

Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 20 NOVEMBER 2019
Time in London – 6-17 AM
Post No. 7237
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
ஸ்வாமி விவேகானந்தர் தனது வாழ்நாள் முழுவதும் புகழோங்கிய பாரதத்தின் முன்னாள் பெருமையையும் இந்நாள் சிறுமையையும் எண்ணி எண்ணி வருந்தினார்.
ஒரு முறை அவர், ‘எத்தனை நாள் தான் இப்படி வறுமையில் இந்தியா இருக்க முடியும்? அவள் மெலிதாகச் சுவாசித்துக் கொண்டிருப்பது ஒன்றால் மட்டுமே அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதை அறிய முடிகிறது” என்றார்.
வறுமை ஒழிந்த, ஆன்மீக சிகரத்தில் ஏறிய, அற்புத இந்தியாவை அவர் மக்கள் முன் உருவகப்படுத்தி வந்தார்.
இந்திய மக்கள் அனைவருக்காகவும் அவர் ஹிருதயம் உருகியது. அவர் ஹிருதயம் பூவைப் போன்று மென்மையானது.
ஸ்வாமி சதாசிவானந்தா அவரைப் பற்றிய தனது நினைவலைகளில் கூறும் இரு சம்பவங்களைப் பார்ப்போம்.
ஸ்வாமிஜி அபாரமான ஆளுமை உடையவர். அநீதியைக் கண்டால் பொங்கி எழுந்து தன் முழு வலிமையுடன் அதைத் தாக்கிப் பேசுவார். அந்த அநீதியை வேருடன் களைய வேண்டும் என ஆவேசப் படுவார்.
அதே சமயம் அவர் ஹிருதயம் மலரினும் மெல்லிது.
ஒரு முறை அவர் கூறினார்:” அப்போது தான் கறந்த பாலில் உள்ள குமிழிகளைத் தொடுவதால் உன் விரலில் காயம் ஏற்படுமா? நான் சொல்கிறேன், ஒரு வேளை இது சாத்தியமாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் ஸ்ரீ ராதையின் ஹிருதயம் இதை விட மென்மையானது!
அதே மென்மையான ஹிருதயம் தான் ஸ்வாமிஜியினுடையதும்!
இன்னொரு நாள் நடந்த சம்பவம் இது:
ஒரு நாள் காலை டார்ஜிலிங்கில் தனது காலை உணவை முடித்துக் கொண்ட ஸ்வாமிஜி சில பேருடன் இயற்கை அழகை ரஸித்தவாறே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் தன் மனக்கண்ணில் ஒரு வயதான பெண்மணி பெருஞ்சுமையைத் தனது முதுகில் சுமந்து செல்வதைக் கண்டார். அந்தச் சுமை விழ, அவர் அதை எடுக்க காயம் வேறு அவருக்கு ஏற்பட்டு விட்டது. அவருடன் கூடச் சென்றவர்களில் யாரும் இதைப் பார்க்கவே இல்லை. அவரது உதவியாளர்கள் இளைஞர்கள்; அனுபவம் இல்லாதவர்கள்; ஸ்வாமிஜியின் அபாரமான உயர்ந்த பிரபஞ்ச பிரக்ஞை நிலையை அறியாதவர்கள்.
ஸ்வாமிஜி தனது கண்களைத் வெகு தூரத்தில் இருந்த ஏதோ ஒன்றின் மீது தன் பார்வையைப் பதித்தார். அவரால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை.
அவர் முகம் வெளுத்தது. வலியால் அவர் கத்தினார்;” ஆ! இங்கே ரொம்ப வலிக்கிறதே! என்னால் இனிமேல் நடக்கவே முடியாது” என்று அவர் அலறினார்.
ஒருவர் கேட்டார்: “ஸ்வாமிஜி! எந்த இடத்தில் உங்களுக்கு வலிக்கிறது?”
ஸ்வாமிஜி, “ இதோ இந்த இடத்தில்! அந்தப் பெண் விழுவதை நீ பார்க்கவில்லையா?” என்றார்.
கேட்ட இளைஞருக்கு ஒன்றுமே புரியவில்லை -ஸ்வாமிஜி வலியால் துடிக்கிறார் என்பது மட்டும் அவருக்குத் தெரிந்தது. அவருக்கு மேல் கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசாமல் இருந்து விட்டார்.
காலம் செல்லச் செல்லத் தான் ஸ்வாமிஜியின் உண்மை நிலையை அவர்கள் அறிந்து கொண்டனர். மனிதனுக்கு மனிதன் ஒரு இரக்க சுபாவம் நிலவுகின்றது என்பதையும் பெரும் மகான்களுக்கோ தொலை தூரத்தில் இருந்தவர்களின் உணர்ச்சிகளையும் பார்க்கும் சக்தியும் அனுபவிக்கும் சக்தியும் இருக்கிறது என்பதையும் இந்தச் சம்பவத்தால் அவர்கள் பின்னால் புரிந்து கொண்டனர்.
மற்றவர் துன்பத்தைப் பார்க்கச் சகிக்காத மென்மையான ஹிருதயம் ஸ்வாமிஜியின் ஹிருதயம். அது மெழுகு போல உருகி விடும் அடுத்தவரின் துன்பத்தைப் பார்த்து!
அற்புதமான அப்படிப்பட்ட பெரும் ஸ்வாமிஜி தான் நம்முடன் சமீப காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்!
****


Nagulendran
/ November 20, 2019Thanks very useful