நல்ல வாழ்க்கைக்குத் தேவையானது எது? (Pot No.7111)

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-05 am
Post No. 7111

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஹெல்த்கேர் (Health care Magazine) அக்டோபர் 2019 இதழில் வெளியான கட்டுரை 

புத்தகச் சுருக்கம்

நல்ல வாழ்க்கைக்குத் தேவையானது எது?

Program for Dynamic Health : (ப்ரோக்ராம் ஃபார் டைனமிக் ஹெல்த்) : எழுதியவர் : T.C.Fry

ச.நாகராஜன்

1

Natural Hygiene எனப்படும் இயற்கை சுகாதாரத்தை அறிமுகப்படுத்தியவர் டி.சி.    ஃப்ரை.

1926, ஜூலை மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவில் ஓக்லஹாமா, பென்னிங்டனில் பிறந்த அவருக்கு 1970இல் இயற்கை உணவு சார்ந்த வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. அதை ஆராயத் தொடங்கினார். ஏராளமான புத்தகங்களை எழுதினார். 1976இல் Health Sciences Institute ஒன்றையும் நிறுவினார்.தனது 69ஆம் வயதில் காலமானார்.

அவர் எழுதிய புத்தகங்களுள் ஒன்று “Program for Dynamic Health”.

 118 பக்கமே உள்ள இந்தச் சிறிய புத்தகம் ஆரோக்கியத்துடன் வாழ பல முக்கிய குறிப்புகளை அளிக்கிறது.

புத்தகத்தின் சில முக்கிய பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

2

ஒரு நல்ல வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத காரணிகள் 18.

அவையாவன : சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், சுத்தம், வெப்பம், தூக்கம், சத்துள்ள உணவு, உடல் பயிற்சி, ஓய்வும் இளைப்பாறுதலும்,சூரிய ஒளி, உணர்ச்சிகளில் நிதானம், இன்பமான சுற்றுப்புறச் சூழல், பாதுகாப்பான வாழ்வும் அதற்கான வழிமுறையும், தன்னான்மைத் திறம்,ஊக்கம் அல்லது தன்முனைப்பாற்றல்,  பயனுள்ள வேலையை உருவாக்கல்,உடைமை, இயற்கையான உள்ளுணர்ச்சிகளை வெளிப்படுத்தல், கலை, அழகுணர்ச்சிகளில் ஈடுபாடு ஆகியவை.

உபவாசமிருத்தல் : நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திட்டமிட்ட கட்டுப்பாடான உபவாசம் தேவை. குறிப்பிட்ட நேரம் மட்டும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பழ வகைகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைக்கப்பட்ட உணவு வகைகளைக் கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ளலாம். உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

உடல்பயிற்சியின் போது அனைத்து அங்கங்களையும் அதில் ஈடுபடுத்த வேண்டும்.

எப்போதும் நிமிர்ந்து உட்காருதல் நல்லது. நடக்கும் போது நிமிர்ந்த தலையுடன் நடத்தல் வேண்டும்.

களைத்துப் போயிருந்தால் சற்று ஓய்வெடுங்கள். ஓய்வெடுக்கும் போது படிக்காதீர்கள். டி.வி.பார்க்காதீர்கள்.

சீக்கிரம் தூங்கச் செல்லுங்கள். நல்ல காற்றோட்டமுள்ள, அமைதியான, இருட்டு அறையில் உகந்த சீதோஷ்ண நிலையில் தூங்குவது அவசியம்.

சந்தோஷமாக இருப்பதற்கு ஏதேனும் ஒன்றைச் செய்து கொண்டே இருங்கள்.

வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றைக் கொண்டு அதை அடைவதற்கான செயல்களில் இறங்குங்கள். நல்ல பிடித்தமான ஹாபி ஒன்றில் ஈடுபடுங்கள்.

டிக்‌ஷனரி ஆஃப் மேன்’ஸ் ஃபுட்ஸ் – டாக்டர் வில்லியம் எஸ்ஸர் (Dictionary of  Man’s Foods  by Dr William Esser) எழுதியதைப் படித்து சாப்பிடுவதற்குரிய உணவு வகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். (அதாவது Sweet Fruit, Sub Acid Fruit,  Acid Fruit, Melons, Proteins, Starches, Non Starchy Vegetables ஆகியவை எவை எவை என்பதைத் தெரிந்து கொண்டு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்)

அமிலம் மற்றும் ஸ்டார்ச் உணவு வகைகளைத் தனித் தனி நேரங்களில் (காலை, மதியம், இரவு சாப்பாடு போன்றவற்றில்) உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்ந்து சாப்பிட்டால் அஜீர்ணம் ஏற்படும்.

அதே போல புரோட்டீனையும் கார்போ ஹைட் ரேட்டையும் தனித் தனி நேரங்களில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இப்படி எதை எதை எப்போது சாப்பிட வேண்டும் என்ற பட்டியலின் படி சாப்பிட வேண்டும்.

