3 D மாஜிக் வீடுகள்! (Post No.6351)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 6 May 2019


British Summer Time uploaded in London – 14-18

Post No. 6351

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சென்னையிலிருந்து வெளியாகும் கோகுலம் கதிர் 2019 மே இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

3 D மாஜிக் வீ டுகள்!

ச.நாகராஜன்

பாண்டவர்களுக்காக மயன் நிர்மாணித்த அரண்மனை ஒரு மாயாஜால அரண்மனை என்று மஹாபாரதம் வாயிலாக அறிகிறோம். காண்டவ வனத்தை எரித்த போது மயன் பாண்டவர்களுக்குச் சேவை செய்ய முன் வர கிருஷ்ணரின் வழிகாட்டுதலில் அற்புதமான ஒரு அரண்மனையை மயன் அமைத்தான். நீர் இருக்கிறது என்று மெதுவாக நடந்தால் அங்கு நீர் இருக்காது. வெறும் தரை என்று நினைத்து நடந்தால் அது ஒரு குளமாக இருக்கும். தொப்பலாக நனைய வேண்டியது தான்.

இந்த மஹாபாரத மாஜிக் வீ டு இப்போது சாமான்யருக்கும் சாத்தியமாகி வருகிறது. ஆம்,அறிவியல் செய்யும் அற்புதம் இது.

    வீடுகளில் தரைகளில் பதிக்கும் செராமிக் டைல்ஸ் பற்றி அனைவரும் அறிவோம். பீங்கானால் செய்யப்படும் இந்தத் தரை பதிகல் தரையை வழுவழுப்பாக வைத்திருக்கும். நீர் விட்டுக் கழுவி தரையைச் சுத்தமாக்குவதை இது சுலபமாக ஆக்கும். பார்வைக்கோ அழகு; பார்ப்பவர்க்கோ வியப்பு.

      இந்த தரை பதிகல்களில் இப்போது ஒரு மாஜிக் நுழைந்திருக்கிறது. அது தான் 3 D  தரை பதிகல்கள்.

     நீங்கள் நினைத்தபடி வடிவமைக்கக் கூடிய இந்த பதிகல்களில் உங்களின் ஆர்வத்திற்குத் தக வடிவமைப்பு அமையும்.

விளையாட்டில் ஆர்வம் என்றால் அதற்கென ஒரு வடிவமைப்பு. Landscape எனப்படும் இயற்கை நிலக்காட்சியில் தான் உங்கள் ஆர்வம் என்றால் அதற்குத் தக ஒரு டிசைன்! ஆக மனதிற்குத் தக அமையும் பதிகல்கள் வீட்டிற்குள் நுழைவோரை அயர வைக்கும்.

         இந்தப் பதிகல்கள் கம்ப்யூட்டர் மூலமாக வடிவமைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சித்திரத்தை சீரான இணைப்புத் தொகுதியாக மாற்றி அதைக் குறிப்பிட்ட அளவிற்குள் ஒவ்வொரு தொகுதியிலும் அமைத்து இவை உருவாக்கப்படுகின்றன.

இதில் தான் முப்பரிமாண விந்தைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. அதாவது நீளம் மற்றும் அகலம் என்ற இரு பரிமாணங்களுடன் ஆழம் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் வாழ்க்கையில் நாம் காணும் உயிர்ச் சித்திரங்கள் போலவே வீட்டின் தரையிலும் சுவரிலும் தோற்றங்கள் அமைகின்றன.

     சமையலறை, ஒதுங்குமிடம், வரவேற்பறை, படுக்கை அறை என வீடு முழுவதும் மனதிற்கு ஏற்ற ரம்யமான அழகான காட்சிகளை வாழ்நாள் முழுவதும் பார்க்கும் போது மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை தோன்றவே தோன்றாது.

      காட்சிகள் நம்முடன் பேசும். கற்களின் ஸ்டைல் நம்மை உயர்த்தும்.

    இந்த வடிவமைப்பு நெகிழ்வானதும் கூட; அதாவது இஷ்டத்திற்குத் தக மாற்றிக் கொள்ளக் கூடியவை. இவை பலவகையிலும் கிடைக்கக் கூடியவை.

    எந்த ஒரு நிலைக்கும் தக மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடியவை. துல்லியமானவையும் கூட.

   ஆக இவ்வளவு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த டைல்ஸ் இன்று எல்லோருடைய வீட்டிலும் அரசோச்ச ஆரம்பித்து விட்டதில் வியப்பே இல்லை.

   இதன் விலையும் கூட நடுத்தர வர்க்கத்தினருக்கு உகந்த விலையாக அமைகிறது. சதுர அடிக்கு சுமார் 250 ரூபாயில் அற்புதமான காட்சி அமைப்புகள் கிடைக்கின்றன.

நீடித்து உழைக்கும் இவற்றிற்கு இந்த விலை சரிதான் என்பதை காலம் உணர்த்தும்.

     ஆங்கிலத்தில் மேலே கூறிய அனைத்தையும் சுருக்கமாகச் சொல்லி விட முடியும் : Open, Optimized for streaming and rendering, Designed for 3D, Interactive, Styleable, Adaptable, Flexible, Heterogeneous, Precise, Temporal

    இவற்றின் இன்னொரு சிறப்பு நமக்குக் கிடைக்கக் கூடிய வண்ணங்கள் தாம். எப்படிப்பட்ட வண்ணக் கலவையையும் இதில் உருவாக்கிக் காட்ட முடியும்.

கணினியில் என்னென்ன வித்தைகள் முடியுமோ அத்தனை வித்தைகளும் 3 D பதிகல்களில் அடக்கம்.

    பதிகல்களின் வரலாறு எகிப்திய நாகரிகத்தில் ஆரம்பிக்கிறது. அழகானவை, வழுவழுப்பானவை என்பதோடு ராக்கெட்டுகளிலும் கூட இந்தப் பதிகல்களே உபயோகப்படுத்தப் படுகின்றன. இவை நீடித்து உழைக்கும் அளவு வலுவானவையும் கூட.

     ஆகவே தான் காலம் காலமாக இருந்து வந்த சிமெண்ட் தரைக்குப் பதிலாக இவை புழக்கத்திற்கு வந்தன.

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக காலத்தின் தேவைக்கேற்ப இப்போது 3D  தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர இந்த பதிகல்கள் ஒவ்வொரு வீட்டையும் மாஜிக் வீடாக மாற்றி வருகின்றன.

இதைப் பற்றிப் படிப்பதை விட இவற்றின் படங்களைப் பார்க்கலாம். அல்லது நேரில் ஒரு வீட்டிற்குச் சென்று பார்க்கலாம் – அப்போது தான் இதன் அருமை தெரியும்.

என்ன புறப்பட்டு விட்டீர்களா, 3 D டைல்ஸ் பார்க்க?!

***

Leave a comment

Leave a comment