
WRITTEN by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 3 AUGUST 2019
British Summer Time uploaded in London –8-40 am
Post No. 6720
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 2-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட இரண்டாம் உரை இங்கு தரப்படுகிறது.
பழையதிலிருந்து கற்போம்; உயர்வோம்!
ஒரு அதிசயமான செய்தியை நமது பாரத தேசத்தின் அனைத்துக் கிராமங்களும் உணர்த்துகின்றன.
வடக்கே உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து தெற்கே தமிழ்நாடு வரை மக்கள் நீரின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து அவற்றைச் சேமிக்கும் உயரிய பணியை மேற்கொண்டிருந்தனர் என்பது தான் அந்த அரிய செய்தி.
உத்தரகண்ட் மாநிலத்தில் நீர்நிலை சேமிப்புக்கான பெயர் நௌலா (Naula) ஆகும்.
மலைப்பகுதியிலிருந்து மழை காலத்தில் ஓடி வரும் நீரை வீணாகாமல் சேமித்து வைக்கவே இந்த நௌலாக்களை அவர்கள் உருவாக்கினர்.
சுமார் 64000 நௌலாக்கள் அங்கு உள்ளன என்பது பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி.
இவை நீரைத் தம்முள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. ஒரு குடும்பத்திற்கு சுமார் எட்டு மாத காலம் தேவையான நீரை இவை வழங்குகின்றன.
இந்த நௌலாக்களை நீர்க் கோவில் என்று அவர்கள் பக்தியுடன் குறிப்பிடுவதோடு இவற்றை இறைவனுக்கும் அர்ப்பணிக்கின்றனர்.
ஆனால் வருந்தத்தக்கச் செய்தி இவற்றில் பெரும்பாலானவை இன்று வறண்டு கிடக்கின்றன. ஆகவே இவற்றை புனருத்தாரணம் செய்யும் பணியைத் தன்னார்வத் தொண்டர்கள் இன்று அங்கு மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல ராஜஸ்தானில் ஒவ்வொரு வீட்டிலும் நீர்க்குழிகளை அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவற்றிற்கு டங்கா (Tanka) என்று பெயர்.
இந்த அமைப்புகள் நிலத்தடியில் உருவாக்கப்படுகின்றன. நீரானது பல்வேறு வடிகட்டிகளின் மூலமாக இந்த அமைப்புகளில் செலுத்தப்படுவதால் சுத்தமாக தண்ணீர் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் கிடைக்க வழி ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு பெரிய குளம் இருப்பதைக் காணலாம். ஆங்காங்கே ஏரிகள் அழகுற அமைக்கப்பட்டிருப்பதையும் இந்த நீர்நிலைகளை யாரும் அசுத்தப்படுத்தக் கூடாது என்று கிராம மக்கள் தமக்குத் தாமே சட்டம் இயற்றிக் கொண்டிருப்பதையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது.
இதே போக கேரளத்திலும் பல நூற்றாண்டுகளாக இயங்கி வரும் குட்டிக் கிணறுகள் உள்ளன.
அங்கு கேணிகளை மக்கள் இறைவன் கொடுத்த வரம் என்று கூறி அவற்றை நன்கு பராமரித்து வந்தனர்; வருகின்றனர்.
இந்தப் பழங்கால பழக்க வழக்கங்களை புதிய பார்வையோடு பார்த்து இன்றைய நவீன அறிவியல் நுட்பத்தையும் பயன்படுத்தி அவற்றைச் சுத்தப்படுத்தி, பராமரித்து வந்தால் நீரில்லாப் பற்றாக்குறை ஆங்காங்கே பெருமளவு தீர்ந்து விடும். அனைவரும் முயன்றால் முடியாதது ஒன்றில்லை!
***
