உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 2 (Post No.6424)

Written by S NAGARAJAN


swami_48@yahoo.com


Date: 22 May 2019


British Summer Time uploaded in London – 6-16 am

Post No. 6424

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

16-5-2019 தேதியிட்ட பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு எட்டாம்) கட்டுரை – அத்தியாயம் 424

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 2

ச.நாகராஜன்

அதிசயப் பெண்மணி நினா குலாஜினா

அதீத உளவியல் ஆற்றல் பெற்ற அதிசயமான ஆண், பெண் பட்டியலில் நினா குலாஜினாவின் (Nina Kulagina) பெயர் தனி இடம் பெறுகிறது.ரஷியப் பெண்மணியான நினா (பிறப்பு 30-7-1926 மறைவு ஏப்ரல் 1990) அதி மானுட ஆற்றலைக் காட்டி விஞ்ஞானிகளை வியக்க வைத்தவர்.

    Psyckokinetic (PK) ஆற்றலில் அவர் வல்லவர் என்பது நிரூபிக்கப்பட, ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவரது அதீத உளவியல் ஆற்றல் உலகில் பிரபலமானது.

      மேஜை மேலிருக்கும் ஒரு பொருளைத் தொடாமலேயே நகர வைக்கும் சக்தி கொண்டவர் அவர் என்பதை நேரடியாகப் பலரும் பார்த்து வியந்தனர்.

ரஷியாவில் இரண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உள்ளிட்ட நாற்பது விஞ்ஞானிகள் குலாஜினாவின் சக்தியைச் சோதனை செய்து பார்த்தனர்.

லெனின்கிராட் லாபரட்டரி ஒன்றில் 1970ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி அவர் மீது விஞ்ஞானிகளால் பல சோதனைகள் நடத்தப்பட்டன.

     எதையும் தொடாமலேயே பார்வையினால அவர் பொருள்களை நகர்த்துவது பற்றிய சோதனையால் விஞ்ஞானிகள் வியந்தனர்.

உலோகங்களினால் ஆன பொருள்களையும், உலோகம் அல்லாத பொருள்களையும் அவர் நகர்த்திக் காட்டினார். பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்டவை இவை. காந்தசக்தி கொண்ட பொருள்கள், காந்தசக்தி அற்ற பொருள்கள் என எல்லாவற்றையும் அவரால் நகர்த்த முடிந்தது!

இவற்றின் இடை 380 கிராம் அளவில் இருந்தன.

     இந்த அபூர்வ ஆற்றல் உயிர்களில் உள்ள தசை, திசு மற்றும் அங்கங்களின் மீதும் செலுத்தப்பட முடியுமா என்று பார்க்க அவர்கள் மிகுந்த ஆவல் கொண்டனர்.

சோதனைகளை முன்னின்று நடத்தியவர் பிரபல ரஷிய விஞ்ஞானியான செர்ஜியெவ் ( Gennady Sergeyev).

    ஒரு தவளையின் இதயம் எடுக்கப்பட்டு உடல் இயக்கவியல் கரைசல் (Physiological solution) ஒன்றில் பத்திரமாக வைக்கப்பட்டது. நினா இருந்த இடத்திலிருந்து தவளையின் இதயம் சுமார் ஒன்றரை மீட்டர் தூரத்தில் இருந்தது.இதயத்துடன் எலக்ட்ரோடுகள் இணைக்கப்பட்டன – சோதனை அனைத்தையும் துல்லியமாக ரிகார்ட் செய்வதற்காக!

   இந்த மாதிரி நிலைகளில் தவளையின் இதயம் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை இயங்கும். அரிதான சில கேஸ்களில் 90 நிமிடம் இது இயங்கலாம்.

இதய இயக்கம் நின்றவுடன் அதை எலக்ட்ரோ ஸ்டிமுலேஷன் (Electrostimulation) மூலம் மீண்டும் இயங்க வைக்க முடியும்.

நினா தனது சக்தியை தவளையின் இதயம் மீது செலுத்திய 40 விநாடிகளில் அதன் இயக்கம் முற்றிலுமாக நின்றது. மீண்டும் எலக்ட்ரோ ஸ்டிமுலேஷன் (Electrostimulation) மூலம் அதை இயக்க முயன்ற போது அது இயங்கவில்லை!

“நாங்கள் இதயத்தைச் சோதனை செய்த போது அது வெடித்துச் சிறு சிறு துகள்களாக ஆகி இருந்தது. அந்த ஆற்றலின் வேகம் அப்படிப்பட்ட தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தது” என்று கூறி செர்ஜியெவ் வியந்தார்.

    நினாவின் இன்னொரு சக்தியையும் விஞ்ஞானிகள் சோதித்தனர்.

அவர் தன் தீவிர பார்வையை ஒருவர் கையின் மீது செலுத்தியபோது அது முதலில் சற்று சூடானது, பிறகு தோல் இன்னும் அதிக உஷ்ணத்தை அடைந்தது. பின்னர் தோல் எரிந்து தீப்புண் பட்டது போல் ஆனது. ஐந்து நாட்கள் வரை அந்தப் புண்ணின் காயம் தென்பட்டது.

