


Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 14-48
Post No. 7091
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
12-10-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை
செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 2
ச.நாகராஜன்


எல்லையில்லா மஹிமை கொண்ட வைரத்தை ஆலயங்களிலிருந்து அருள் பாலிக்கும் தெய்வத்திடம் சமர்ப்பித்தனர் நமது முன்னோர்.
அரிய ரத்தினங்கள் அனைத்தும் தேவியை அலங்கரிக்க அருள் ஒளியுடன் ரத்னங்களிலிருந்து வரும் ஒளி அலைகளும் சேர்ந்து துதிப்போரின் மீது வெள்ளமெனப் பாய்ந்து சௌபாக்கியத்தைக் கொடுப்பது பாரம்பரியப் பழக்கமானது.
நீலத்திரைகடலின் ஓரத்தில் நின்று தவம் செய்யும் குமரியம்மனின் மூக்குத்தியின் ஒளி வெள்ளம் கடலில் தொலை தூரத்தில் வரும் கப்பல்களுக்கு வழி காட்டியாக அமைந்ததைச் சரித்திரம் கூறும்.
திருப்பதியில் குடி கொண்டிருக்கும் வெங்கடாசலபதிக்கு 1986ஆம் ஆண்டு வைர கிரீடம் சூட்டப்பட்டது. இந்த கிரீடம் சுமார் 26 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது. இதில் 28369 வைரங்கள் பதிக்கப்பட்டன.27 ½ அங்குலம் உயரமும் 13 அங்குல குறுக்களவும் கொண்டது இந்த கிரீடம். இதில் உள்ள வைரங்களின் அப்போதைய மதிப்பு 430 லட்சம் ரூபாய் ஆகும். பெல்ஜிய வைரங்களை ரஷியாவில் பட்டை தீட்டி இதில் பயன்படுத்தியுள்ளனர்.
இதை விட அதிகமாக 70000 வைரங்களுடன் 34 கிலோ எடை தங்கமுள்ள கிரீடம் ஒன்றை 2009 ஜூனில் ஒரு பக்தர் வெங்கடாஜலபதிக்குச் சமர்ப்பித்தார்.
ஒரு வைரத்திலிருந்து வீசும் ஒளிக்கதிர்களே எல்லையற்ற நன்மைகளை உருவாக்கும் என்று கூறும் போது இத்தனை ஆயிரம் வைரங்களின் கதிர்கள் ஏழுமலையானின் அருள் கதிர்களுடன் கலந்து பக்தர்களின் மீது படும் போது என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை எளிதில் ஊகிக்கலாம். இதே போல மதுரை மீனாட்சி அம்மனின் வைர கிரீடமும் எல்லையற்ற மகிமையைக் கொண்டுள்ள ஒன்று.
இந்தியாவிற்குச் சொந்தமான மஹிமை வாய்ந்த கோஹினூர் வைரம் இன்று இங்கிலாந்தில் உள்ளது.
இதன் கதையே தனி. ஒரு வைரம் என்னென்ன செய்யும் என்பதற்கு கோஹினூரின் வரலாறே ஒரு சிறந்த சான்று.
கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.

இது எவ்வளவு பழமையானது என்பது யாருக்கும் தெரியாது.
இதன் பழைய காலப் பெயர் ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி வரும் ஐதீகம்.
அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு என்று நம்பப்படுகிறது.
ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே தரும். பெண்கள் இதை அணியலாம், அவர்களுக்கு இது பெருமை தரும். இது தான் சாபம்.
இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு வெட்டப்பட்டு சுமார் 106 கிராமாகச் சுருங்கி விட்டது.
காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது ஆந்திர பிரதேசத்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும் உண்டு.
முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில் வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.
இதன் விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு மடங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா எழுதி வைத்துள்ளார்.
கோஹினூர் வைரம் பற்றி அஹ்மத் ஷா எழுதி வைத்த குறிப்பு தான் முதன் முதலாக ஆதார பூர்வமாக எழுதப்பட்ட குறிப்பாகும்.
