
WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 10 NOVEMBER 2019
Time in London – 5-43 am
Post No. 7197
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
ஒலி என்று எடுத்துக் கொண்டால் ஒரு ஒலிக்கு ஒரு அதிர்வெண் அல்லது ஃப்ரீக்வென்ஸி தான் இருக்கிறது. ஒரு போர்க்கைத் தட்டி அதிலிருந்து ஒரு ஓசை எழுகிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு ஃபோர்க்கை அதே போலத் தட்டினால் அதே ஃப்ரீகவென்ஸியுடன் – அதிர்வெண்ணுடன் தான் ஒலி எழும்பும்.
இதை சுலபமாக அளக்க முடியும்.
நாம் ஒரு பாட்டைப் பாடும் போது அதில் ஒரு ஸ்வரத்தைக் கையாளும் போது நமக்குள் ஒரு நல்ல அனுபவம் ஏற்படுகிறது – மெய் சிலிர்க்கிறது,தலையை ஆட்டுகிறோம்! ஆஹா எனக் கத்துகிறோம். இசை நம்மிடம் ஏற்படுத்தும் உடனடி விளைவு இது!
திருடனைக் கண்டுபிடிக்கும் ஒரு புது விதமான எச்சரிக்கை மணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர் ‘தி இன்ஃபெர்னோ’ (The Inferno). அந்த எச்சரிக்கை மணி குறைந்த அதிர்வெண் உள்ள ஓசைகள் பலவற்றை எழுப்பும்.அதில் ஒன்று இன்னொன்றுடன் மோத பலவேறு ஓசைகள் எழும்பும்; அது உளவியல் ரீதியாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவிதமாகத் தலை சுற்றும்; வாந்தி எடுப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும். கவனசக்தியைச் சிதற அடித்து எதைச் செய்ய எண்ணுகிறோமோ அது கவனத்திலேயே இல்லாமல் போய்விடும். இந்த மணியின் ஓசையால் திருட வந்தவன் திகைத்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் மலைப்பான். அவனால் திருட முடியாது!
விஞ்ஞானிகள் ஒலி அலைகளைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளார்கள். அவற்றின் மூலமாக ஒலி வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுள்ளனர்.
வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வைத்து வளர்ப்பது ஒரு வித ஃபாஷன். வளர்ப்புப் பூனையைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சும் போது அது ஒரு வித மியாவ் ஓசையை எழுப்பும். அது வளர்ப்பவரின் மன இறுக்கத்தைத் தளர்த்துகிறதா? இதை ஆய்வு செய்து பார்த்து விடலாம் என விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
விஞ்ஞானியான எலிஸபத் வான் மக்கெந்தலர் (Elizabeth Von Muggenthaler) ஒரு படி முன்னே போய், அப்படி பூனை எழுப்பும் ஓசை அது இயல்பாக நோய் தீர்க்கும் ஒலி என்றும் அது எலும்புகளையும் உடலின் அங்கங்களையும் வலிமைப் படுத்தும் ஓசை என்றும் தெரிவித்தார்!
பூனையின் இந்த ஓசை சராசரியாக 27 முதல் 44 ஹெர்ட்ஸ் என்ற அளவில் இருக்கிறது.
இந்த அளவு ஓசை எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது; எலும்புகளின் அடர்த்தியை (density) அதிகரிக்கிறது; இதர அங்கங்களுக்கும் வலுவூட்டுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதே போல அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை (Ultra Sound treatment) மருத்துவ மனைகளிலும் சிகிச்சை நிலையங்களிலும் உடைந்த எலும்பை ஒட்ட வைப்பதற்கும் சீக்கிரமே அவை குணமடைவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.
அற்புதமான இசையை இசைத்தால் தாவரங்களும் அபரிமிதமாக வளர்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இசை விற்பன்னர் தான் இசை அமைக்கும் போது என்னென்ன ஸ்வரங்களைப் பயன்படுத்தினாரோ அதே ஸ்வரங்களைப் பயன்படுத்தினால் தான் அந்த நல்ல விளைவு ஏற்படுகிறது என்றும் வெவ்வேறு வகையில் ஓசைகளை எழுப்பும் போது அந்த நல்ல விளைவு ஏற்படுவதில்லை என்பதும் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதே போன்ற ஆய்வுகள் பாக்டீரியாக்களை வைத்தும் நடத்தப்பட்டன. ஒரு விதமான நல்ல அதிர்வெண்கள் மூலம் அவை பெருகுகின்றன என்பதும் இன்னொரு விதமான அதிர்வெண்ணில் அவை சாகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை வைத்துப் பார்த்தால், நமது முன்னோர்கள் சில ஒலிகளைத் திருப்பித் திருப்பி ஏன் கூறச் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த விதமாகத் திருப்பித் திருப்பிக் கூறுவது வியாதிகளைத் தீர்க்கிறது.
பறவைகளின் பாட்டொலி சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஒரு நல்ல பயனை விளைவிக்கிறது.
வசந்த காலம் வந்தால் பறவைகளின் உற்சாக ஒலி நம்மைப் பரவசப்படுத்துகிறது.
இந்த அற்புதமான் மெல்லிசை சுற்றி இருக்கும் தாவரங்களின் இலைகளை வளரச் செய்கிறது; மலர்களைப் பூக்க வைக்கிறது.
வசந்த காலத்தில் இது அவசியம். ஆனால் கோடைகாலத்தில் வளர்ந்து விட்ட நிலையில் மலர்களுக்கும் இலைகளுக்கும் இந்த இனிய ஓசை அவ்வளவாகத் தேவை இல்லை.
தாவரங்களில் ஏற்படும் இரசாயன மாற்றம் – அதாவது போட்டோசிந்தஸில் – (Photosynthesis) இரவில் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து உதய காலத்தில் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் செயல் பறவைகளின் இனிய ஒலிகளால் ஊக்கப்படுத்தப் படுகிறது.
இப்படி இனிய ஒலி எங்குமே ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியல் சோதனைகளாலும் நேரடி அனுபவங்களாலும் நாம் உணர்கிறோம்.
***
ஒலியின் ஆற்றல் தொடரும்
