

    இந்த அன்னத்தியாகியின் மரபில் வந்த ஒருவன் அடங்காத ஒரு குதிரையின் மீது ஏறி அதை அடக்கிய ஆற்றலைக் கண்டு வியந்த பாண்டிய மன்னன் பெருத்த வெகுமதியையும் அதிகாரத்தையும் கொடுத்தான் என்ற வரலாறும் உள்ளது.

    அன்னத்தியாக பட்டன் என்னும் ஒரு புலவர் குடும்பத்தார் இன்றும்  வாழ்ந்து வருவது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம்.

     சின்னச் சின்ன சிறப்பான செய்திகளை இன்று நாம் மறந்து விட்டோம்.

இப்படிப்பட்ட பாடல்கள் நமக்கு உத்வேகம் ஊட்டும் என்பதில் ஐயமில்லை.

***

Leave a comment

Leave a comment