அதில் அவர் கூறியிருப்பது :- ” சிம்மாசனத்தின் வெளிப்புற குடை, எனாமல் பூச்சில் ரத்தினங்கள் பதிப்பிக்கப்பட்டதாகவும் உட்புறத்தில் மாணிக்கக் கற்கள் மற்றும் செம்மணிக்கல் (கார்னெட்) மற்றும் இதர ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டதாகவும் இருந்தது. இதை மரகதத் தூண்கள் தாங்கி இருந்தன.
ஒவ்வொரு தூணின் மேலும் நெருக்கமாக இழைக்கப்பட்ட ரத்தினக் கற்களால் ஆன இரண்டு மயில்கள் இருந்தன. இப்படி அமைக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டு மயில்களுக்கு இடையிலும் மாணிக்கம், வைரம், மரகதம். முத்துக்கள் ஆகியவற்றினால் ஆன மரம் ஒன்று இருந்தது.
இந்த அழகிய மயிலாசனத்தில் அபார மதிப்புடைய இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தன. ஒன்று,தைமூர் மாணிக்கக் கல் – முகலாயர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று, ஏனெனில் அவர்கள் வண்ணம் சார்ந்த கற்களைப் பெரிதும் விரும்பினர் – இன்னொன்று கோஹினூர் வைரம்.
இந்த கோஹினூர் வைரம் சிம்மாசனத்தில் உச்சியில ரத்தினக்கற்களால் ஆன மயிலின் தலையில் பதிக்கப்பட்டிருந்தது.”
இப்படி ஒய்யாரமாக கம்பீரமாகப் பதிக்கப்பட்டிருந்த கோஹினூர் வைரம் உலகளாவிய அளவில் அனைவரது வியப்பையும் (இதர மன்னர்களின் பொறாமையையும்) சம்பாதித்தது.
இந்த மயில் சிம்மாசனம் செய்யப்பட்டு ஒரு நூற்றாண்டுக் காலம் வரை முகலாய வமிசத்தின் தலைமையை அது இந்தியாவிலும் அதற்கப்பால் உலகெங்கிலும் பறை சாற்றிக் கொண்டிருந்தது.
‘ஆசியாவே செல்வக் களஞ்சியம்; அதன் தலைமையகம் டில்லி’ என்று அனைவரும் மனமார ஒப்புக்கொண்டு புகழ்ந்தனர்.
ஆனால் அபரிமிதமான இந்தச் செல்வமே அனைவரின் கண்ணையும் உறுத்தியது. பார்த்தான், பெர்சியாவைச் சேர்ந்த நாதிர் ஷா.
இந்தச் செல்வத்தைக் கவர, அவன் 1739ஆம் ஆண்டு டில்லியின் மீது படையெடுத்தான். பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
நாதிர் ஷா கொள்ளையடித்த செல்வம் எவ்வளவு? அதைச் சுமந்து செல்ல மட்டும் 700 யானைகள். 4000 ஒட்டகங்கள், 12000 குதிரைகள் தேவையாய் இருந்தன. அதாவது இந்த மிருகங்கள் இழுப்பதற்குத் தேவைப்பட்டது; சுமப்பதற்கு அல்ல! அப்படியானல் இழுத்துச் செல்லப்பட்ட வண்டிகளுக்குள் இந்தியச் செல்வம் எவ்வளவு இருந்திருக்கும்!
இப்படிப்பட்ட கொள்ளையில் நடுநாயகமாக அமைந்தது ஷாஜஹானின் மயிலாசனம். அதில் ஒய்யாரமாக இருந்தது கோஹினூர் வைரம்.
நாதிர்ஷா, தான் கொள்ளையடித்ததில் தைமூர் ரூபியையும் கோஹினூர் வைரத்தையும் மயிலாசனத்திலிருந்து எடுத்துக் கொண்டான் – அவற்றைத் தன் கை கங்கணத்தில் அணிவதற்காக!
இந்தியாவை விட்டு இப்படியாகக் கொள்ளையடிக்கப்பட்ட்ட கோஹினூர் வைரம் சொந்த நாட்டை விட்டு ‘கொள்ளை யாத்திரை’ போக ஆரம்பித்தது.

