
WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 16 AUGUST 2019
British Summer Time uploaded in London – 7-46 am
Post No. 6885
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் 14-8-2019 அன்று காலை 10.45 மணிக்கு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியை நிகழ்நிலையில் எங்கிருந்தாலும் கேட்கலாம். கேட்க வேண்டுகிறேன்.
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 9-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஒன்பதாம் உரை இங்கு தரப்படுகிறது.
இல்லங்களில் ஆற்றல் திறனைக் கூட்ட வழிகள்!
ச.நாகராஜன்
ஒவ்வொரு இல்லத்தில் வசிப்பவரும் பணத்தைச் சேமிக்க உரிய வழிகளைக் காண விழைவது இயல்பு. சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், மின் கட்டண பில்லைக் குறைப்பதற்கான வழியைக் காண்பது அவற்றுள் ஒன்று.
ஆற்றல் திறனைக் கூட்டும் வழிகளைக் கையாளுவதன் மூலமாக பணத்தையும் சேமிக்க முடியும்; சுற்றுப்புறச் சூழலையும் நல்ல முறையில் காக்க முடியும். சில வழிகள் இதோ:
வீட்டில் கோடைகாலத்தில் ஏர் கண்டிஷனர் எனப்படும் குளிர் சாதனங்களைப் பயன்படுத்துவது இன்றியமையாத ஒரு பழக்கமாக இன்று ஆகி விட்டது. இதில் வெப்பநிலையில் ஒரு டிகிரி மாறுபாடு கூட பெருமளவில் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான வழியைக் காட்டும். தேவையான டெம்பரச்சரில் – வெப்பநிலையில் குளிர் சாதனங்களை அமைத்துக் கொள்வதோடு குறிப்பிட்ட நேரப் பயன்பாட்டையும் நிர்ணயித்துக் கொள்வது பெரும் பலனைத் தரும்.
மின்னணு சாதனங்களை அவைப் பயன்பாட்டில் இல்லாத போது ப்ளக்கிலிருந்து எடுத்து விடுதல் வேண்டும். இது ஆற்றலைச் சேமிக்க உள்ள வழிகளில் மிக முக்கியமானதாகும் ; எளிதானதும் கூட!
கணினிகள், போன்கள், டிஜிடல் கேமராக்கள் என இப்படிப்பட்ட மின்னணு சாதனங்களின் பட்டியல் நீளும். ஆனால் இவற்றை அவ்வப்பொழுது ப்ளக்கிலிருந்து எடுத்து விட்டால் மாத முடிவில் நம்ப முடியாத அளவு சேமிப்பு ஏற்படும். மின்னாற்றலும் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கண்கூடாகப் பார்த்து அறியலாம்.
மின்னணு சாதனங்களைப் புதிதாக வாங்கும் போது அவை ஆற்றலுக்கான தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதா என்பதைச் சரி பார்த்து வாங்க வேண்டும்.
வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் (Refrigerator) மிக அதிகமாக மின்னாற்றலைப் பயன்படுத்தும் ஒரு சாதனமாகும். இதன் கதவை அழுத்தமாக மூடுவது இன்றியமையாதது. அத்துடன் கதவில் பொருத்தப்பட்டிருக்கும் ரப்பர் சீலை (Rubber Seal) அடிக்கடி சரிபார்த்து மாற்ற வேண்டியிருப்பின் உடனே மாற்றி விட வேண்டும். ஃபிரிட்ஜின் வெப்பநிலையைச் சரியாக இருக்கும் படி அமைத்துக் கொள்வதோடு அவ்வப்பொழுது அதைச் சரி பார்க்கவும் வேண்டும்; அதைச் சுத்தப்படுத்தவும் வேண்டும்.
வாழ்க்கை முறையை எளிதாக மாற்றிக் கொள்வதன் மூலம் வாஷிங் மெஷின், டிஷ் வாஷர் உள்ளிட்ட ஏராளமான மின்னணு சாதனங்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.
***