
Sri ranjani K writing
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 4 May 2019
British Summer Time uploaded in London – 12-17
Post No. 6342
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
நாட்டு நடப்பு
ஆசிரியருக்குக் கடிதங்கள்! – 1
ச.நாகராஜன்
பத்திரிகையை எடுத்தவுடன் நான் படிக்கும் முதல் பகுதி ஆசிரியருக்குக் கடிதங்கள் தான்!
அதில் தான் நாட்டு நடப்பைப் பற்றிய சரியான கணிப்பு இருக்கும்; பல தரப்பட்ட கருத்துக்கள் தரப்பட்டிருக்கும்.
பழைய காலத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் ‘ஹிந்து’ – The Hindu – நிஜ ஹிந்துவாக இருந்த காலத்தில் தவறாமல் அதைப் படிப்பது எனது வழக்கம்.
குன்னூர் நாராயணசாமி ஐயர் என்பவர் ஒரு விவாதத்தைத் தொடங்குவார் – சரியான விஷயம் பற்றித் தான். அவ்வளவு தான், உடனே அலை அலையாகக் கடிதங்கள் வரும். அவருக்கு பதில், ஆதரவு எல்லாம் வரும். ஒரு செட் ஆஃப் பீப்பிள் (Set of people) -தான்.
அதாவது, ‘அவர் சமிக்ஞை காண்பிப்பார், தொடர்ந்து அலைகள் எழும்பி கரை புரண்டோடும்’ என்பது போல இருக்கும்.
ஆனால் அந்தக் கடிதங்கள் ஏராளமான உண்மைகளைத் தரும்.
படிப்பதும் ஆனந்தம்; பகிர்வதும் ஆனந்தம்.
ஆசிரியராகப் பார்த்து ஒரு ‘நல்ல நாளில்” இத்துடன் இந்த விவாதம் முடிவடைகிறது என்று போடுவார்.
அடுத்த குன்னூர் நாராயணசாமி ஐயரின் கடிதத்திற்காகக் காத்திருப்பேன்.
ஆனால் இப்போதெல்லாம் அது போலக் காண முடிவதில்லை!
*
எனது எழுத்துக்களுக்கு வரும் விமரிசனங்கள் பலதரப்பட்டவை.
உதாரணத்திற்கு சிலவற்றைச் சொல்கிறேன்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் திருச்சி அகில இந்திய் வானொலி நிலையம் எனது நாடகங்கள் சிலவற்றை ஒலி பரப்பியது.
புரட்சிவீரன் பகத் சிங் என்ற நாடகத்தை எழுதி அனுப்பினேன்.
அதை அனுப்பியதைத் தொடர்ந்து அலுவலகத்தில் என்னை இலங்கைக்கு அனுப்பினார்கள்.
ஒரு வாரம் அங்கு இருந்து விட்டுத் திரும்புவதாகத் திட்டம். ஆனால் அங்கு ஜனவரி மாதம் சென்றவன் அக்டோபர் முடிய இருக்க வேண்டியதாயிற்று.
ஆல் இந்தியா ரேடியோவில் பல சட்ட திட்டங்கள் உண்டு. அதன்படி இலங்கையில் இருந்த எனது நாடகத்தை அவர்களால் ஒலிபரப்ப முடியவில்லை. (காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட என்னால் முடியவில்லை)
ஒரு வழியாக நான் இந்தியா திரும்பியவுடன் நாடகம் ஒலிபரப்பானது.
அடுத்த வாரம் புரோகிராம் எக்ஸிகியூடிவ் திரு தெய்வசிகாமணி எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

ரத்னம் என்ற நேயரின் கடிதம் அது.
அதில் நான் கூறிய படி பகத்சிங்கின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் இல்லை என்றும் அவை தவறு என்றும் எழுதி இருந்தார் அவர்.
தூக்கிவாரிப்போட்டது எனக்கு.
எல்லா ஆதாரங்களையும் புத்தகங்களின் சகிதம் எடுத்துக் கொண்டு திருச்சிக்குப் புறப்பட்டேன்.
ஒரு எளிய மத்திய தர வர்க்கத்தினரின் சிறிய வீடுகள் அடங்கிய ஒரு பகுதி. மரம் ஒன்றின் அடியில் ஒரு கயிற்றுக் கட்டில். அதில் வயதானவர் ஒருவர் படுத்திருந்தார். அவர் தான் ரத்னம்.
அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது கடிதத்தைக் காண்பித்து, “எனது நாடகத்தில் ..” என்று ஆரம்பித்தேன்.
அவர் திடுக்கிட்டார். “ஐயா! இதற்காகவா மதுரையிலிருந்து வந்தீர்கள். சும்மா நினைவிலிருந்து எழுதியது அது. ஆதாரம் காண்பிக்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் எழுதினால் அது சரியாகத் தான் இருக்கும்” என்று சொல்லி விவாதத்திற்கு ஆரம்பத்திலேயே சமாதி கட்டி விட்டார்.
எனக்குச் சப்பென்று போயிற்று. வானொலி நிலையம் சென்றேன்; நடந்ததைச் சொன்னேன்.
தெய்வசிகாமணி சிரித்தார். நீங்கள் இப்படி வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று சொன்னவர், “சரி, வந்ததும் நல்லதாகப் போச்சு, ஆர் எம் வீரப்பன் சொன்னதைப் படித்தீர்களா?” என்று கேட்டார்.