இதை எப்படியாவது மீட்க வேண்டும் என்று இந்திய ராஜாக்கள் ஒரு புறம் சபதம் எடுத்தனர். நாதிர் ஷாவிடமிருந்து இதை அபகரிக்க வேண்டும் என்று அண்டை நாடுகளின் அரசர்கள் தங்கள் பங்கிற்குத் தங்கள் ஆசையை வளர்த்தனர்.
ஆப்கனிஸ்தான் என்று பின்னால் அழைக்கப்பட்ட நாட்டில் கோஹினூர் வைரம் சென்றவுடன் ஏராளமான ரத்த ஆறு ஓடியது பல போர்களின் வாயிலாக. ஒவ்வொரு ஆட்சியாளரின் கையிலிருந்தும் இன்னொருவருக்கு இது மாறியது.
இவர்கள் பற்றிய வரலாறு மிகவும் சோகமயமானது. ஒரு மன்னன் தன் சொந்த மகனின் கண்களையே குருடாக்கினான். இன்னொருவனோ பண ஆசைப் பைத்தியத்தால் தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு தங்கத்தை உருக்கித் தன் தலையில் தடவிக் கொண்டு ‘தஙக மொட்டையன்’ ஆனான்.
பல போர்களைப் பார்த்த கோஹினூர் வைரம் கடைசியாக இந்தியாவில் ரஞ்சித் சிங் அரசாண்ட போது அவரால் மீட்கப்பட்டது. 1813இல் கோஹினூர் வைரத்தை மீட்ட ரஞ்சித் சிங் அதை மிகவும் நேசித்தார். ஒருவழியாக இந்தியாவின் கௌரவம் மீட்கப்பட்டதாக அவர் கருதியதை மக்களும் ஆமோதித்தனர்.
1801ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஆட்சிக்கு வந்த ரஞ்சித் சிங் 1780ஆம் ஆண்டு பிறந்தவர்.
மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மாமன்னராக விளங்கிய அவர்.1839ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி மறைந்தார்.



மஹாராஜா இறந்த மறு நாள் அவரது மகன் முடி சூட்டப்பட்டார். அவரோ போதை மருந்துக்கு அடிமையானவர்.
ஆறு வருடங்கள் சரியான தலைமை இல்லாமல் பஞ்சாப் அல்லோல கல்லோலப் பட்டது.
வெள்ளைக்காரன் பஞ்சாபின் மீது கண்ணை நன்கு பதித்தான்.நடப்பதை தனக்குச் சாதகமாக எப்படி ஆக்குவது என்பதே ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஒரே நோக்கமாக ஆனது.
ரஞ்சித் சிங்கை அடுத்து அரியணை ஏறிய மூவரும் கொல்லப்பட்ட சூழ்நிலையில் ரஞ்சித் சிங்கின் இளைய ராணி ஜிண்டானின் குமாரரான துலிப் சிங் பட்டம் சூடினார். அப்போது அவருக்கு வயது 5 தான்.
தொடர்ந்து ஏற்பட்ட போர் ஒன்றில் சீக்கிய ராணுவம் பெருமளவு அழிந்தது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையை அடுத்து பிரிட்டிஷ் பிரதிநிதி அரசுப் பொறுப்பை ஏற்க மகாராஜா துலிப் சிங் (பெயருக்கு) அரசாட்சி செய்தார்.
1848ஆம் ஆண்டு நடந்த இன்னொரு போரில் கவர்னர் ஜெனரலான லார்ட் டல்ஹௌஸி, மகாராஜாவின் பெரும் பகுதிச் சொத்தை விற்று விட்டார்.
தனது பட்டங்கள், உரிமைகள், அதிகாரம் அனைத்தையும் படிப்படியாகத் துறக்குமாறு செய்யப்பட்டார் துலிப் சிங். சொத்தெல்லாம் பிரிட்டிஷார் வசம் போக வைக்கப்பட்டது.
அந்த சொத்தில் ஒன்று தான் கோஹினூர் வைரம்!

வஞ்சக சூழ்ச்சிக்கு இரையான துலிப் சிங் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினொன்று. பல இன்னல்களுக்கு ஆளான அவர் 1893ஆம் ஆண்டு பாரிஸில் இறந்தார்.