   நினா தன் கையின் மீது பார்வையைச் செலுத்த அவரது தோல் சிவப்பானது. பின்னர் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கழித்த பின்னர் அவர் அதை தன் சிகிச்சை தரும் ஆற்றலின் மூலம் ஆறச் செய்த போது அது சாதாரண நிலைக்கு மீண்டது. தனது கைவிரல்களால் அவர் பல வண்ணங்களையும் உணர்ந்து அவற்றை விவரித்தார்.

இது போன்ற ஏராளமான சோதனைகளை லாபரட்டரி கட்டுப்பாடுகளில் அவர் நிகழ்த்திக் காட்டி விஞ்ஞானிகளை அயர வைத்தார்.

ஐஸ் மேன்

நெதர்லாந்தைச் சேர்ந்த விம் ஹாஃப் (Wim Hof – பிறப்பு 20-4-1959) வெறும் காலுடன் தொடர்ந்து பனிக்கட்டியின் மீது நடந்து காட்டும் ஒரு அதிசய மனிதர். அதி வேக இதயத் துடிப்பும் அதிக அட்ரினலின் சுரப்புமே அவரது இந்த ஆற்றலுக்குக் காரணம் என அவரைச் சோதித்த விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர்.

மார்ச் 16ஆம் தேதி 2000-இல் அவர் ஐஸுக்கு அடியில் நீந்தி கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் படைத்தார், 2007 ஜனவரி 26ஆம் தேதி பனியில் 2 மணி 16 நிமிடம் 34 விநாடிகள் வெறும் காலுடன் ஐஸ் மீது நடந்து உலக ரிகார்டை ஏற்படுத்தினார். முழு உடலையும் ஐஸில் மூழ்கடித்து நீண்ட நேரம் ஐஸில் இருந்து 16 முறை ரிகார்டை ஏற்படுத்தினார்.

 அவரது இந்த அதிசய ஆற்றல் உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சில விநாடிகள் கூட எவரும் ஐஸ் கட்டி மீது தன் முழு உடலையும் பட்டவாறு இருக்க முடியாது. ஆனால் இந்த அதிசய மனிதரோ ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் ஐஸுடன் உடலை ஒட்டி இருந்து அனைவரையும் அசத்துகிறார்.

இவரை உலக மக்கள் ஐஸ் மேன் என்று அழைப்பது பொருத்தம் தான்.

இன்னும் சில அதிசய ஆற்றல் படைத்த வல்லுநர்களை அடுத்துப் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிஸன் மின் பல்பைக் கண்டுபிடிக்க முயன்ற போது நடத்திய சோதனைகள் அனைவரும் அறிந்த ஒன்று. சுமார் ஆயிரம் முறைகள் சோதனைகளைத் திருப்பித் திருப்பி நடத்தி கடைசியில் அவர் மின்சார பல்பைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றார். அவரது உதவியாளர்கள் அனைவரும் இந்த வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

எடிஸன் தனது ஆபீஸ் பையனைக் கூப்பிட்டு அதை சோதனை செய்யுமாறு கூறினார். மிக்க பயத்துடனும் நடுக்கத்துடனும் அதைக் கையில் ஏந்திச் சென்ற அவன் தவறுதலாக அந்த பல்பைக் கீழே போட அது உடைந்தது.

எடிஸன் இதனால் கோபம் கொண்டு தன்னை வேலையை விட்டு நீக்கி விடுவார் என்று பயந்தான் அவன்.

எடிஸன் இன்னொரு பல்பைச் செய்தார். திருப்பி அதே ஆபீஸ் பாயைக் (Office Boy) கூப்பிட்டு அவன் கையில் புதிய பல்பைத் தந்து அதை சோதித்துப் பார்க்குமாறு கூறினார்.

எடிஸனின் உதவியாளர்கள்  எதற்காக அதே பையனிடம் பல்பைத் தந்து விஷப்பரிட்சை செய்ய வேண்டும் என்று வியந்தனர். எடிஸனிடமே அதைக் கேட்டனர். அந்தப் பையன் திருப்பி அதைக் கீழே போட்டு விட்டால் என்ன செய்வது என்பதே அவர்களின் கேள்வி.

எடிஸன் பதில் கூறினார் இப்படி: “ புதிய பல்பை 24 மணி நேரத்தில் நான் செய்து விட்டேன். ஒருவேளை அவன் இந்த பல்பையும் கீழே போட்டு உடைத்து விட்டால் இன்னொரு பல்பைச் செய்ய எனக்கு இன்னும் 24 மணி நேரம் தான் ஆகும். ஆனால் இதே வேலையை அவனிடம் நான் கொடுக்கா விட்டால் அவனுக்குத் தன் மீது இருக்கும் நம்பிக்கையே போய்விடும். அந்தத் தன்னம்பிக்கையை அவன் பெறவே முடியாமல் போய்விடும். அப்படி அவன் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அதே வேலையை அவனிடம் கொடுத்தேன். இந்த முறை அவன் சோதனையை முடித்து விட்டால் ஆயுளுக்கும் அவன் தன்னம்பிக்கை குறைவு படாது”

அனைவரும் எடிஸனின் இந்த பதிலைக் கேட்டு அவரைப் பாராட்டினர்.

***

Leave a comment

Leave a comment