உணவில் 80 % ஆல்கலைன் உணவைச் சேர்க்க வேண்டும்.

Bread – ப்ரெட்- என்பது ஹெல்த்கேர் உணர்வுள்ள ஒருவரின் உணவில் வரவே கூடாது.

சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு இன்ஆர்கானிக்! அதைச் சேர்க்கவே கூடாது.

உடலில் அதிகமான திரவச் சேர்க்கை உப்பினாலேயே ஏற்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

உங்களது நாடித்துடிப்பை சரிபார்க்கத் தவற வேண்டாம். மிகப் பெரும் விளையாட்டு வீரர்களின் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 30 முதல் 40 வரை தான் இருக்கிறது!

மருத்துவர்கள் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு சராசரியாக 72  இருக்கும்  எனக் கூறுகிறார்கள். ஆனால் இது நோய்வாய்ப்பட்டவர்களுக்கான ஒன்று!

ஓய்வாக இருக்கும் ஒருவரின் சராசரி நாடித் துடிப்பு இதோ:

வயதுக்கு வந்த ஒரு ஆண் : நிமிடத்திற்கு 40 முதல் 50 வரை

வயதுக்கு வந்த ஒரு பெண் : நிமிடத்திற்கு 46 முதல் 56 வரை

ஆண் குழந்தை :   நிமிடத்திற்கு 50 முதல் 60 வரை

பெண் குழந்தை :   நிமிடத்திற்கு 56 முதல் 66 வரை

தினசரி வேலைகள் 8 முதல் 12 வரை நாடித் துடிப்பை அதிகரிக்கலாம்.

 வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இருக்கும் ஒருவரின் சராசரி நாடித் துடிப்பு இதோ:

வயதுக்கு வந்த ஒரு ஆண் : நிமிடத்திற்கு 50 முதல் 60 வரை

வயதுக்கு வந்த ஒரு பெண் : நிமிடத்திற்கு 56 முதல் 66 வரை

ஆண் குழந்தை :   நிமிடத்திற்கு 60 முதல் 70 வரை

பெண் குழந்தை :   நிமிடத்திற்கு 66 முதல் 76 வரை

காப்பி என்பது பழக்கத்திற்கு நம்மை அடிமையாக்க வைக்கும் ஒரு ஊக்கி. நிகோடின் போலவே அதையும் விஷம் என்றே சொல்லலாம்.

ஜீனியில் ஊட்டச்சத்தே கிடையாது. அதில் கலோரி வேல்யூ தான் உண்டு. உடலில் ஏற்கனவே இருக்கும் ஊட்டச்சத்துக்களை அது

‘கொள்ளையடிக்கிறது’.

டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் அனைவரும் தலைவலிக்காக எடுத்துக் கொள்ளும் ஆஸ்பிரின் தனது கெமிக்கல் வினையால் நரம்புகளை செயலிழக்கச் செய்கிறது.

மருந்துகள் அனைத்துமே எந்த ஊட்டச்சத்தையும் உடலுக்கு வழங்குவது இல்லை. அவைகளுக்கு எந்தத் திசுவையும் உருவாக்கும் ‘அறிவு’ இல்லை.

இயற்கை சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்கு ஆரோக்கியம் மட்டும் உறுதியாவதில்லை, ஏராளமான மருத்துவச் செலவுகளும் மிச்சமாகிறது.

இதை அனுபவித்து உணர்ந்து பாருங்கள்!

3

கட்டுரை ஆசிரியரின் குறிப்பு :

மேலே கண்ட நூலை முழுவதுமாகப் படிப்பதால் உணவுத் திட்டம், உணவு வகைகள், உடலுக்குத் தீங்கு பயக்கும் உணவுகள் ஆகியவை நமக்கு நன்கு தெரிகிறது; தெளிவடைகிறோம்.

ஆனால் சமைக்காத உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், மருந்துகள் எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள் போன்ற ஆலோசனைகள் இந்தக் கால கட்டத்திற்கும் அவரவர் உடலமைப்பு, வியாதி ஆகியவற்றிற்கும் பொருந்துமா என்பது விளங்கவில்லை.

இந்த நூலின் ஆசிரியரின் யோசனைகளுக்குக் கடுமையான விமரிசனங்கள் எழுந்தாலும் கூட இந்த நூல் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி உள்ளதை எண்ணினாலேயே இது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது தெரியவரும்.

அன்பர்கள் இந்த நூலைப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம்; கடைப்பிடிக்கும் முன்பு தங்கள் குடும்ப மருத்துவரையும் நல்ல ஆலோசனைக்காக நாடி உணவு பற்றிய ஆலோசனைகளையும் பெறலாம்.

இயற்கை ஆரோக்கியம் பெற வாழ்த்துக்கள்!

***

Leave a comment

Leave a comment