கோஹினூர் வைரத்தை டல்ஹௌசி பிரபு தன்னுடனேயே தனது இடுப்பு பெல்ட்டில் எப்போதும் வைத்திருந்தார். குளியலறை போகும் போது மட்டும் அதைத் தன் உதவியாளரிடம் கொடுப்பாராம்.
ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூர் வைரத்தை மஹாராணி விக்டோரியாவுக்கு அளிக்க முடிவு செய்ய, டல்ஹௌசி அதை இங்கிலாந்திற்கு அனுப்பினார்.
ராணியோ அதைப் பெற்று மனம் மிக மகிழ்ந்தார். அது அவரது மேலாடை அணிகலன்களில் ஒன்றாகச் (Brooch) சேர்ந்தது.
பின்னர் அதை ராஜ கிரீடத்தில் நடுவில் பதித்தார்.
விக்டோரியா மஹாராணியாரின் கணவரான பிரின்ஸ் ஆல்பர்ட் கோஹினூர் வைரத்தை மீண்டும் அறுத்து பாலிஷ் செய்தார். இப்போது வைரத்திலிருந்து அதிக பிரகாசமான ஒளி பிரதிபலித்து அனைவரையும் மயக்கியது
விக்டோரியாவின் மூத்த புதல்வரான ஏழாம் எட்வர்ட் மன்னரின் ராணியான க்வீன் அலெக்ஸாண்ட்ரியாவின் மகுடத்தில் அது பிரகாசித்தது. பின்னர் விக்டோரியாவின் பேரரான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவியான க்வீன் மேரியின் மகுடத்தில் 1937இல் அது ஒளி வீசியது. க்வீன் மேரி தான் இரண்டாம் எலிஸபத்தின் தாயார்.
2002ஆம் ஆண்டு க்வீன் மதர் இறக்கவே அந்த இறுதிச் சடங்கில் சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் வைக்கப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்தனர். கோஹினூரை அனைவரும் கடைசியாகப் பார்த்த தருணம் அது தான்!.
1947இல் இந்தியா சுதந்திரம் அடையவே எப்படியேனும் கோஹினூரை இந்தியாவிற்கு மீட்பது குறித்துப் பலரும் ஆலோசித்தனர்.
இந்தியாவிற்கு மட்டுமே உரிமையான இதை, இப்போது பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் தாலிபான் ஆகியவையும் உரிமை கொண்டாடுகின்றன.
2010இல் இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரான் கோஹினூர் இங்கிலாந்தில் தான் இருக்கும் என்றும் ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைப் பொருளைத் திருப்பிக் கொடுக்க இசைந்தால் எல்லாப் பொருள்களையும் இழந்து பிரிட்டிஷ் மியூசியமே காலி ஆகி விடும் என்று கூறினார்.
இருப்பினும் நீதி மன்றத்தில் வாத பிரதிவாதங்கள் அவ்வப்பொழுது நடந்து கொண்டே இருக்கின்றன.
வரலாற்று ரீதியாக கோஹினூரை ஆராய்ந்து ஆனந்த் மற்றும் டால்ரிம்பிள் ஆகியோர் எழுதிய “கோஹினூர்: தி ஹிஸ்டரி ஆஃப் தி வோர்ல்ட் மோஸ்ட் இன்ஃபேமஸ் டயமண்ட் (Koh-i-noor: The History of the World’s Most Infamous Diamond by Anand and Dalrymple) என்ற நூல் கோஹினூர் வைரத்தின் சரித்திரத்தைத் தந்துள்ளது.
ஒரு வைரத்தின் வரலாறே அதன் சாபத்தின் வாயிலாக இப்படி பல சாம்ராஜ்யங்களை ஆட்டி வைத்து, பல மன்னர்களுக்குத் துன்பங்களைத் தந்ததையும் பெண்மணிகளுக்குப் பெருமையைத் தந்ததையும் பார்க்கின்ற போது வைரத்தின் மகிமை நமக்கு நன்கு புலப்படுகிறது அல்லவா?
நமக்கென ஒரு வைரத்தைத் தேர்வு செய்வதில் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த உண்மை வரலாறு ஒரு சான்று.
வைரம் பற்றிய இன்னும் சில உண்மைகளை அடுத்துக் காண்போம்.
***



