
picture by Lalgudi Veda
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 24 NOVEMBER 2019
Time in London – 7-39 am
Post No. 7254
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்

ஆண்டுதோறும் பல தலங்களிலும் திருவிழாக் காலத்தில் வேடுபறி என்று ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்குக் காரணம் என்ன?
சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறைப் படித்தால் அதற்கான காரணம் நன்கு விளங்கும்.
பரவையார் மீது காதல் கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். ஆகவே நிறையப் பொருள் சம்பாதிக்க விரும்பினார்.
கொடுங்கோளூருக்குச் சென்று அங்கு சேரமான் பெருமாள் நாயனார் கொடுத்த நிதிக்குவைகளைச் சுமந்து கொண்டு அடியவர்கள் முன் நடக்க சுந்தரர் திருமுருகன்பூண்டித் தலத்திற்கு வந்தார்.
திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவிநாசி-திருப்பூர் சாலையில் அவிநாசியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.
இங்குள்ள ஆலயம் முருகநாதேசுவரர் ஆலயமாகும்.
சுந்தரரிடமிருந்து தமிழ்ப்பாடல் பெற விரும்பிய முருகாவுடையார், சிவகணங்களை வேடுவர் உருவத்தில் அனுப்பி சுந்தரரிடமிருந்து வழிப்பறி செய்து வருமாறு தூண்ட அவர்கள் அவ்வாறே செய்தனர்.
இதனை அறிந்த நாயனார் முருகன்பூண்டி ஆலயத்தை அடைந்து ஒரு திருப்பதிகம் பாடி இறைவனின் அருளை வேண்டினார்.
சிவபிரான் பறித்த பொருளைத் திருப்பித் தருமாறு கட்டளையிட கோபுரவாயிலில் கணநாதர்கள் குழுமி பறித்த பொருளைத் திருப்பித் தந்தனர்.
ஒவ்வொரு தலத்திலும் திருவிழாக் காலத்தில் இந்த நிகழ்ச்சி தான் வேடுபறி என்ற பெயரில் இன்றளவும் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியை கொங்குமண்டல சதகம் தனது பதினைந்தாம் பாடலில் போற்றிப் புகழ்கிறது.
பாடல் :
கனத்த வடிக்கொண் முலையாள் பரவைதன் காதலினாற்
சொனத்தி லடிக்கொளும் பேராசைச் சுந்தரர் சொற்றமிழ்க்கா
அனத்தி னடையுடை யாள்பாகன் றென்முரு காபுரிசூழ்
வனத்தி லடித்துப் பறித்தது வுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : பரவையாரின் மீது கொண்ட அளவற்ற காதலினால் பொருளாசை கொண்ட சுந்தர மூர்த்தி நாயனாரிடம் பதிகம் கேட்க விரும்பிய திருமுருகன்பூண்டித் திருத்தலம் உறையும் எம்பெருமான், நாயனாரின் திருவடிகூட்டத்தார்கள் சுமந்து வந்த பொன்முடிப்புகளைப் பறித்துக் கொண்டதும் கொங்கு மண்டலமே என்பதாம்.
இந்த நிகழ்ச்சியை திரு அவிநாசிப் புராணம் இப்படிக் கூறுகிறது:
மூடியசெஞ் சடைவுடையீர் முருகவனம் பதியுடையீர்
கூடிவெகு மூர்க்கருடன் கொள்ளைகொண்ட பொருளல்ல
தேடுமலை வளநாடு புரந்தருளுச் சேரலர்கோன்
பாடுபெற வளித்தபொருள் பறிகொண்டீ ரெனப் பகர்ந்தார்
சுந்தரமூர்த்தி நாயனார் இத்திருத்தலத்தில் ஒரு பதிகம் பாடினார். அதில் ஒரு பதிகத்தின் முதல் பாடல் இது:
கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமைச் சொல்லித்
திடுகு மொட்டெனக்குத்திக் கூறைகொண்டு ஆறலைக்குமிடம்
முடுகுநாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கைதன்னொடும் எத்துக்கு இங்கிருந்திர் எம்பிரானீரே.
பிரசித்தி பெற்ற திருமுருகன்பூண்டித் தலத்தில் தான் துர்வாச மஹரிஷி கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டு வந்தார் என்பதும் ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம்.
***