எம் ஜி ஆர் அரசில் அறநிலையப் பொறுப்பு போன்றவற்றை வகித்தவர் அவர். காந்திஜியின் முக்கிய வாழ்க்கைச் சம்பவங்கள் தென்னாட்டிலேயே நிகழ்ந்தன என்றும் அந்தச் சம்பவங்கள் பிரதானமாக எடுத்துச் சொல்லப்படவில்லை என்றும் அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் அவர்.
காந்திஜி வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு நாடகம் அனுப்புங்களேன் என்றார் அவர்.
இரு நாட்கள் தான் அவகாசம். வீடு வந்தவன் அனைத்து நூல்களையும் அலசி ஆராய்ந்து வருவார் காந்திஜி என்ற தொடர் நாடகத்தை எழுதி அனுப்பினேன்.
நடனு என்பவர் காந்திஜி பாத்திரத்திற்குக் குரல் கொடுத்திருந்தார்.
அருமையான குரல் – காந்திஜியே பேசுவது போல!
நாடகம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.
ஒரு விமரிசனக் கடிதத்திற்கு பதில் சொல்லப் போய் நான் பெற்றது நல்ல பெயரை!
*
இஸ்ரேலிருந்து ஒரு மின்னஞ்சல்.
இயற்கையில் எண் கணித ரகசியங்கள் அமைந்திருப்பது (Nature’s Numbers By Ian Stewart) பற்றிய ஒரு அருமையா புத்தகத்தைப் பற்றி ஒரு மதிப்புரை எழுதி இருந்தேன் – www.ezinearticles.com இல்!
அது பற்றி ஏராளமான கேள்விகள். விடாது பதில் அனுப்பினேன்.
ஆனால் கேள்விகள் ஆழ்ந்த ஞானத்தைச் சுட்டிக் காட்டியது.
அந்தப் பெண்மணியிடம், “ நீங்கள் யார்? உண்மையைச் சொல்லுங்கள், எனது விவரங்களை விட அதிகம் அறிந்தவர் நீங்கள்” என்று ஒரு மெயிலை அனுப்பினேன்.
உண்மை வெளி வந்தது. அந்தப் பெண்ணின் தந்தை இஸ்ரேலின் பிரபல விஞ்ஞானி. அவர் கேட்ட கேள்விகளை அந்தப் பெண் அனுப்பி இருந்தார்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று விஞ்ஞானிக்கு என் வணக்கங்களைக் கூறி மெயிலில் விடை பெற்றேன்.
*
ஐன்ஸ்டீனும் கீதையும் பற்றிய எனது கட்டுரையை அதே www.ezinearticles.com இல் படித்த ஒரு பேரறிஞர் ஐன்ஸ்டீன் கீதையைப் பற்றிக் கூறியதற்கான ஆதாரம் – Source – என்ன என்று கேட்டு மெயில் அனுப்பி இருந்தார்.
தலை சுற்றியது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னால் படித்த கட்டுரை தான் ஆதாரம். அதைத் தேட ஆரம்பித்தேன்.
நல்ல வேளை, அதை எழுதியவர் மதுரையில் இருந்தார். அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் பெயரைச் சொன்ன போது அவர், “நான் அவனில்லை. இப்போது சுவாமிஜி ஆகி விட்டேன்” என்றார். அவருக்கு எனது பணிவான நமஸ்காரத்தைச் சொல்லி விஷயத்தைக் கேட்டேன்.
அவரோ, “ஐன்ஸ்டீன் கீதையைப் பற்றிக் கூறியதையும் குப்தா என்பவர் பெயரைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததும் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் Hindu பத்திரிகையில் அப்போது வந்த ஒரு கட்டுரை தான்” என்று கூறினார்.
அதை அப்படியே இஸ்ரேலுக்கு அனுப்பினேன். அவரோ ‘இதற்காக நான் இஸ்ரேலில் ஐன்ஸ்டீன் பற்றிய அனைத்து ஆவணங்களையும் படித்துத் தேடிக் கொண்டிருக்கிறேன்’ என்றார்.
இது பற்றி இணையதளத்தில் நிறைய கட்டுரைகள் வெளியானதென்னவோ உண்மை தான்!
பொதுவாக அனைத்துக் கட்டுரைகளுக்கான ஆதாரங்களையும் பத்திரமாகச் சேமித்து வைத்திருப்பவன் நான்! சில சமயம் ஆதாரத்திற்கும் ஒரு ஆதாரத்தைச் சுட்டிக் காண்பித்து ஆதி மூலத்திற்கே போக வேண்டி இருக்கிறது.
*
நஞ்சப்பா அவர்கள் எனது கட்டுரைகளை படித்து விட்டு எழுதும் விமரிசனங்கள் எனது ஒரிஜினல் கட்டுரைகளை விட அதிக விஷயங்களைத் தருவதை நேயர்கள் அறிந்திருப்பீர்கள்.
திரு பரமசிவனோ நன்று, அருமை என ஒற்றை வாக்கியத்தில் கருத்தைச் சொல்லி விடுவார். (சாண்டில்யனின் “ஒற்றைச் சொல்லை அவன் உதிர்த்தான்” என்பது உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பல நாவல்களில் அவரது கதாநாயக, நாயகிகள் ஒற்றைச் சொல்லை உதிர்ப்பர்; அதற்கு மஹிமை அதிகம்!)
சரி, நீங்கள் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் ஒன்றைச் சொல்லுங்களேன் என்று கேட்கிறீர்களா. அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.
***
தொடரும்

writing is good. Bride writing Exam. in Bikaneer.
kps710
/ May 4, 201904 of May, 2019 2130hrs.Indian time.
Very ha toread such information.
Awaiting to read yr nextmail/subramanian/Mumbai.