பாரதியார் பற்றிய நூல்கள் – 58 – (2) (Post No.6391)

Written by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 15 May 2019
British Summer Time uploaded in London –  15-
42

Post No. 6391

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 58 – (2)

சிவ. மாதவன் : பாரதியார் கவிதைகளிள் அணிநலம்

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் கவிதைகளில் 803 உவமைகள் இடம் பெற்றுள்ளதாக நூலாசிரியர் சிவ.மாதவன் தெரிவிக்கிறார்.

இதில் 533 உவமைகள் உவம உருபு பெற்றுள்ளன. 270 உவமைகளில் உவம உருபு தொக்கி வந்துள்ளது.

உருபு தொக்கி நிற்கும் உவமை :-

இதற்கு எடுத்துக்காட்டாக,

‘மதுரத் தேமொழி மங்கையர்’

‘நண்ணுமுக வடிவு காணில் – அந்த

நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்’

‘கோலக் குயிலோசை – உனது

குரலினிமையடீ’

என்பனவற்றைச் சுட்டிக் காட்டலாம்.

எடுத்துக்காட்டு உவமையுடன் வினாவை இணைத்து பாரதி பாடிய பாடலின் ஒரு பகுதி இது:

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்

மின்மினி கொள்வாரோ?

கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின்

கைகட்டிப் பிழைப்பாரோ?

இல்பொருளுவமைக்கு ஒரு எடுத்துக் காட்டு இதோ:

குன்று குதிப்பதுபோல் – துரியோதனன்

கொட்டிக் குதித்தாடுவான்.

இல்லாத ஒன்றை உவமையாக்கை உரைப்பது இல் பொருள் உவமை. மலை குதிப்பது போல துரியோதனன் குதித்து ஆடுவான் என்பது அருமையான இல்பொருளுவமை.

பாரதியாரின் பாடல்களில் உருவக அணியும் ஏராளமாக உள்ளது.

21 வகை உருவகங்களில் பாரதியாரின் பாடல்களில் ஐந்து வகை உருவகங்களைக் காண முடிகிறது.

ஆகிய என்ற சொல் இல்லாமல் வரும் தொகை உருவகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ:

‘தொல்லைதரும் அகப்பேய்’

‘காமப்பிசாசைக் – குதிக்

கால்கொண்டடித்து விழுத்திடலாகும்’

‘நல்ல னெந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்’

இம்மூன்றிலும் அகப்பேய், காமப்பிசாசு, துயர்க்கடல் என்பன தொகை உருவகங்களாகும்.

இன்னும் வஞ்சப்புகழ்ச்சி அணி, பெருமை அணி, ஐயவணி, உடனிகழ்ச்சியணி, முரணனி, பொருள்முரண், தன்மேம்பாட்டுரையணி, சுவையணி ஆகிய அணிகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டப்படும் பாரதியாரின் கவிதைகளைப் பார்த்தால் பாரதியாரை ஒரு புதிய பரிமாணத்தில் பார்த்து ஆஹா என்று வியக்க முடிகிறது.

பாரதியாரின் சொல்லாட்சி தனித்துவம் வாய்ந்த ஒன்று. உள்ளம், விழி, நிலவு, அமுதூற்று, வீசி, அடா, அடீ போன்ற சொற்களைப் பாரதியார் நயம்படக் கையாண்டிருப்பது வியப்பூட்டும் ஒன்று.

ஒரு பாடல் முழுதும் குறியீடாக அமையின் அது முழுநிலைக் குறியீடு எனப்படும். இந்த வகையில் பாரதியாரின் அக்கினிக்குஞ்சு மற்றும் விடுதலை ஆகிய இருபாடல்கள் முழுநிலைக் குறியீடு அமைந்த பாடல்களாக உள்ளன.

பாரதியாரின் அற்புதமான கவிதைகளில் உவமைகள் உணர்த்தும் செய்திகள் பல.

ஒவ்வொரு சொல்லையும் அவர் கையாண்ட விதத்தின் அழகே அழகு.

தீ – படரும் செந்தீப் பாய்ந்திடுமோர் விழியுடையாள் (பராசக்தியின் கண்களைப் பற்றிப் பாடுகையில் இப்படிக் கூறுகிறார்)

விண் : வானக் கடல், வானமாங் கடல், வானக் குளம், நீலப் பொய்கை ஆகியவற்றை நோக்கலாம்.

மேகம் : விநாயகரைப் போற்றிப் பாடியது – வரங்கள் பொழியு முகிலே ; கண்ணனைப் போற்றிப் பாடியது – துங்க முற்ற துணை முகிலே”

மின்னல் : திரௌபதியின் கண் வீசும் ஒளி – மின்செய்கதிர்

நிலவு : பொங்கிவரும் புது நிலவு, நிலவூறித் ததும்பும் விழி

சிங்கம் – நரி தந்திடு ஊனுணாச் சிங்கமே என வாழ்தல் சிறப்பு

உலோகம் (பொன்) – பொன் போல் குரலும்

  பொன்னை நிகர்த்த குரலும்

பொன்னங்குழலின் புதிய ஒலி தனிலே

மேலே தரும் செய்திகளோடு, இப்படியே மரம், பயிர், புல், கரும்பு, விழல்,மலர்,குன்றம், உணவுப் பொருள்கள் ஆகியவற்றிற்கான கவிதைகளை சிவ.மாதவன் அழகுற எடுத்துக் காட்டுகிறார்.

இன்னும் தேச விடுதலை, பெண் விடுதலை, ஆன்ம விடுதலை பற்றிய பாடல்களில் பாரதியாரின் பலவிதமான உவமைகளைக் கண்டு களிப்படையலாம்.

தன் நூலில் எடுத்தாண்ட பிற நூல்களின் குறிப்பாக சுமார் 610 குறிப்புகளை இந்த நூலாசிரியர் தருவதன் மூலமே அவரது ஆராய்ச்சியின் ஆழம் தெரிய வருகிறது.

துணை நூற்பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களையும், முப்பதுக்கும் மேற்பட ஆங்கில நூல்கள் மற்றும் கட்டுரைகளின் பட்டியலையும் காண்கிறோம்.

இத்துடன் அருமையான ஆறு இணைப்புகள் நூலின் இறுதியில் உள்ளன:

  1. வடமொழி அணியிலக்கண நூல்கள்
  2. தமிழ் அணியிலக்கண நூல்கள்
  3. பாரதியார் கவிதைகளில் உவமை அகராதி
  4. பாரதியார் கவிதைகளில் இடம் பெற்றுள்ள உவம உருபுகள்
  5. பாரதியார் கவிதைகளில் உருவக அகராதி
  6. பாரதியின் சில புதுமைச் சொற் சேர்க்கைகள்

மேலே கண்டவற்றுள் 3,4,5,6 ஆகிய பகுதிகளை நன்கு ஆய்ந்து ஓர்ந்து உணர்ந்தால் நம் கண் முன்னே புதிய பாரதியார் தோன்றுவார்.

இந்த புதிய பாரதியாரை நம் கண் முன்னே காண வைக்கும் சிறப்பான ஆராய்ச்சி நூலாக இந்த நூல் திகழ்கிறது.

மீண்டும் நமது பாராட்டுதல்களை சிவ.மாதவனுக்கு அளிக்கிறோம்.

இந்த நூல் பாரதி ஆர்வலர்களுக்கு ஒரு இன்றியமையாத நூல் என்பதை மீண்டும் கூறி இதை வாங்குமாறு பரிந்துரை செய்கிறோம்.

****

Leave a comment

Leave a comment